லோக்சபாவில் காங்கிரஸுக்கு எதிர்க்கட்சி அந்தஸ்து கோரி தாக்கல் செய்த மனு சுப்ரீம் கோர்ட்டில் டிஸ்மிஸ்!
டெல்லி: லோக்சபாவில் காங்கிரஸ் கட்சிக்கு எதிர்க்கட்சி அந்தஸ்து வழங்கக் கோரி தாக்கல் செய்த பொதுநலன் மனுவை உச்சநீதிமன்றம் இன்று தள்ளுபடி செய்துவிட்டது.
லோக்சபா தேர்தலில் காங்கிரஸ் கட்சி 44 இடங்களைத்தான் கைப்பற்ற முடிந்தது. ஆனால் 543 உறுப்பினர்களைக் கொண்ட லோக்சபாவில் 10% எம்.பிக்களைப் பெற்ற கட்சிக்குத்தான் எதிக்கட்சி அந்தஸ்து கிடைக்கும்.

இதனால் காங்கிரஸுக்கு எதிர்க்கட்சி வழங்க முடியாது என்று சபாநாயகர் சுமித்ரா மகாஜன் மறுத்துவிட்டார். இதனையே அட்டர்னி ஜெனரலும் கூறியிருந்தார்.
இந்நிலையில் காங்கிரஸுக்கு எதிர்க்கட்சி அந்தஸ்து வழங்கக் கோரி எம்.எல்.சர்மா என்பவர் உச்சநீதிமன்றத்தில் பொதுநலன் வழக்கு ஒன்றை தொடர்ந்திருந்தார். இந்த பொதுநலன் மனுவை உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ஆர்.எம்.லோதா தலைமையிலான பெஞ்ச் விசாரித்தது.
அப்போது, எம்.எல். சர்மா தமது மனுவை முறையாக தாக்கல் செய்யவில்லை. யாருக்கு எதிர்க்கட்சி அந்தஸ்து வழங்க வேண்டும் என்பது சபாநாயகரின் அதிகாரத்துக்குட்பட்டது. அதில் நீதிமன்றம் தலையிட முடியாது என்று கூறி அம்மனுவை நீதிபதிகள் தள்ளுபடி செய்தனர்.












Click it and Unblock the Notifications