இது சனாதனத்தின் அடையாளம்.. பாஜக எப்படி உரிமை கொண்டாட முடியும்.. ராமர் கோவிலை புகழ்ந்த கமல்நாத்
போபால்: சனாதன தர்மத்தின் மிகப் பெரிய அடையாளம் அயோத்தி ராமர் கோவில். அந்த கோவில் என்பது நாட்டுக்கானது. இதை எப்படி ஒரு கட்சி (பாஜக) உரிமை கொண்டாட முடியும்'' என மத்திய பிரதேச மாநில முன்னாள் முதல்வரும், காங்கிரஸ் மூத்த தலைவர் கமல்நாத் தெரிவித்துள்ளார்.
மத்திய பிரதேசத்தில் பாஜக ஆட்சி நடக்கிறது. முதல்வராக சிவ்ராஜ் சிங் சவுகான் உள்ளார். அடுத்த மாதம் 17 ம் தேதி மத்திய பிரதேசத்தில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் பதிவாகும் ஓட்டுகள் டிசம்பர் 3ம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது.

மத்திய பிரதேசத்தை பொறுத்தவரை பாஜக மற்றும் காங்கிரஸ் இடையே நேரடியாக போட்டி நிலவி வருகிறது. வரும் தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியை பிடிக்கும் முனைப்பில் பாஜக உள்ளது. அதேவேளையில் இழந்த ஆட்சியை பிடிக்க காங்கிரஸ் கட்சி முனைப்பு காட்டி வருகிறது.
இதனால் தற்போது காங்கிரஸ் கட்சி தீவிர பிரசாரம் மேற்கொண்டு வருகிறது. காங்கிரஸ் மூத்த தலைவரும், மத்திய பிரதேச முதல்வர் வேட்பாளருமான கமல்நாத், சிந்த்வாரா தொகுதியில் போட்டியிடுகிறார். இந்நிலையில் தான் அங்கு அவர் பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது அவரிடம் அயோத்தி ராமர் கோவில் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அவர் கூறியதாவது:
‛‛அயோத்தி ராமர் கோவில் பாஜகவுக்கு சொந்தம் என்பது போல அக்கட்சியினர் பேசுகிறார்கள். ராமர் கோவில் நமது நாட்டுக்கான கோவில். அது சனாதன தர்மத்தின் மிகப்பெரிய அடையாளம். ராமர் கோவில் கட்டப்பட்டதில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். ஆனால் அந்த கோவில் என்பது ஒரு கட்சிக்கு உரியதாக இருக்க முடியுமா?'' என்றார்.
அயோத்தியில் பிரமாண்டமாக ரூ.1000 கோடியில் கட்டப்பட்டு வரும் ராமர் கோவிலின் பிரதிஷ்டை விழா வரும் ஜனவரி 22ம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான அழைப்பிதழ் என்பது பிரதமர் நரேந்திர மோடிக்கு முறைப்படி வழங்கப்பட்டது. இந்த விழாவில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்று கோவிலை பிரதிஷ்டை செய்ய உள்ளார்.
கோவில் திறப்பு விழாவில் 136 சனாதன பாரம்பரியங்களைச் சேர்ந்த 25,000 இந்து மதத் தலைவர்களை அழைக்க அறக்கட்டளை திட்டமிட்டுள்ளது. இதுதவிர, 10,000 சிறப்பு விருந்தினர்களும் பங்கேற்பார்கள் என்றும் அறக்கட்டளை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் காங்கிரஸ் மூத்த தலைவர் சல்மான் குர்ஷித்தும் அயோத்தி ராமர் கோவில் விவகாரத்தில் பாஜகவை சாடியுள்ளார்.
இதுதொடர்பாக அவர், ‛‛ஒரே ஒரு கட்சிக்கு மட்டுமே அழைப்பிதழ் வழங்கப்படுமா? யார் செல்வார்கள் யார் செல்ல மாட்டார்கள் என்பது குறித்து நான் கருத்து தெரிவிக்க முடியாது. ஆனால், தற்போது கடவுளை ஒரே ஒரு கட்சிக்குள் சுருக்கிவிடுவது சரியா? என்ற கேள்வி எழுகிறது. அழைப்பு என்பது அனைவருக்கும் இருக்க வேண்டும். அந்த விழா என்பது ஒரு கட்சிக்கானதாக இருக்கக் கூடாது. ஒவ்வொருவரும் அழைக்கப்பட வேண்டும்'' என சாடியுள்ளார்.












Click it and Unblock the Notifications