மும்பையில் பயங்கர தீவிபத்து... செருப்பு குடோன், 100 குடிசைகள் எரிந்து நாசம்... 2 பேர் காயம்
மும்பை: மும்பை கொவண்டி பகுதியில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 100க்கும் மேற்பட்ட குடிசை வீடுகள் எரிந்து நாசமாகின. இந்த விபத்தில் தீயை அணைக்க வந்த வீரர் ஒருவர் உட்பட 2 பேர் காயமடைந்தனர்.
மும்பை கோவண்டி கவுதம் நகரில் ஏராளமான குடிசை வீடுகள் உள்ளன. இந்நிலையில் நேற்று அதிகாலை அங்குள்ள செருப்பு தயாரிக்கும் குடோன் ஒன்றில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது.

அதிகாலை நேரத்தில் இந்த தீவிபத்து ஏற்பட்டதால், குடோனில் ஊழியர்கள் யாரும் இல்லை. ஆனால், தீ சிறிதுநேரத்தில் அக்கம்பக்கத்தில் இருந்த குடிசைகளுக்கும் மளமளவென பரவியது.
வீடுகளில் இருந்தவர்கள் அசந்து தூங்கிக் கொண்டு இருந்ததால், தீ விபத்து குறித்து உடனடியாக அவர்களுக்கு தெரியவில்லை. ஆனால், சிறிதுநேரத்தில் வீடுகளை புகைமண்டலம் சூழ்ந்து, வெப்பத்தின் தாக்கம் அதிகரித்ததால், அலறியடித்து எழுந்த மக்கள் வீடு தீப்பிடித்து எரிவதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
உடனடியாக வீடுகளை விட்டு மக்கள் வெளியேறினர். அதோடு அக்கம்பக்கத்தில் குடியிருந்தவர்களையும் அவர்கள் கதவைத் தட்டி எழுப்பி, அவர்களையும் வீட்டை விட்டு வெளியேற்றினர்.
இதற்கிடையே, தகவல் அறிந்து 16 வாகனங்களில் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். தீயை அணைக்க அவர்கள் கடுமையாகப் போராடிக் கொண்டிருந்தபோது, வீடுகளில் இருந்த சிலிண்டர்கள் மற்றும் டிவி உள்ளிட்ட எலக்ட்ரானிக் பொருட்கள் வெடிக்கத் தொடங்கியது.
இதனால் தீ மேலும் கொழுந்துவிட்டு எரியத் தொடங்கியது. சுமார் 4 மணி நேரப் போராட்டத்திற்குப் பின் தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். காலை 7.30 மணியளவில் தீ முற்றிலுமாக அணைக்கப்பட்டது.
இந்த தீவிபத்தில் தீயணைப்பு அதிகாரி ஒருவரும், அப்பகுதியில் வசித்து வருபவர் ஒருவரும் காயமடைந்தனர். அதோடு, செருப்பு தயாரிக்கும் குடோன் மற்றும் அதனைச் சுற்றியிருந்த 100-க்கும் மேற்பட்ட குடிசை வீடுகள் தீக்கு இரையாகின.
தீ விபத்துக்கான காரணம் குறித்து சிவாஜி நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications