“பாடகர் கேகே முகம், தலையில் காயம்.. இயற்கைக்கு மாறான மரணம் என வழக்குப்பதிவு” - திரையுலகினர் ஷாக்!
கொல்கத்தா : பிரபல பாடகர் கேகே கொல்கத்தாவில் ஒரு இசை நிகழ்ச்சியில் பங்கேற்ற நிலையில் நேற்று இரவு காலமானார். பாடகர் கேகேவின் குடும்பத்தினர் சற்று முன்பு கொல்கத்தா வந்துள்ளனர்.
பாடகர் கேகே மரணம் தொடர்பாக இயற்கைக்கு மாறான மரணம் என வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. கேகேவின் முகம் மற்றும் தலையில் காயங்கள் இருந்ததாகவும் ஆங்கில ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
கேகேவின் உடல், அவரது குடும்பத்தினரின் ஒப்புதலுக்குப் பிறகு பிரேதப் பரிசோதனை நடத்தப்படும் எனத் தகவல் வெளியாகியுள்ளது. பாடகர் கேகேவின் திடீர் மறைவு திரையுலகினர், ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பாடகர் கேகே
கேரளாவை சேர்ந்த 53 வயதான கேகே எனும் கிருஷ்ணகுமார் குன்னத், தமிழ், இந்தி, மலையாளம் உட்பட பல மொழிகளில் நூற்றுக்கணக்கான பாடல்களைப் பாடியுள்ளார். தமிழ் திரையுலகில் 50க்கும் மேற்பட்ட பாடல்களை பாடியுள்ளார். இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் 1997ஆம் ஆண்டு வெளியான மின்சார கனவு படத்தில் இடம் பெற்ற ஸ்ட்ராபெர்ரி கண்ணே பாடல் மூலம் தமிழில் கேகே அறிமுகமானார். திரைத்துறையில் அறிமுகமாவதற்கு முன்பே 3,500 விளம்பரங்களுக்கு பாடல் பாடியுள்ளார் கேகே. ஹிந்தி, தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் பெங்காலி உள்ளிட்ட பல மொழிகளில் அவர் பாடல்களை பாடியுள்ளார்.

மாரடைப்பால் பலி
இந்நிலையில், கொல்கத்தா மாநகரின் நஸ்ருல் மஞ்சா பகுதியில் நேற்று நடைபெற்ற இசை நிகழ்ச்சியில் பங்கேற்ற கேகே, ரசிகர்கள் முன்னிலையில் பாடல்களை பாடினார். அவருக்கு ரசிகர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். கச்சேரி முடிந்ததும் உடல் நலக்குறைவால் உடனடியாக ஹோட்டலுக்கு சென்றுள்ளார். அங்கு அவர் மயங்கி விழுந்த நிலையில் அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் மாரடைப்பால் உயிரிழந்து விட்டதாக தெரிவித்துள்ளனனர். அவரது திடீர் மறைவுக்கு காரணம் மாரடைப்பு எனக் கூறப்பட்டுள்ளது.

திரையுலகினர் அதிர்ச்சி
பாடகர் கேகேவின் திடீர் மரணம் அவரது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியையும், மிகுந்த சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது. அவரது மறைவுக்கு பல்வேறு தரப்பினர் இரங்கல் தெரிவித்துள்ளனர். கேகே மறைவுக்கு பிரதமர் மோடி, குடியரசு துணைத் தலைவர் வெங்கையா நாயுடு, மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, மத்திய அமைச்சர்கள் அமித்ஷா, அனுராக் தாக்கூர், கிரிக்கெட் வீரர் விரேந்திர சேவாக் உள்ளிட்ட பிரபலங்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

இயற்கைக்கு மாறான மரணம்
இந்நிலையில், பாடகர் கேகே மரணம் தொடர்பாக நியூ மார்க்கெட் காவல் நிலையத்தில் இயற்கைக்கு மாறான மரணம் என வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. கேகேவின் குடும்பத்தினரின் சம்மதம் கிடைத்ததும், விசாரணை மற்றும் பிரேத பரிசோதனை செய்யப்படும் எனத் தகவல் வெளியாகியுள்ளது. கேகேவின் குடும்பத்தினர் தற்போது கொல்கத்தா வந்தடைந்துள்ளனர்.

போஸ்ட் மார்ட்டம்
கொல்கத்தாவில் உள்ள எஸ்.எஸ்.கே.எம் மருத்துவமனையில் பிரேதப் பரிசோதனை செய்வதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. பிரேத பரிசோதனைக்கு பிறகு கே.கே.வின் உடல் அவரது குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்படும் எனத் தெரிகிறது. பிரேத பரிசோதனையின் முதற்கட்ட அறிக்கை கிடைத்தபிறகு போலீசார் விசாரணையை தீவிரப்படுத்துவார்கள் எனக் கூறப்படுகிறது.

சிசிடிவி
பாடகர் கேகே-வின் முகம் மற்றும் தலையில் காயங்கள் இருந்ததாக போலீஸ் வட்டாரத் தகவல் தெரிவிப்பதாக ஆங்கில ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இதனால் பிரேத பரிசோதனை அறிக்கை முக்கியத்துவம் பெறும் எனக் கூறப்படுகிறது. கேகே தங்கியிருந்த நியூ மார்க்கெட் கிராண்ட் ஹோட்டலின் சிசிடிவி காட்சிகளைக் கைப்பற்றி போலீஸார் ஆய்வு செய்து வருகின்றனர்.












Click it and Unblock the Notifications