கன்னம் பழுத்தது.. போலீஸ் ஆபீசரை பளார் விட்ட ஸ்பைஸ்ஜெட் பெண் ஊழியர்.. ஜெய்ப்பூர் ஏர்போர்ட் சம்பவம்
ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் மாநிலம் ஏர்போர்ட்டில் நடந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.. இதற்கு 2 விதமான காரணங்களும் சொல்லப்படுவதால், பெரும் பரபரப்பு ஜெய்ப்பூரில் ஏற்பட்டுள்ளது.
ஜெய்பூர் ஏர்போர்ட்டில் ஸ்பைஸ்ஜெட் விமானத்தில் வேலைபார்க்கும் பெண்ஊழியர், பணிக்கு வந்துள்ளார்.. அந்த பணிப்பெண் வந்த போது ஒரு நுழைவுவாயில் பகுதியில் சிஐஎஸ்எஃப் என்று சொல்லப்படும் மத்திய தொழில்துறை பாதுகாப்புப் படையின் சப் இன்ஸ்பெக்டர் ஒருவர் சோதனை நடத்தியிருக்கிறார்.

பெண் அதிகாரிகள்: அந்த பெண்ணிடம் அடையாள அட்டையை அதிகாரிகள் கேட்டிருக்கிறார்கள்.. ஆனால், அடையாள அட்டை இல்லாததால், அப்பெண் ஊழியரை கடுமையான சோதனைக்கு உட்படுத்தியிருக்கிறார்கள்.. அப்போது, சப் இன்ஸ்பெக்டருக்கும், விமானநிலைய பெண் ஊழியருக்கும் வாக்குவாதம் வெடித்துள்ளது.. ஒருகட்டத்தில் ஆவேசமடைந்த பெண், அந்த போலீஸ் அதிகாரியின் கன்னத்தில் ஓங்கி ஒரு அறை விட்டார். இதில் அதிகாரி நிலைகுலைந்து போனார். ஒருகணம் திடுக்கிட்டும் போனார்.
இந்த காட்சிகள் அனைத்துமே அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியிருக்கிறது.. இதையடுத்து, அந்த பெண்ணிடம் உயர் அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டுள்ளனர்..

அரசு ஊழியர்: அரசு ஊழியரை தாக்கியதாக அந்த பெண் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. பாரத் நியாய சன்ஹிதா (பிஎன்எஸ்) பிரிவுகள் 121 (1) (அரசு ஊழியரை தனது கடமையிலிருந்து தடுக்க தானாக முன்வந்து காயப்படுத்துதல்) மற்றும் 132 (பொது ஊழியரைத் தாக்குதல்) ஆகிய பிரிவுகளின் கீழ் பெண் ஊழியர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். மேலும், அப்பெண் கைது செய்யப்பட்டு, அவரிடம் விசாரணையும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
ஆனால், சம்பந்தப்பட்ட பெண் ஊழியரோ வேறு காரணம் சொல்கிறார்.. டியூட்டி முடிந்ததுமே தன்னை வீட்டிற்கு வந்து சந்திக்குமாறு சப்-இன்ஸ்பெக்டர் சொன்னாராம்.. அதனால்தான் கோபத்தில் கன்னத்தில் அறைந்ததாக குற்றஞ்சாட்டி உள்ளார்..
அறிக்கை: தங்களது ஊழியர் "பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்பட்டதாக" ஸ்பைஸ்ஜெட் நிறுவனமும் குற்றஞ்சாட்டியிருக்கிறது.. இதுகுறித்து அறிக்கை ஸ்பைஸ்ஜெட் நிறுவனம் அதிகாரப்பூர்வ அறிக்கை ஒன்றையும் வெளியிட்டிருக்கிறது..
அந்த அறிக்கையில், "பெண் ஊழியரிடம் விமான நிலைய நுழைவு பாஸ் அடையாள அட்டை இருந்தது.. ஆனாலும், எங்களது ஊழியர் சிஐஎஸ்எஃப் பணியாளரால், பணி நேரம் முடிந்ததும் தன்னை வந்து வீட்டில் சந்திக்க சொன்னது உட்பட, தகாத மற்றும் ஏற்றுக்கொள்ள முடியாத வார்த்தைகளுக்கு உட்படுத்தப்பட்டார்..
பாலியல் துன்புறுத்தல்: எங்களது பெண் ஊழியருக்கு எதிரான பாலியல் துன்புறுத்தல் தொடர்பான இந்த கடுமையான வழக்கில் உடனடி சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உள்ளூர் போலீசிலும் புகார் தரப்பட்டுள்ளது.. எங்கள் ஊழியருக்கு முழு ஆதரவுடன் செயல்படுவோம்" என்று ஸ்பைஸ்ஜெட் நிறுவனம் தெரிவித்துள்ளது.
ஆனால், சிஐஎஸ்எஃப் அதிகாரிகள் இதுகுறித்து சொல்லும்போது, "விடிகாலை 4 மணிக்கு ஸ்பைஸ்ஜெட் ஊழியர் அனுராதா ராணி மற்ற ஊழியர்களுடன் விமான நிலையத்திற்குள் நுழைய விடாமல் தடுத்து நிறுத்தப்பட்டார்... உதவி காவல் ஆய்வாளர் கிரிராஜ் பிரசாத் இந்த பணியை மேற்கொண்டுள்ளார்.
என்ன காரணம்: நுழைவாயில் வழியாக உள்ளே செல்ல அவரிடம் உரிய அங்கீகாரம் இல்லை என்பதால், விமான குழுவினருக்கான ஸ்கிரீனிங்கிற்கு செல்லும்படி வலியுறுத்தியுள்ளார்.. அப்போதுதான் 2 தரப்பினருக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதம் முற்றியிருக்கிறது. உடனே, அனுராதா ராணி, போலீஸ் அதிகாரி கிரிராஜ் பிரசாத்தை கன்னத்தில் அறைந்தார்" என்கிறார்கள்.
இப்படி இந்த விமான நிலைய சம்பவத்தில, 2 விதமான காரணங்கள் சொல்லப்படுவதால், இது குறித்து முழு விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது... உண்மை குறித்து முழுவிவரம் விரைவில் வெளிவரும் என போலீசார் நம்பிக்கை தெரிவிக்கின்றனர். இதனிடையே, போலீஸ்காரரை, பெண் ஊழியர் கன்னத்தில் அறையும் வீடியோ இணையத்தில் பரவி வருகிறது.












Click it and Unblock the Notifications