'ஷிர்டி சாய்பாபா கடவுளோ, குருவோ அல்ல... அவரது உருவத்தை வழிபடக் கூடாது!'- புது சர்ச்சை
ராய்பூர்: ஷிர்டி சாய்பாபா கடவுளோ குருவோ அல்ல.. எனவே அவரது உருவச் சிலையை வழிபடக் கூடாது என துவாரகை சங்கராச்சாரியார் தலைமையில் நடந்த கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இது புதிய சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.
ஷிர்டி சாய் பாபா 19ம் நூற்றாண்டில் இந்தியாவில் வாழ்ந்த மகான். அவருக்கு கோடிக்கணக்கான பக்தர்கள் உள்ளனர். ஷிர்டியில் உள்ள அவரது கோயிலுக்கு ஏராளமானோர் சென்று அவரது உருவச் சிலையை வழிபட்டு வருகின்றனர். மதங்களுக்கு அப்பாற்பட்ட ஒரு மகானாகவே அவரை பலரும் வழிபடுகின்றனர்.

இந்த நிலையில் துவாரகை பீடத்தின் சங்கராச்சாரி ஸ்வரூபானந்த சரஸ்வதி தலைமையில் ராய்பூரில் இரண்டு நாள் மதக் கருத்தரங்கம் நடந்தது. இதில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தில், "19-ம் நூற்றாண்டைச் சேர்ந்த துறவி ஷிர்டி சாய்பாபா கடவுளோ குருவோ அல்ல.. எனவே சனாதன தர்மத்தைப் பின்பற்றுவோர் அவரது உருவச் சிலையை வழிபடக் கூடாது," என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இதுகுறித்து இந்தக் கருத்தரங்கின் செய்தித் தொடர்பாளரான ராஜேஷ் ஜோஷி கூறுகையில், "ஷிர்டி சாய் பாபா குருவோ கடவுளோ அல்ல என்று காசி வித்வத் பரிஷாத் முடிவெடுத்துள்ளது. அதையொட்டித்தான் இந்தத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது," என விளக்கம் அளித்தார்.
சர்ச்சைக்குரிய இந்தத் தீர்மானம் நிறைவேற்றப்பட்ட சில மணி நேரத்தில், ராய்பூரிலிருந்து 150 கிமீ தொலைவில் உள்ள கவார்தாவில் திவ்ய சதுர்மாஸ் மஹோத்சவ் கமிட்டி ஒரு கருத்தரங்குக்கு ஏற்பாடு செய்தது. அதில் ஷிர்டி சாய் பாபா வழிபாட்டுக்கு எதிரான தீர்மானம் குறித்து விவாதிக்கப்பட்டது.
இந்தக் கூட்டத்தில் பங்கேற்ற ஷிர்டி சாய்பாபாவின் பக்தர்கள் சிலர், தீர்மானத்துக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். சாய் பாபா பக்தர்களும் சங்கராச்சாரியாரின் ஆதரவாளர்களும் கடும் வார்த்தை மோதலில் ஈடுபட்டனர்.












Click it and Unblock the Notifications