”வேலை தேடாதீங்க.. வேலை கொடுக்கும் முதலாளிகளாக மாறுங்கள்”- ஸ்டாண்ட் அப் இந்தியாவில் மோடி!
டெல்லி: இந்தியாவில் பெண்கள் மற்றும் எஸ்.சி, எஸ்.டி பிரிவினர் புதிதாக தொழில் தொடங்க ரூபாய் 1 கோடிவரை கடன் அளிக்கும் "ஸ்டாண்ட் அப் இந்தியா" திட்டத்தை பிரதமர் மோடி தொடங்கிவைத்தார்.
இந்த திட்டத்தின்படி நாட்டில் உள்ள ஒவ்வொரு வங்கிக்கிளையும், ஆண்டுதோறும் தனது எல்லைக்குட்பட்ட பகுதியில் வசிக்கும் ஒரு தலித் இனத்தவருக்கும், ஒரு பெண்ணுக்கும் புதிதாக தொழில் தொடங்க தலா ரூபாய் 10 லட்சம் முதல் ரூபாய் 1 கோடிவரை கண்டிப்பாக கடன் அளிக்க வேண்டும்.

எவ்வித சொத்து அடமானமும் இல்லாமல் இந்த கடனை அளிக்க வேண்டும். ஒருவேளை தகுதியான தலித் இன விண்ணப்பதாரர் கிடைக்காவிட்டால் பழங்குடி இனத்தவருக்கு கடன் அளிக்க வேண்டும். நாடு முழுவதும் பல லட்சம் வங்கிக்கிளைகள் உள்ளன. ஒவ்வொரு வங்கிக்கிளையும் 2 பேருக்கு கடன் அளிப்பதால், ஆண்டுதோறும் நாடு முழுவதும் 2.5 லட்சம்பேர் புதிதாக தொழில் தொடங்க வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
இந்த விழாவில் பேசிய பிரதமர் மோடி, "இந்த திட்டத்தின் மூலம் வேலை தேடுவோர் எல்லாம் வேலை கொடுப்போராக மாறுவார்கள். ஒவ்வொருவரும் சொந்த காலில் நிற்பதற்காக இத்திட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது.
ஏழைகளுக்கு எளிதாக கடன் கிடைப்பதற்காகவே வங்கிகள் தேசியமயமாக்கப்படுவதாக கூறி, காங்கிரஸ் கட்சி, வங்கிகளை தேசியமயமாக்கியது. ஆனால், எங்கள் அரசு "ஜன்தன் யோஜனா" திட்டத்தை கொண்டுவரும் வரை 40 சதவீத மக்கள் வங்கிக்கணக்கே தொடங்காமல்தான் இருந்தனர். ஏழைகளுக்கும் வங்கிக்கதவை திறந்து விட்டது எங்கள் அரசுதான். அதுவே "ஜன்தன் யோஜனா", "முத்ரா" ஆகிய திட்டங்களின் வெற்றி ஆகும்.
"முத்ரா" திட்டத்தின்கீழ் 3 கோடியே 25 லட்சம்பேருக்கு கடன் அளிக்கப்பட்டுள்ளது. "ஜன்தன் யோஜனா" திட்டத்தின்கீழ் 18 கோடி புதிய வங்கிக் கணக்குகள் தொடங்கப்பட்டுள்ளன. இன்றைய தினம், 5 ஆயிரத்து 100 மின் ரிக்ஷாக்கள் வினியோகிக்கப்பட்டு உள்ளன" என்று மோடி தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications