உண்மையை ஒரு நாளும் வீழ்த்த முடியாது: ட்விட்டரில் சச்சின் பைலட் பதிவு!!
ஜெய்ப்பூர்: ''உண்மையை ஒரு நாளும் வீழ்த்த முடியாது'' என்று ராஜஸ்தான் காங்கிரஸ் தலைவர் மற்றும் துணைத்தலைவர் பொறுப்பில் இருந்து கழற்றி விடப்பட்டுள்ள சச்சின் பைலட் தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். இவரது ஆதரவாளரான முகேஷ் பாக்கர் காங்கிரஸ் இளைஞரணி தலைவர் பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.
Recommended Video
ராஜஸ்தான் மாநிலத்தில் காங்கிரஸ் கட்சிக்குள் முதல்வர் அசோக் கெலாட் மற்றும் துணை முதல்வராக இருந்த சச்சின் பைலட் இருவருக்கும் இடையே பெரிய அளவில் விரிசல் ஏற்பட்டு இன்று கட்சியில் இருந்து சச்சின் வெளியேற்றப்பட்டுள்ளார். கட்சி மேலிடம் செய்த சமரசங்களை சச்சின் ஏற்றுக் கொள்ளவில்லை.

தொடர்ந்து நடந்த இரண்டு ராஜஸ்தான் காங்கிரஸ் சட்டமன்ற கூட்டங்களில் கலந்து கொள்ளவில்லை என்ற காரணத்தை கூறி கட்சியில் இருந்து சச்சினும் அவரது ஆதரவாளர்களும் ஓரம் கட்டப்பட்டுள்ளனர். அதேசமயம், பாஜகவிலும் இணையப் போவதில்லை என்று சச்சின் பைலட் தெரிவித்துள்ளார். அவருக்கு பாஜக தலைவர்கள் அழைப்பு விடுத்துள்ளனர். இதை ஏற்று அவர் பாஜகவில் இணைவாரா அல்லது வெளியில் இருந்து பாஜக அவருக்கு ஆதரவு வழங்குமா என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.

சச்சின் பைலட்டுடன் சேர்ந்து அவரது ஆதரவாளர்கள் விஷ்வேந்திரா சிங், ரமேஷ் மீனா இருவரும் அமைச்சர் பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர். இதுகுறித்த காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் ரந்தீப் சிங் சுர்ஜிவாலா கூறுகையில், ''பாஜக சதி வலையில் சச்சின் பைலட் சிக்கியுள்ளார், ராஜஸ்தானில் காங்கிரஸ் அரசு கவிழ்வதற்கு துணை போய் இருக்கிறார். மாநிலத்தில் கட்சித் தலைவராக, துணை முதல்வராக இருந்தார். பாஜகவின் வலைக்குள் விழுந்து விட்டார் என்பது சோகமான சம்பவம். சிறிய வயதில் அவருக்கு அனைத்து பொறுப்புகளையும் தலைவர் சோனியா காந்தி வழங்கி இருந்தார். ஆனால், அவர்கள் பாஜக சதிக்கு வீழ்ந்து விட்டனர்'' என்று தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில் கடந்த 10ஆம் தேதிக்குப் பின்னர் இன்றுதான் சச்சின் தனது டிவிட்டரில் பதிவிட்டார். அந்தப் பதிவில் ''உண்மையை ஒரு நாளும் வீழ்த்த முடியாது' என்று குறிப்பிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications