அதெப்படி சுப்ரீம் கோர்ட்டை விமர்சிக்கலாம்? அருண்ஜேட்லி மீது தேசதுரோக வழக்கு போட்டது உ.பி. கோர்ட்!!
குல்பகார்: நீதிபதிகள் நியமன கமிஷன் விவகாரத்தில் உச்சநீதிமன்றத்தை விமர்சித்து கருத்து தெரிவித்த மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி மீது தேசத்துரோக வழக்கு பதிவு செய்ய உத்தரப்பிரதேச நீதிமன்றம் அதிரடி உத்தரவிட்டு உள்ளது.
மத்திய அரசு கொண்டு வந்த தேசிய நீதிபதிகள் நியமன ஆணைய சட்டம் செல்லாது என்று உச்சநீதிமன்றம் அண்மையில் அதிரடி தீர்ப்பு அளித்தது. இது குறித்து மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி தன்னுடைய ஃபேஸ்புக் பக்கத்தில்ம், 'உச்ச நீதிமன்ற தீர்ப்பு தவறான தர்க்கத்தின் அடிப்படையில் உள்ளது. தேர்ந்தெடுக்கப்படுபவர்கள் பலவீனப்படுத்தப்படுகிறபோது ஜனநாயகத்துக்கு அது ஆபத்தாக முடியும்' என குறிப்பிட்டிருந்தார்.

நீதித்துறை குறித்த அருண் ஜெட்லி கூறிய இந்த கருத்தை காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் ஆனந்த் சர்மா விமர்சித்திருந்தார்.
இந்நிலையில் இது தொடர்பாக நாளிதழ்களில் வெளியான செய்திகளை ஆதாரமாக கொண்டு, தானாக முன்வந்து உத்தரபிரதேச மாநிலம் மகோபார் மாவட்ட நீதிபதி அங்கிட் கோயல், அருண் ஜெட்லி மீது தேசத்துரோக வழக்கு பதிவு செய்ய போலீசாருக்கு நேற்று உத்தரவிட்டார்.
மேலும் இந்த வழக்கில் நவம்பர் 19-ந் தேதி நேரில் ஆஜராகவும் அருண் ஜேட்லிக்கு போலீஸ் எஸ்.பி. மூலமாக நீதிபதி சம்மன் அனுப்பி உள்ளார்.
பாலியல் பலாத்காரம் தொடர்பாக சர்ச்சைக்குரிய கருத்து தெரிவித்த சமாஜ்வாடி கட்சி தலைவர் முலாயம் சிங் யாதவ் மீது வழக்கு பதிவு செய்யவும், அவருக்கு சம்மன் அனுப்பவும் இதே நீதிபதிதான் உத்தரவிட்டு இருந்தார். இந்த வழக்கு நவம்பர் 9-ந் தேதி விசாரணைக்கு வர உள்ளது.












Click it and Unblock the Notifications