விஜயகாந்த் மீதான அவதூறு வழக்கு விசாரணைக்கு சுப்ரீம் கோர்ட் இடைக்கால தடை
டெல்லி: தேமுதிக தலைவர் விஜயகாந்துக்கு எதிராக தமிழக அரசு தொடர்ந்த அவதூறு வழக்குகளை விசாரிக்க இடைக்கால தடை விதித்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. விழுப்புரம் நீதிமன்றத்தில் விஜயகாந்த் நாளை மறுநாள் ஆஜராக தேவையில்லை என நீதிபதிகள் தெரிவித்தனர்.
2011 ஆம் ஆண்டு சட்டசபை தேர்தலில் அதிமுக உடன் கூட்டணி அமைத்து போட்டியிட்ட தேமுதிக வெற்றி பெற்று 29 இடங்களை வென்றதோடு எதிர்கட்சி அந்தஸ்தையும் பெற்றது.

சில மாதங்களிலேயே கூட்டணியில் இருந்து விலகியதை அடுத்து ஆளும் அதிமுகவிற்கு எதிரிகட்சியாக மாறியது. அதிமுகவிற்கு எதிரகாவும், ஜெயலலிதாவிற்கு எதிராகவும் என்ன பேசினாலும் அவதூறு வழக்கு பாயவே, சட்டசபை படிக்கட்டுகள் ஏறியதை விட ஊர் ஊராகப் போய் நீதிமன்ற படிக்கட்டுகள் ஏறினார் விஜயகாந்த்.
அவர் செல்லும் இடங்களில் கலவரத்தை ஏற்படுத்தி கதிகலங்க வைத்தனர் ஆளுங்கட்சி வழக்கறிஞர்கள்.
இதற்கு முடிவு கட்டும் விதமாக விஜயகாந்த், அவரது மனைவி பிரேமலதா, தேமுதிக எம்எல்ஏக்கள் பார்த்திபன், வெங்கடேஷ், பார்த்தசாரதி ஆகியோர் உச்சநீதிமன்றத்தில் மனு ஒன்றினை தாக்கல் செய்துள்ளனர்.
அந்த மனுவில், தங்கள் மீது அரசியல் பழிவாங்கும் நடவடிக்கையாக அவதூறு வழக்குகள் தொடுக்கப்பட்டுள்ளது. எனவே அவற்றின் விசாரணைக்கு தடை விதிக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.
விஜயகாந்த் சார்பில் அவதூறு சட்டப் பிரவுக்கு எதிராக மற்றொரு மனுவும் தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்குகள் திங்கள்கிழமை உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. மனுதாரர்களின் கோரிக்கையை பரிசீலித்த உச்சநீதிமன்றம், விஜயகாந்த் மீது தமிழக அரசு உள்பட பல்வேறு தரப்பினர் 14 நீதிமன்றங்களில் தொடுத்த அவதூறு வழக்குகளின் விசாரணைக்கு இடைக்கால தடை விதித்தது.
பிரேமலதா மற்றும் தேமுதிக எம்எல்ஏக்கள் மீதான அவதூறு வழக்குகளை விசாரிக்கவும், உச்சநீதிமன்றம் இடைக்கால தடை விதித்தது.
விழுப்புரம் மாவட்ட நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள அவதூறு வழக்கில், வரும் புதன்கிழமை ஆஜராவதில் இருந்தும் விஜயகாந்த்திற்கு உச்சநிதிமன்றம் விலக்கு அளித்தது.
மேலும், அவதூறு வழக்குகள் குறித்து விளக்கம் அளிக்க தமிழக அரசு, சம்மந்தப்பட்ட வழக்கறிஞர்கள் மற்றும் மத்திய சட்ட அமைச்சகத்திற்கு நோட்டீஸ் அனுப்பவும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.












Click it and Unblock the Notifications