உபியில் அகிலேஷ் யாதவுக்கு ஷாக்.. கட்சி மாறி வாக்களித்த எம்எல்ஏக்கள்.. பாஜகவுக்கு கிடைத்த போனஸ் எம்பி
லக்னோ: உத்தர பிரதேசத்தில் இன்று நடைபெற்ற ராஜ்யசபா தேர்தலில் பாஜகவுக்கு 7 எம்பிக்களே கிடைக்கும் அளவுக்கு எம்.எல்.ஏக்கள் ஆதரவு இருந்த போதும், 8 வேட்பாளர்களை நிறுத்தியது. இந்த நிலையில், சமாஜ்வாடி கட்சி எம்பிக்கள் கட்சி மாறி வாக்களித்த காரணத்தால் பாஜக நிறுத்திய 8 வேட்பாளர்களும் வெற்றி பெற்றனர்.
ராஜ்யசபாவுக்கு பல்வேறு மாநிலங்களில் இருந்து காலியாகும் 56 இடங்களுக்கு தேர்தல் அறிவிக்கப்பட்டு இருந்தது. மொத்தமுள்ள 56 இடங்களில் 40 க்கும் மேற்பட்ட இடங்களில் அரசியல் கட்சிகள் நிறுத்திய வேட்பாளர்கள் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

உத்தரபிரதேசத்தில் காலியாகும் 10 இடங்களில் ஆளும் பாஜக மற்றும் சமாஜ்வாடி கட்சிகளின் எம் எல் ஏக்களின் அடிப்படையில் பாஜகவு 7 வேட்பாளர்களையும் சமாஜ்வாடி கட்சி 3 வேட்பாளர்களையும் போட்டியின்றி வெற்றி பெறச்செய்ய முடியும் என்ற நிலை இருந்தது. அதன்படி அகிலேஷ் யாதவ் மூன்று வேட்பாளர்களை அறிவித்தார். ஆனால், பாஜகவோ கூடுதால ஒரு வேட்பாளர் அதாவது 8 பேரை அறிவித்தது.
7 வேட்பாளரை வெற்றி பெற செய்யக்கூடிய அளவில் எம்எல்ஏக்கள் ஆதரவு இருந்தது. ஆனால், 8-வது வேட்பாளராக சஞ்சய் சேத் என்ற தொழிலதிபர் நிறுத்தப்பட்டு உள்ளார். இவர் சமாஜ்வாடியில் இருந்து கடந்த 2019-ம் ஆண்டு பாஜகவில் இணைந்தார். இதனால், இவருக்கு சமாஜ்வாடி எம் எல் ஏக்கள் சிலரும் கிராஸ் வோட் என்று சொல்லப்படும் கட்சி மாறி வாக்களிக்க வாய்ப்பு உள்ளதாக சொல்லப்பட்டது.
10 இடங்களுக்கு 11 பேர் போட்டியிடுவதால் மாநிலத்தில் இன்று தேர்தல் நடைபெற்றது. மொத்தம் 403 உறுப்பினர் கொண்ட மாநில சட்டசபையில் ஆளும் பாஜகவுக்கு 252 எம்.எல்.ஏ.க்கள் உள்ளனர். பிற முக்கிய கட்சிகளான சமாஜ்வாடி 108, காங்கிரஸ் 2, அப்னாதளம் 13, நிஷாத் கட்சி 6, ராஷ்ட்ரீய லோக்தளம் 9, பகுஜன் சமாஜ் 1 உறுப்பினர்களை கொண்டுள்ளன. காலை 9 மணி முதல் 4 மணி வரை எம் எல் ஏக்கள் வாக்களிக்க ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.
இதில் வாக்கு எண்ணிக்கை முடிவில் பாஜகவுக்கு கூடுதலாக ஒரு எம்பி கிடைத்தது. அதாவது பாஜகவுக்கு 8 எம்பிக்களும் சமாஜ்வாடிக்கு 2 எம்பிக்களும் கிடைத்தார்கள். சமாஜ்வாடி கட்சியை சேர்ந்த சில அதிருப்தி எம்.எல்.ஏக்கள் மற்றும் ராச்ட்ரிய லோக் தள் கட்சி எம்.எல்.ஏக்கள் ஆதரவு அளித்ததால் பாஜகவுக்கு போனஸாக ஒரு எம்பி கிடைத்தது. பாஜகவுக்கு 8 எம்பிக்கள் கிடைத்து இருப்பது இந்தியா கூட்டணி கட்சிகளுக்கு பெரும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது.
முன்னதாக அகிலேஷ் யாதவ் கட்சி நடத்திய கூட்டத்தில் பங்கேற்காமல் அவரது கட்சியை சேர்ந்த 8 எம்.எல்.ஏக்கள் புறக்கணித்தனர். இன்று காலை சமாஜ்வாடி கட்சியின் தலைமை கொறாடா தனது பதவியை ராஜினாமா செய்தார். இதனால் அடுத்தடுத்த டிராமாக்கள் டென்ஷன் என தேர்தல் சென்று கொண்டிருந்தது. இதில், சமாஜ்வாடி கட்சியை சேர்ந்த 7 எம்.எல்.ஏக்கள் கட்சி மாறி பாஜகவுக்கு வாக்களித்தனர். ஒரு எம்.எல்.ஏ போட்ட வாக்கு செல்லாது என அறிவிக்கப்பட்டது.












Click it and Unblock the Notifications