கதறிய பெண்கள்.. கூட்ட நெரிசலில் 10 பேர் பலியானது எப்படி? ஆந்திரா கோவிலில் பக்தர்கள் குவிந்தது ஏன்? பின்னணி
அமராவதி: ஆந்திர மாநிலம் ஸ்ரீகாகுளம் மாவட்டம் காசிபுக்காவில் உள்ள புகழ்பெற்ற வெங்கடேஷ்வராக சுவாமி கோவிலில் இன்று திடீரென்று கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இந்த கூட்ட நெரிசலில் சிக்கி பெண்கள் உள்பட 10 பேர் பலியாகி உள்ளனர். மேலும் பலர் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில் தான் கூட்ட நெரிசல் எப்படி ஏற்பட்டது? திடீரென அதிகமான பக்தர்கள் கோவிலில் குவிந்தது எப்படி? என்பது பற்றிய பரபரப்பான தகவல் வெளியாகி உள்ளது.
ஆந்திர மாநிலம் ஸ்ரீகாகுளம் மாவட்டத்தில் உள்ள காசிபுக்காவில் ஸ்ரீ வெங்கடேஷ்வரா சுவாமி கோவில் அமைந்துள்ளது. இந்த கோவில் மிகவும் புகழ்பெற்றது. ஆந்திரா மட்டுமின்றி தெலுங்கானா உள்பட வெளிமாநிலங்களில் இருந்தும் பக்தர்கள் கோவிலுக்கு வந்து சாமி தரிசனம் செய்வது வழக்கம்.

இந்நிலையில் தான் இன்று காலையில் கோவிலில் ஏராளமான பக்தர்கள் குவிந்தனர். அப்போது கூட்ட நெரிசல் ஏற்பட்டது. மூச்சுவிட முடியாமல் பக்தர்கள் ஒவ்வொருவரும் மயங்கி விழுந்தனர். மேலும் பலர் உயிர் காக்க வேண்டும் என்று கோவில் வளாகத்தில் இருந்து வெளியேறினர். இதனால் கடும் கூட்ட நெரிசல் ஏற்பட்டது.
இந்த கூட்ட நெரிசலில் சிக்கி பெண்கள் உள்பட 10 பேர் பலியாகி உள்ளனர். மேலும் ஏராளமானவர்கள் காயமடைந்துள்ளனர். அவர்கள் அனைவரும் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அங்கு அவர்களுக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர். கூட்ட நெரிசலில் சிக்கிய பக்தர்களுக்கு உரிய முறையில் சிகிச்சை அளிக்க வேண்டும் என்று ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு உத்தரவிட்டார்.
இதுதொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் தான் கோவிலில் கூட்ட நெரிசல் ஏற்பட்டதற்கான காரணங்கள் குறித்து தகவல் வெளியாகி உள்ளது. அதாவது இன்று ஏகாதசி தினமாகும். ஏகாதசி தினத்தில் வெங்கடேஷ்வராவை வணங்க உகந்த நாளாகும். அன்றைய தினம் வெங்கடேஷ்வராவை வணங்கினால் நன்மை உண்டாகும் என்று பக்தர்கள் நம்புகின்றனர்.
அதுவும் இன்று தேவுதனி ஏகாதசியாகும் இந்த நாள் பகவான் விஷ்ணுவுக்கு உகந்த நாளாகும். விஷ்ணுவின் அம்சமான வெங்கடேஸ்வரா கோவில்களில் பக்தர்கள் அதிகளவில் தரிசனம் செய்து வருகின்றனர். இந்த நாளில் விஷ்ணு துயில் எழுவதாகவும், அப்போது மங்கள சக்திகள் செயல்படுவதாகவும் பக்தர்கள் நம்புகின்றனர். இன்றைய தினம் சிறப்பு பூஜைகள், வழிபாடுகள் நடந்து வருகிறது.
அந்த வகையில் தான் இன்று ஸ்ரீகாகுளம் மாவட்டம் காசிபுக்கா வெங்கடேஷ்வரா சுவாமி கோவிலில் மக்கள் தரிசனத்துக்காக குவிந்தனர். அப்போது தான் இந்த கூட்ட நெரிசல் ஏற்பட்டு உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளது. மேலும் கூட்ட நெரிசல் ஏற்பட்ட இடத்தில் போலீசார், அதிகாரிகள் இருந்துள்ளனர். ஆனால் ஆயிரக்கணக்கான பக்தர்கள் இருந்ததால் அவர்களால் எதுவும் செய்ய முடியவில்லை. இருப்பினும் முடிந்தவரை அவர்கள் உடனடியாக கூட்ட நெரிசலில் சிக்கியவர்களை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். இதனால் உயிர் பலி அதிகரிப்பது தடுக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications