திருப்பதி: சாமி தரிசனத்திற்கு காத்திருந்த பக்தர்களை கடித்த பாம்பு

திருமலை ஏழுமலையானை தரிசிக்க தினசரியும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். வாகனம் மூலமாக மட்டுமின்றி சாமி தரிசனம் செய்வதற்காக அலிபிரி, ஸ்ரீவாரிமெட்டு ஆகிய இரு நடைபாதைகளின் வழியாக ஏராளமான பக்தர்கள் பாதயாத்திரையாக திருமலைக்கு வருகின்றனர்.
நேற்று விடுமுறை நாள் என்பதால் பக்தர்கள் மலைப்பாதைகளில் கூட்டம் கூட்டமாக நடந்து வந்தனர். பிற்பகல் 3.30 மணியளவில் திருமலையில் நாராயணகிரி பூங்காவில் உள்ள திவ்ய தரிசன கியூ வரிசையில் ஏராளமான பக்தர்கள் தரிசனத்துக்காக காத்திருந்தனர்.
கூட்டத்தில் புகுந்த பாம்பு
அப்போது நாராயணகிரி பூங்காவில் இருந்து வந்த ஒரு விஷப்பாம்பு திவ்ய தரிசன கியூ வரிசையில் புகுந்து பரபரப்பை ஏற்படுத்தியது.
அலறி ஓடிய பக்தர்கள்
அது படமெடுத்த படி பக்தர்களை நோக்கி சீறியதால் தரிசனத்துக்காக காத்திருந்த பக்தர்கள் பாம்பு.. பாம்பு.. என அலறியடித்து ஓடினார்கள். இதனால் அங்கு தள்ளு முள்ளு ஏற்பட்டது.
பக்தர்களை கொத்திய பாம்பு
கர்நாடக மாநிலம் பல்லாரி பகுதியை சேர்ந்த துர்க்கம்மாள் (வயது 55) மற்றும் பவானி (5) ஆகியோரை அந்த விஷ பாம்பு கொத்தியது.
மாயமாக மறைந்தது
பக்தர்கள் சிலர் ஓடி வந்து பாம்பை அடிக்க முயன்றனர். ஆனால், சிறிது நேரத்தில் அந்த விஷ பாம்பு திடீரென மாயமாகி விட்டது.
மருத்துவமனையில் சிகிச்சை
பாம்பு கடித்த சிறுமி உள்பட 2 பேரும் சிகிச்சைக்காக ஆம்புலன்ஸ் மூலம் திருமலையில் உள்ள அஸ்வினி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக திருப்பதி ருயா மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். விஷம் ஏறியதால் கவலைக்கிடமான நிலையில் இருவருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
பக்தர்கள் அதிர்ச்சி
சாமி தரிசனம் செய்வதற்காக வரிசையில் காத்திருந்த சிறுமி உள்பட 2 பேரை விஷப்பாம்பு கடித்த சம்பவம் திருமலையில் பக்தர்களிடையே அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.












Click it and Unblock the Notifications