போலி என்கவுண்ட்டரில் பலியான சொராபுதீன் ஷேக் சகோதரர் நில அபகரிப்பு புகாரில் கைது!
ரட்லம்: குஜராத்தில் போலி என்கவுண்ட்டரில் சுட்டுக் கொல்லப்பட்ட சொராபுதீன் ஷேக்கின் சகோதரர் ரியாசுதீன் உட்பட 5 பேர் நில அபகரிப்புப் புகாரில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கடந்த 2005-ம் ஆண்டு சொராபுதீன் ஷேக் குஜராத் தீவிரவாத எதிர்ப்புப் படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டார். பாகிஸ்தானில் செயல்பட்டு வரும் லஷ்கர் இ தொய்பா தீவிரவாத அமைப்புடன் சொராபுதீனுக்குத் தொடர்பு உள்ளது என்றும் முக்கிய அரசியல் தலைவர்களைப் படுகொலை செய்ய அவர் திட்டமிட்டிருந்தார் எனவும் குஜராத் காவல்துறையினர் தெரிவித்தனர்.
ஆனால் பஸ்ஸில் சென்று கொண்டிருந்த சொராபுதீனையும், அவரது மனைவியையும் போலீஸார் கடத்தினர். பின்னர் சுட்டுக் கொன்றனர். இது போலி என்கவுன்ட்டர் என சிபிஐ வழக்கு பதிவு செய்தது. இந்த வழக்கில் தற்போதைய பாரதிய ஜனதா கட்சித் தலைவர் அமித்ஷாவுக்கு தொடர்பிருப்பதாகவும் கூறப்பட்டது. ஆனால் பின்னர் அமித்ஷா விடுவிக்கப்பட்டார்.
இந்த என்கவுண்ட்டரில் பலியான சொரபுதீனின் சகோதரர் ரியாசுதீன் உட்பட 5 பேர் தற்போது நில அபகரிப்பு புகாரில் கைது செய்யப்பட்டுள்ளனர். குஜராத்தின் ரட்லம் போலீசில் பர்கத் பாய் மற்றும் அவரது சகோதரர்கள் கொடுத்த புகாரின் பேரில் ரியாசுதீனும் அவரது கூட்டாளிகளும் கைது செய்யப்பட்டுள்ளனர். அத்துடன் ரியாசுதீனிடம் இருந்து துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.












Click it and Unblock the Notifications