
ஜொமாட்டோவில் உணவு டெலிவரி செய்த பள்ளிச் சிறுவன் - நிறுவனம் கூறும் விளக்கம் என்ன?
(இன்று 05/08/2022 - இந்தியா, இலங்கையில் வெளியாகும் நாளிதழ்கள் மற்றும் இணையத்தில் வெளியான செய்திகளில் சிலவற்றை உங்களுக்காக தொகுத்து வழங்குகிறோம்.)
ஜொமாட்டோவில் வேலைசெய்து வந்த தந்தை விபத்தில் காயமடைந்ததால், குடும்பத்தைக் காப்பாற்ற, தந்தையின் வேலையைப் பார்த்த பள்ளிச் சிறுவனின் வீடியோ சமூக வலைதளத்தில் கவனம் ஈர்த்துள்ளதாக 'இந்து தமிழ் திசை' செய்தி வெளியிட்டுள்ளது.
அச்செய்தியில், 30 விநாடிகள் ஓடும் ஒரு வீடியோவை ராகுல் மிட்டல் என்பவர் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிந்து, 'இந்த 7 வயது சிறுவன், அவனது தந்தை காயமடைந்த காரணத்தினால், காலையில் பள்ளிக்குச் சென்றும், மாலையில் 6 மணியிலிருந்து ஜொமாட்டோவில் உணவு டெலிவரி பாயாகவும் வேலை பார்க்கிறான். நாம் இந்த சிறுவனின் உத்வேகத்தை பாராட்டி, அவனது தந்தை விரைவில் குணமடைய உதவ வேண்டும்' என்று பதிவிட்டுள்ளார்.
ஆகஸ்ட் 1ஆம் தேதி ராகுல் மிட்டல் பதிவிட்ட இந்த செய்தியை 32,000-க்கும் அதிகமான பேர் படித்திருந்தனர். பலர் சிறுவனின் முயற்சியை வாழ்த்திப் பாராட்டியிருந்த நிலையில், சிலர் இந்த சோகமான நிகழ்வை கண்டித்தும் இருந்தனர்.
https://twitter.com/therahulmittal/status/1554154403426635776
இந்நிலையில் ஜொமாட்டோ செய்தி தொடர்பாளர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,"இந்தச் செய்தியை எங்களின் கவனத்திற்கு கொண்டுவந்த சமூக வலைதளவாசிகளுக்கு நன்றி. இங்கு குழந்தை தொழிலாளர், தவறாக சித்தரித்தல் என பல்வேறு நிலைகளில் விதிகள் மீறப்பட்டுள்ளன. இந்தக் குடும்பத்தின் சூழ்நிலையை கருத்தில் கொண்டு எந்த வித தீவிர நடவடிக்கையும் எடுக்காமல், அந்தக் குடும்பத்தினருக்கு நிலைமையை புரியவைத்தோம்.
வீடியோவில் உள்ள 14 வயது சிறுவனின் படிப்பிற்கு ஜொமாட்டோ ஃபியூச்சர் ஃபவுண்டேஷன் மூலமாக உதவ இருக்கிறோம். பணியில் இல்லாதபோது விபத்து நடந்துள்ளதால் , ஊழியர்களுக்கான விபத்து உதவி அவருக்கு வழங்க முடியாது என்றாலும், மனிதாபிமான அடிப்படையில் அவருக்கு முடிந்த உதவிகளை எங்கள் குழு அளிக்கும்" என்று தெரிவித்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.
கேரளாவில் எட்டு மாவட்டங்களுக்கு 'சிவப்பு எச்சரிக்கை' - சபரிமலை செல்ல பக்தர்களுக்கு தடை
கேரளாவில் மீண்டும் கனமழை பெய்ததால் எட்டு மாவட்டங்களுக்கு 'ரெட் அலர்ட்' விடுக்கப்பட்டுள்ளது. கேரளாவில் மீண்டும் கனமழை பெய்ததால் 8 மாவட்டங்களுக்கு 'சிவப்பு எச்சரிக்கை' விடுக்கப்பட்டுள்ளதாக 'தினந்தந்தி' செய்தி தெரிவிக்கிறது.
சபரிமலை பம்பை ஆற்றில் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கால் நேற்று பிற்பகலுக்கு பிறகு சன்னிதானம் செல்ல பக்தர்களுக்கு தடை விதிக்கப்பட்டது. கேரளாவில் நேற்று மீண்டும் கனமழை பெய்தது. மேலும் பத்தனம்திட்டா, ஆலப்புழா, கோட்டயம், எர்ணாகுளம், இடுக்கி, திருச்சூர், பாலக்காடு, கண்ணூர் ஆகிய எட்டு மாவட்டங்களில் அதிகன மழை பெய்யும் என வானிலை மையம் சிவப்பு எச்சரிக்கை விடுத்தது.
இந்த நிலையில் பம்பை ஆற்றில் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கு காரணமாக மாலை 6 மணிக்கு முன்பாக பக்தர்கள் சன்னிதானத்தில் இருந்து கீழே இறங்கும்படி உத்தரவிடப்பட்டது. மேலும் பிற்பகல் 2 மணிக்கு மேல் பக்தர்கள் பம்பையில் இருந்து சன்னிதானம் செல்ல தடை விதிக்கப்பட்டது.
கேரளாவில் கனமழையால் பல இடங்களில் நிலச்சரிவு மற்றும் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் பாதுகாப்பு கருதி ஆயிரக்கணக்கான குடும்பங்கள் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளதாக அந்தந்த மாவட்ட அதிகாரிகள் தெரிவித்தனர். மோசமான வானிலை காரணமாக கோழிக்கோடு விமான நிலையத்திற்கு வந்த 5 விமானங்கள் கொச்சி சர்வதேச விமான நிலையத்திற்கு திருப்பி விடப்பட்டன.
- 5ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டில் நடந்தது என்ன? ஆ. ராசா குற்றம்சாட்டுவது ஏன்?
- காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் கனமழை: 12 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை
- உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக பரிந்துரைக்கப்பட்ட நீதிபதி உதய் உமேஷ் லலித் - யார் இவர்?
இலங்கையில் சற்று குறைந்த அத்தியாவசிய பொருட்களின் விலை
இலங்கையில் பருப்பு, சீனி, கறிவேப்பிலை, வெங்காயம், மிளகாய் போன்ற அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலை சற்று குறைந்துள்ளதாக புறக்கோட்டை வர்த்தக சங்கத்தின் நிர்வாகக் குழு உறுப்பினர் ஒருவர் தெரிவித்ததாக 'தமிழன்' செய்தி இணையதளம் செய்தி வெளியிட்டுள்ளது.
அதன்படி, 600 ரூபாவாக இருந்த பருப்பு மொத்த விலை 410 ரூபாவாகவும், 330 ரூபாவாக இருந்த சீனியின் மொத்த விலை 270 ரூபாவாகவும், 215 ரூபாவாக இருந்த உருளைக்கிழங்கு மொத்த விலை 150 ரூபாவாகவும், மிளகாய் விலை 1900 ரூபாவிலிருந்து 1300 ரூபாவாக குறைந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
டாலரின் விலை ஸ்திரப்படுத்தப்பட்டதாலும் வங்கிகள் டாலரை வழங்குவதாலும் அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் வீழ்ச்சியடைந்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.
செப்டம்பர் முதல் வாரத்தில் இடைக்கால வரவு - செலவுத் திட்டம்
செப்டம்பர் முதல் வாரத்தில் இடைக்கால வரவு - செலவுத் திட்டம் நாடாளுமன்றத்தில் முன்வைக்க உள்ளதாக இலங்கை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளதாக 'தமிழ் மிரர்' செய்தி வெளியிட்டுள்ளது.
இடைக்கால வரவு -செலவுத் திட்டம் மூலம் மக்களுக்கு நிவாரணம் வழங்க எதிர்பார்ப்பதாகவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்ற துறைசார் கண்காணிப்புக் குழுக்களை உடனடியாக ஸ்தாபிக்க நடவடிக்கை எடுப்பதாகவும், அவற்றின் தலைவர்களுக்கு அலுவலக வசதிகளை வழங்குவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாகவும் தெரிவித்த ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, நாட்டுக்கு அரச சேவையில் இருந்து அதி வினைத்திறன் வாய்ந்த சேவை தேவை என்றும் தெரிவித்தார்.
துறைசார் கண்காணிப்புக் குழுக்களின் தலைவர்களை அமைச்சரவைக்கு அழைக்க தாம் தயார் என்றும் ஜனாதிபதி மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.
https://www.youtube.com/watch?v=GyBEMxaxETE
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்