வீடு முழுவதும் விஷவாயு.. கேப்புகளில் வெளியேறாமல் இருக்க செல்லோடேப்! ஒரே குடும்பத்தில் 4 பேர் தற்கொலை
திருச்சூர்: கேரள மாநிலம் திருச்சூரில் வீடு முழுவதும் விஷ வாயுவை நிரப்பி மென்பொறியாளர் உள்பட அவரது குடும்பத்தை சேர்ந்த 4 பேர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருச்சூர் மாவட்டம், கொடுங்கல்லூர், உழவத் கடவை சேர்ந்தவர் உபைது. இவருடைய மகன் ஆஷிக் (40). என்ஜினீயரான இவர் தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தில் பணிபுரிந்த வந்தார்.
இவருடைய மனைவி அபீரா (34). இவர்களுக்கு அஸ்ரா (13) பாத்திமா, அனோநிஷா (8) ஆகிய இரு மகள்கள் இருந்தனர். இவர்கள் 4 பேரும் வீட்டின் மாடியில் வசித்து வந்தனர்.

வீட்டுக் கதவு திறக்கப்படவில்லை
இந்த நிலையில் நேற்று காலை இவர்களது வீட்டு கதவு நீண்ட நேரமாகியும் திறக்கப்படவில்லை. இதனால் மாடிக்கு சென்ற ஆஷிக் சகோதரி மாடிக்கு சென்று கதவை தட்டினார். ஆனால் உள்ளே இருந்து எந்தவொரு தகவலும் இல்லாததால் சந்தேகம் அடைந்த அவர் போலீஸுக்கு தகவல் தெரிவித்தார். இதையடுத்து போலீஸார் சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.

வீட்டின் கதவு உடைப்பு
வீட்டின் கதவை உடைத்தனர். அப்போது வீட்டிற்குள் இருந்து விஷ வாயு வெளியேறியதால் போலீஸாருக்கு மூச்சுதிணறல் ஏற்பட்டது. இதையடுத்து போலீஸார் வெளியே வந்துவிட்டனர். வீட்டிற்குள் யாரையும் அனுமதிக்கவில்லை. இதையடுத்து வீட்டிற்குள் இருந்த வாயுவை வெளியேற்ற தீயணைப்பு துறையினர் வரவழைக்கப்பட்டனர்.

விஷவாயு
அவர்கள் வந்து வீட்டின் ஜன்னல் கண்ணாடிகளை உடைத்தனர். அப்போது ஜன்னல் இடுக்குகள் வழியாக விஷ வாயு வெளியே போய்விடக் கூடாது என்பதற்காக இடுக்குகளில் டேப் ஒட்டப்பட்டிருந்தது தெரியவந்தது. பின்னர் அந்த டேப்புகளை எல்லாம் அகற்றிய தீயணைப்புத் துறையினர் விஷ வாயு வெளியேறும் படி செய்தனர்.

இறந்த நிலையில் 4 பேர்
இதையடுத்து போலீஸார் வீட்டிற்குள் சென்றனர். அங்கு ஒரே அறையில் ஆஷிக், அவரது மனைவி, குழந்தைகள் இறந்த நிலையில் கிடந்தனர். பின்னர் 4 பேரின் உடல்களையும் போலீஸார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு கொண்டு சென்றனர். கார்பன் மோனாக்சைடு வாயுவை வீடு முழுவதும் நிரப்பி அவர்கள் தற்கொலையில் ஈடுபட்டது தெரியவந்தது. கடன் தொல்லையால் அவர் இவ்வாறு செய்தாரா என தெரியவில்லை. இதுகுறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.












Click it and Unblock the Notifications