"டர்பனை பிடுங்கி, குப்பையில் போட்டார்கள்.. உணவு கூட தரல!" அமெரிக்காவில் இந்தியருக்கு நேர்ந்த கொடுமை
அமிர்தசரஸ்: அமெரிக்காவில் இருந்து நாடு கடத்தப்பட்ட இந்தியர்களில் ஒருவர், தான் மேற்கொண்ட ஆபத்தான பயணத்தை குறித்து விளக்கியுள்ளார். மேலும், அமெரிக்காவில் தடுப்பு முகாமில் தான் சித்திரவதை செய்யப்பட்டதாகவும் டர்பனை பிடுங்கி குப்பையில் வீசி கொடுமைப்படுத்தப்பட்டதாகவும் கூறி பகீர் கிளப்பியுள்ளார்.
அமெரிக்க அதிபராகப் பதவியேற்ற டிரம்ப், அங்குச் சட்டவிரோதமாகக் குடியேறியவர்களை நாடு கடத்தும் நடவடிக்கையைத் தீவிரப்படுத்தியுள்ளார். அதன்படி சட்டவிரோதமாகக் குடியேறிய இந்தியர்களுடன் இரண்டாவது விமானம் சமீபத்தில் தான் அமிர்தசரஸ் வந்திறங்கியது.

நாடு கடத்தல்
அமெரிக்காவிலிருந்து நாடு கடத்தப்பட்டவர்களில் ஒருவர் ஜதீந்தர் சிங்.. அமெரிக்காவில் நுழைய முயன்றபோது அங்குள்ள எல்லை பாதுகாப்புப் படையினர் இவரைப் பிடித்துள்ளனர். பிறகு அங்குள்ள தடுப்பு முகாமில் ஜதீந்தர் சிங் இரண்டு வாரங்கள் தங்க வைக்கப்பட்டார். அந்த இரு வாரங்கள் தனக்கு என்ன நடந்தது.. அங்கு என்ன மாதிரியான சிக்கலை எதிர்கொள்ள நேரிட்டது என்பது குறித்து அவர் விளக்கியுள்ளார்.
அங்கு தான் சித்திரவதை செய்யப்பட்டதாகக் குறிப்பிட்ட ஜதீந்தர் சிங், அங்குச் சரியான உணவு கிடைக்கவில்லை என்றும் அமெரிக்க ராணுவ வீரர்கள் தனது டர்பனை அகற்ற வற்புறுத்தியதாகக் குறிப்பிட்டுள்ளார். டர்பனை பிடுங்கிய அதிகாரிகள், அதைக் குப்பைத் தொட்டியில் வீசியதாகவும் குற்றம் சாட்டினார்.
என்ன நடந்தது?
23 வயதான ஜதீந்தர் சிங், பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸை சேர்ந்தவர். பஞ்சாபில் வேலைவாய்ப்பு கிடைக்காததால் அவர் வேறு வழியின்றி அமெரிக்கா சென்றுள்ளார்.. இது தொடர்பாக அவர் பிரபல ஆங்கில டிவி சேனலுக்கு அளித்த பேட்டியில் மேலும் கூறுகையில், "கடந்த ஆண்டு நவம்பர் 27ஆம் தேதி அமெரிக்க எல்லைக்குள் நுழைய முயன்ற போது என்னைப் பிடித்தனர்.. அங்கிருந்து என்னைத் தடுப்பு முகாமுக்கு அனுப்பினர்.
டர்பன்:
தடுப்பு முகாமில் டர்பனை அவிழ்க்கச் சொன்னார்கள். நான் அதற்கு எதிர்ப்பு தெரிவித்தேன். இருப்பினும், அதைக் கண்டுகொள்ளாமல் நிச்சயம் டர்பனை கழட்டச் செய்தார்கள். கேட்டால் இதுதான் ரூல்ஸ் என்றார்கள். பிறகு எனது கண் முன்னாலேயே டர்பனை குப்பைத் தொட்டியில் வீசினர். ஏர் கண்டிஷனரை குறைத்தனர்.. ஹீட்டரை அதிகரித்தனர். இதனால் எங்கள் தோல் வறண்டது.. மேலும், எங்களுக்கு முறையான உணவு கூட கிடைக்கவில்லை. தினமும் உருளை சிப்ஸ் மற்றும் ஃப்ரூட்டி ஜூஸ் மட்டுமே கொடுத்தார்கள்" என்றார்.
எதற்காக எப்படி அமெரிக்கா சென்றார் என்பது குறித்து விளக்கிய ஜதீந்தர் சிங், "எனது நண்பர்கள் தான் அந்த ஏஜெண்ட் நம்பரை கொடுத்தார்கள். நான் கடந்தாண்டு தொடர்பு கொண்டேன். என்னை அமெரிக்கா அழைத்துச் செல்ல உறுதியளித்த அவர் ரூ.50 லட்சம் கேட்டார். குடும்பம் நடத்த அமெரிக்கா சென்றே தீர வேண்டும் என்பதால் 1.3 ஏக்கர் பரம்பரை நிலத்தை விற்று முதலில் ரூ.22 லட்சத்தை ஏஜெண்டிற்கு கொடுத்தேன். பிறகு எனது திருமணமான சகோதரிகளிடம் நகைகளைக் கேட்டு, அதை விற்று மீதி பணத்தைக் கொடுத்தேன்.
ஆபத்தான பயணம்
மூன்று நாட்கள் பனாமா காடுகள் வழியாகச் செல்ல வேண்டி இருந்தது. பிறகு மெக்சிகோவுக்கு விமானத்தில் போய் அங்கிருந்து அமெரிக்காவில் சட்டவிரோதமாக நுழையலாம் என்றே ஏஜெண்ட் கூறினார். அதேநேரம் பயணம் இவ்வளவு ஆபத்தாக இருக்கும் என்று எனக்குத் தெரியாது. பயணம் ஈஸியாக இருக்கும் என்றும் இதுவரை பலரை இதே ரூட்டில் அனுப்பி இருப்பதாகவும் ஏஜெண்ட் கூறினார்.
ஆனால், ஏஜெண்ட் பாதியிலேயே என்னை விட்டுவிட்டுப் போய்விட்டார். காடுகளை நான் தனியாகக் கடக்க வேண்டி இருந்தது. அப்போது சட்டவிரோதமாக நுழைய முயன்ற பலர் உடல்களை நான் பார்க்க நேரிட்டது. அது பயங்கரமாக இருந்தது. எல்லா பிரச்சினைகளையும் தாண்டி கடைசியாக அமெரிக்காவுக்குள் நுழைந்தால்.. அங்கு எல்லையிலேயே என்னைப் பிடித்துவிட்டனர். பிறகு இரண்டு வாரக் காலம் தடுப்பு முகாமில் சித்திரவதை அனுபவிக்க வேண்டி இருந்தது.
உணவு கூட தரவில்லை
நாடு கடத்தப்பட்ட போது கூட கைவிலங்கு போட்டே இருந்தனர். சுமார் 36 மணி நேரம் இதுபோல இருக்க வேண்டி இருந்தது. உணவு மற்றும் கழிவறைக்குச் செல்வதற்குக் கூட சிரமத்தை எதிர்கொண்டோம். விமானம் தரையிறங்க 10 நிமிடத்திற்கு முன்பு தான் உணவு கூட கொடுத்தார்கள். இந்த ஒரு பயணமே எனக்குப் பாடத்தைக் கற்பித்துவிட்டது. இனிமேல் நான் தப்பித் தவறிக்கூட வெளிநாட்டிற்குச் செல்ல மாட்டேன். இந்தியாவிலேயே வேலை தேடலாம் என இருக்கிறேன்" என்றார்.












Click it and Unblock the Notifications