கதறும் அரசு ஊழியர்கள்.. சம்பளத்துக்கு பணமின்றி தவிக்கும் காங்கிரஸ் அரசு! இலவசத்தால் பெரிய சிக்கல்?
சிம்லா: கடும் பொருளாதார நெருக்கடியால் அரசு ஊழியர்களுக்கு வழங்க வேண்டிய ஆகஸ்ட் மாத சம்பளம் என்பது இன்னும் வழங்கப்படவில்லை. இமாச்சல பிரதேசத்தில் முதல் முறையாக இப்படியான நிலை உருவாவதற்கு அங்கு செயல்படுத்தப்பட்டு வரும் இலவச திட்டங்கள் தான் காரணம் என கூறப்படும் நிலையில் அரசு ஊழியர்கள் கதறுகின்றனர்.
இமாச்சல பிரதேசத்தில் காங்கிரஸ் கட்சியின் ஆட்சி நடக்கிறது. முதல்வராக சுக்விந்தர் சிங் உள்ளார். கடந்த 2022ம் ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலில் பாஜகவை வீழ்த்தி காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றது.

இமாச்சல பிரதேசத்தை பொறுத்தவரை அரசு ஊழியர்களுக்கு மாதந்தோறும் 1ம் தேதி சம்பளம் என்பது வழங்கப்பட்டு விடும். ஆனால் இந்த முறை சம்பளம் என்பது ஒன்றாம் தேதி கடந்தும் அரசு ஊழியர்களுக்கு வழங்கப்படவில்லை.
இன்று தேதி 4 ஆகிறது. ஆனால் இன்று வரை அரசு ஊழியர்களின் வங்கி கணக்குக்கு சம்பளம் என்பது வழங்கப்படவில்லை. இதனால் அரசு ஊழியர்கள் கடும் கோபமடைந்துள்ளனர். இதுதொடர்பாக அரசு ஊழியர்கள் சங்கத்தின் சார்பில் மாநில தலைமை செயலாளருக்கு கடிதம் எழுதப்பட்டுள்ளது.
இதுபற்றி இமாச்சல பிரதேச மாநில அரசு தலைமை செயலக ஊழியர்களின் கூட்டமைப்பின் தலைவர் சஞ்சீவ் சர்மா கூறுகயைில், ‛‛நாங்கள் வழக்கமாக மாதத்தின் முதல் நாளில் சம்பளத்தை பெறுவோம். ஆனால் இப்போது அந்த தேதியில் சம்பளம் வரவில்லை. இப்படியான சூழலை நாங்கள் இதற்கு முன்பு சந்தித்தது இல்லை. இதுதொடர்பாக தலைமை செயலாளர் மற்றும் நிதித்துறையின் முதன்மை செயலாளருக்கு கடிதம் எழுதி உள்ளோம்.
இந்த கடிதத்தில் முக்கிய கோரிக்கையை வைத்துள்ளோம். அதாவது வங்கிகள் சார்பில் தங்களின் வசூலிக்கப்படும் கடன் தொகைக்கு இந்த மாதம் அபராதம் விதிக்க தடை விதிக்க வேண்டும் என்று கூறியுள்ளோம். சம்பள தாமதத்தால் இந்த கோரிக்கை என்பது வைக்கப்பட்டுள்ளது. அரசு விரைந்து சம்பளம் வழங்க வேண்டும். இல்லாவிட்டால் அடுத்தக்கட்ட நடவடிக்கை பற்றி ஆலோசனை செய்வோம்'' என்றார்.
இதுபற்றி முதல்வர் சுக்விந்தர் சிங் கூறுகையில், ‛‛மாநிலம் பொருளாதார நெருக்கடி நிலையை தாண்டிவிட்டது. பொருளாதாரத்தை சீர்ப்படுத்த தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட உள்ளது'' என்றார். இதற்கிடையே தான் இமாச்சல பிரதேச மாநிலத்தில் செயல்படுத்தப்படும் இலவச திட்டங்களால் தான் அந்த மாநிலம் பொருளாதார நெருக்கடியை சந்தித்துள்ளதாக கூறப்படுகிறது.
இதுபற்றி எதிர்கட்சி தலைவர் ஜெய்ராம் தாக்கூர் கூறுகையில், ‛‛அரசு இப்பிரச்னையை உரிய தீவிரத்துடன் அணுகவில்லை. முதல்வர் சில சமயம் பொருளாதார நெருக்கடி என்றும், சில நேரம் இல்லை என்றும் கூறி வருகிறார். காங்கிரஸ் கட்சியின் தலைவர்களில் ஒருவரான ராகுல் அளித்த பொய்யான வாக்குறுதியால் நிதி நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இதனை மற்ற மாநிலங்களும் பாடமாக கற்றுக் கொள்ள வேண்டும்'' என்றார்.












Click it and Unblock the Notifications