தமிழகத்தில் மருத்துவ மாணவர் சேர்க்கையை உடனே தொடங்க வலியுறுத்தி சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு!
தமிழகத்தில் நீட் அடிப்படையில் மருத்துவ கலந்தாய்வை நடத்த உத்தரவிடக் கோரி உச்சநீதிமன்றத்தில் மாணவர்கள் சார்பில் வழக்கு தொடரப்பட்டது.
டெல்லி: நீட் அடிப்படையில் மருத்துவ கலந்தாய்வை தமிழக அரசு தொடங்க வேண்டும் என்று உத்தரவிடக் கோரி மாணவர்கள் சார்பில் வழக்கு தொடரப்பட்டது.
நாடு முழுவதும் தகுதி தேர்வு மூலம் மருத்துவ சேர்க்கை நடத்துவதற்கான நீட் தேர்வுக்கு பல்வேறு எதிர்ப்புகள் கிளம்பின. ஆனால் நீட் தேர்வு நடைபெற்றது. இந்நிலையில் நீட் தேர்விலிருந்து தமிழகத்துக்கு விலக்கு அளிக்க வேண்டும் என்று தமிழக அரசு மத்திய அரசிடம் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தது.

இதனிடையே தமிழக அரசு பாடத்திட்டத்தில் படித்த மாணவர்களுக்கு மருத்துவ சேர்க்கையில் 85 சதவீதம் இடஒதுக்கீடு வழங்கியதை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இந்த தீர்ப்பை எதிர்த்து, தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவும் தள்ளுபடி செய்யப்பட்டது. மேலும் 31-ஆம் தேதிக்குள் மாணவர் சேர்க்கை நடத்தி முடிக்கவும் உத்தரவிட்டது.
இந்நிலையில் சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன், தமிழகத்தில் ஓராண்டுக்கு நீட் தேர்விலிருந்து விலக்கு அளிக்க கோரும் அவசர சட்ட வரைவை தாக்கல் செய்தால் அதற்கு மத்திய அரசு ஒத்துழைப்பு அளிக்கும் என்றார். அதன்படி திங்கள்கிழமை டெல்லியில் உள்துறை அமைச்சகத்திடம் நீட் தேர்வில் இருந்து ஓராண்டுக்கு விலக்கு கோரும் தமிழக அரசின் அவசர சட்ட வரைவு சுகாதார துறை செயலாளர் ராதாகிருஷ்ணனால் தாக்கல் செய்யப்பட்டது.
ஆனால் இப்படி விலக்கு அளித்தால் நீட் தேர்வுக்காக தயாரான மாணவர்களின் நலன் கேள்விக்குறியாகிவிடும் என்று ஒரு தரப்பு எதிர்ப்பு தெரிவித்தது. இந்நிலையில் தமிழகத்தில் மருத்துவ மாணவர் சேர்க்கையை உடனே தொடங்க வலியுறுத்தி உச்சநீதிமன்றத்தில் இன்று மாணவர்கள் தரப்பில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த வழக்கை உச்சநீதிமன்றம் நாளை விசாரணைக்கு எடுத்துக் கொள்கிறது.












Click it and Unblock the Notifications