சொத்துக் குவிப்பு வழக்கு: பவானிசிங்கை நீக்க கோரிய அன்பழகன் மனு - சுப்ரீம் கோர்ட்டில் நாளை விசாரணை
டெல்லி: ஜெயலலிதா மீதான சொத்துக்குவிப்பு வழக்கில் அரசு வழக்கறிஞர் பவானிசிங்கை நீக்க கோரிய க.அன்பழகன் மனு மீது வெள்ளியன்று விசாரணை நடைபெறும் என உச்சநீதிமன்றம் அறிவித்துள்ளது.
வருமானத்துக்கு அதிகமாக சொத்துக் குவித்த வழக்கில், தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவிற்கு 4 ஆண்டு தண்டனை விதித்தது பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
இதை எதிர்த்து ஜெயலலிதா, சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் தொடர்ந்த மேல்முறையீட்டு மனு விசாரணை கர்நாடக உயர்நீதிமன்ற சிறப்பு பெஞ்ச் நீதிபதி குமாரசாமி முன்னிலையில் நடைபெற்று வருகிறது.
ஜெயலலிதா சொத்துக்குவிப்பு வழக்கில், அரசு தரப்பு வழக்கறிஞர் பவானிசிங்கை நீக்கிவிட்டு, புதிய வழக்கறிஞரை நியமிக்க வேண்டும் என, தி.மு.க.,வின் க. அன்பழகன் பெங்களூரு உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.
தனிநீதிமன்றத்தில் அரசு தரப்பில் ஆஜரான பவானிசிங், மேல்முறையீட்டு மனு மீதான விசாரணையிலும் ஆஜராகிவருகிறார். அவர் குற்றவாளிகள் தரப்புக்கு ஆதரவாக நடந்துகொள்வதாக குற்றம்சாட்டியிருந்தார். மேலும், பவானிசிங்கை அரசு வழக்கறிஞராக நியமிக்கும் ஆணையை கர்நாடக அரசுக்கு பதிலாக தமிழக லஞ்ச ஒழிப்பு துறை அளித்துள்ளது செல்லாது என்றும், பவானிசிங்கை இவ்வழக்கில் இருந்து நீக்க கோரியும் தனது மனுவில் குறிப்பிட்டிருந்தார்.

மனு தள்ளுபடி
இம்மனுவை விசாரித்த கர்நாடகா உயர்நீதிமன்றம் கடந்த 11ஆம் தேதி அன்பழகனின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.இதையடுத்து, உச்சநீதிமன்றத்தில் அன்பழகன் மேல் முறையீடு செய்துள்ளார்.

விசாரணையை நிறுத்திவைக்க
இந்த வழக்கு முடிவு தெரியும் வரை, ஜெயலலிதா வழக்கு மீதான மேல்முறையீட்டு மனு விசாரணையை தற்காலிகமாக நிறுத்தி வைக்க வேண்டும் எனவும் அன்பழகன் கோரி உள்ளார்.

உச்சநீதிமன்றத்தில் விசாரணை
ஜெயலலிதா மீதான சொத்து குவிப்பு வழக்கில் அரசு தரப்பு வழக்கறிஞர் பவானி சிங் ஆஜராவதை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில், திமுக பொதுச்செயலாளர் க.அன்பழகன் தாக்கல் செய்த மனு இன்று (வியாழக்கிழமை) விசாரணைக்கு வந்தது.

அன்பழகன் தரப்பு வாதம்
அப்போது, பவானி சிங் ஆஜராக தடை விதிக்குமாறும், பவானிசிங்கை நீக்கிவிட்டு புதிய அரசு வழக்கறிஞரை நியமிக்க வேண்டும் என்றும், புதிய அரசு வழக்கறிஞர் நியமிக்கும்வரை விசாரணைக்கு தடை விதிக்க வேண்டும் என்றும் க.அன்பழகன் வழக்கறிஞர் வாதிட்டார்.

வெள்ளிக்கிழமை விசாரணை
மேலும், கர்நாடக உயர்நீதிமன்றத்தில் ஜெயலலதா மீதான சொத்துக்குவிப்பு வழக்கின் மேல்முறையீட்டு மனு விசாரணையில் தம்மையும் ஒரு தரப்பாக சேர்க்க க.அன்பழகன் கோரிக்கை விடுத்தார். இந்த மனுவை தலைமை நீதிபதி எச்.எல்.தத்து தலைமையிலான அமர்வு விசாரித்தது. அப்போது, மனு மீதான விசாரணையை வெள்ளிக்கிழமைக்கு ஒத்திவைத்து நீதிபதி எச்.எல்.தத்து தலைமையிலான அமர்வு உத்தரவிட்டது.












Click it and Unblock the Notifications