Sonam Wangchuk: லடாக் போராட்டத்தில் வெடித்த வன்முறை.. சமூக ஆர்வலர் சோனம் வாங்சுக் தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது!
லடாக்: லடாக்கிற்கு மாநில அந்தஸ்து கோரி நடந்த போராட்டத்தில் எதிர்பாராத விதமாக மிகப் பெரிய வன்முறை வெடித்திருந்தது. அதில் 4 பேர் உயிரிழந்திருந்தனர். மேலும், பலர் படுகாயமடைந்தனர். இதில் தான் பாஜக அலுவலகமும் தீ வைத்து எரிக்கப்பட்டது. இதற்கிடையே இந்த லடாக் வன்முறை தொடர்பாகச் சமூக ஆர்வலர் சோனம் வாங்சுக்கை லே காவல்துறை கைது செய்துள்ளது.
காஷ்மீருக்குச் சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்ட போது, லடாக் சட்டசபை இல்லாத ஒன்றியம் பிரதேசமாகச் செயல்படும் என அறிவிக்கப்பட்டது. இதற்கிடையே லடாக்கிற்கு மாநில அந்தஸ்து கோரியும் லடாக் பகுதியை இந்திய அரசியலமைப்பின் ஆறாவது அட்டவணையில் சேர்க்க வேண்டும் என்பதை வலியுறுத்தியும் அங்குக் கடந்த சில காலமாகவே போராட்டங்கள் நடந்தது.

கடந்த சில நாட்களுக்கு முன்பு இதுபோல நடந்த போராட்டத்தில் வன்முறை வெடித்தது. இந்த வன்முறையில் 4 பேர் உயிரிழந்தனர், மேலும் 90க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இந்த வன்முறைக்குச் சமூக ஆர்வலர் சோனம் வாங்சுக் தான் காரணம் என்று மத்திய அரசு குற்றஞ்சாட்டியது.. சோனம் வாங்சுக் வன்முறை தூண்டும் வகையில் வகையில் பேசியதாகவும் அதுவே வன்முறையைத் தூண்டிவிட்டதாகவும் மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.
இதற்கிடையே லடாக் சமூக ஆர்வலர் சோனம் வாங்சுக் இப்போது கைது செய்யப்பட்டுள்ளார். லடாக் வன்முறை தொடர்பாக லே காவல்துறை சோனம் வாங்சுக்கை கைது செய்துள்ளது. தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் அவர் கைது செய்யப்பட்டார். போராட்டக்காரர்களைத் தூண்டியதாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. லடாக் யூனியன் பிரதேசத்திற்கு மாநில அந்தஸ்து வழங்க வேண்டும் என்பதே போராட்டக்காரர்களின் கோரிக்கையாகும்.
கடந்த புதன்கிழமை நிகழ்ந்த மோதல்களைத் தொடர்ந்து, லே பகுதியில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. பதற்றம் அதிகரித்ததால் சோனம் வாங்சுக் தனது இரண்டு வார உண்ணாவிரதப் போராட்டத்தையும் கைவிட்டார். லடாக்கிற்கு மாநில அந்தஸ்து மற்றும் இந்திய அரசியலமைப்பின் ஆறாவது அட்டவணையில் சேர்க்க வேண்டும் என்பதே அவருடைய கோரிக்கைகளாகும்.
மோதலுக்கு மறுநாளே, வாங்சுக் தான் மோதலுக்கு காரணம் என மத்திய அரசு வட்டாரங்கள் குற்றம் சாட்டியது. அவரது பேச்சு வன்முறை தூண்டும் வகையிலும் அரசியல் உள்நோக்கம் கொண்டது போல இருந்ததாகக் கூறப்பட்டது. நேபாளத்தில் ஜென் Z போராட்டங்கள் பற்றிய வாங்சுக்கின் பேச்சுகள் மக்களிடையே கோபத்தைத் தூண்டியதாக உள்துறை அமைச்சகம் குற்றம் சாட்டியது. அதன் தொடர்ச்சியாக லேவில் உள்ள பாஜக அலுவலகமும் சில அரசு வாகனங்களும் எரிக்கப்பட்டன.












Click it and Unblock the Notifications