சொத்துக் குவிப்பு: வீரபாண்டி ஆறுமுகம் குடும்பத்துக்கு சுப்ரீம் கோர்ட் நோட்டீஸ்!
டெல்லி: மறைந்த முன்னாள் திமுக அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம் மீது தொடரப்பட்ட சொத்துக்குவிப்பு வழக்கில் அவரது குடும்பத்தினர் அனைவருக்கும் உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டுள்ளது.
கடந்த திமுக ஆட்சியின் போது வேளாண்மைத்துறை அமைச்சராக இருந்த வீரபாண்டி ஆறுமுகம், தனது குடும்பத்தினரோடு சேர்ந்து வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு வழக்கு தொடர்ந்தது.

இதனை எதிர்த்து வீரபாண்டி ஆறுமுகம், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், வீரபாண்டி ஆறுமுகம் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு எதிரான சொத்துக்குவிப்பு வழக்கை கடந்த 2001ஆம் ஆண்டு தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. இதற்கிடையே கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் வீரபாண்டி ஆறுமுகம் மரணம் அடைந்தார்.
இந்நிலையில், சென்னை உயர் நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், வீரபாண்டி ஆறுமுகத்தின் மனைவி நிர்மலா மற்றும் குடும்பத்தினருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டுள்ளது.












Click it and Unblock the Notifications