"இரவு பார்ட்டி சென்றால்.. நீங்கள் பலாத்காரம் செய்யப்படலாம்!" குஜராத் போலீஸ் ஒட்டிய போஸ்டரால் சர்ச்சை
காந்திநகர்: இரவு பார்ட்டிகளுக்கு செல்வதால் தான் பெண்கள் பலாத்காரம் செய்யப்படுகிறார்கள் என்பதால் இரவு வீட்டிலேயே பாதுகாப்பாக இருக்கும்படி சொல்லி குஜராத் போலீசார் சார்பில் நடந்த விழிப்புணர்வு பிரச்சாரத்தில் ஓட்டப்பட்ட போஸ்டர்களால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இது அங்குப் பெரிய விவாதமாக வெடித்த நிலையில், குஜராத் போலீசார் இது குறித்து விளக்கமளித்துள்ளனர்.
பெண்கள் பாதுகாப்பை உறுதி செய்ய மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதேநேரம் பெண்கள் மீதான வன்முறைக்குப் பெண்கள் தான் காரணம் எனச் சொல்லும் போக்கும் இருக்கவே செய்கிறது. இதற்கிடையே குஜராத்திலும் இப்போது அதுபோன்ற ஒரு மோசமான சம்பவம் நடந்துள்ளது.

சர்ச்சை போஸ்டர்
அதாவது குஜராத் அகமதாபாத்தில் சாலை தடுப்புகளில் ஒட்டப்பட்ட போஸ்டர்கள் சர்ச்சையைக் கிளப்பியுள்ளன. அந்த போஸ்டர்களில் "இரவு விருந்துகளுக்குச் செல்ல வேண்டாம்.. நீங்கள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகலாம் அல்லது கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகலாம்" மற்றும் "உங்கள் நண்பருடன் இருண்ட, தனிமையான இடங்களுக்குச் செல்ல வேண்டாம், பாலியல் வன்கொடுமை நடந்தால் என்ன செய்வது?" போன்ற வாசகங்கள் அதில் இடம்பெற்றுள்ளன.
அதாவது இரவு நேர பார்ட்டிகளுக்கு பெண்கள் செல்லக்கூடாது.. அதுபோல இரவு பார்ட்டிகளுக்கு செல்வதால் தான் பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் நடக்கிறது என்பதைப் பொருள்படும் வாசகங்கள் அதில் உள்ளன. பார்ட்டிகளை தவிர்த்தால் பாலியல் வன்கொடுமை நடக்காது என்பதை மறைமுகமாக வலியுறுத்தின.
என்ன நடந்தது
இதில் விஷயம் என்னவென்றால் அகமதாபாத் டிராபிக் போலீஸ் சார்பில் நடத்தப்பட்ட விழிப்புணர்வு நிகழ்ச்சியின் ஒரு பகுதியாகவே இந்த போஸ்டர்கள் ஒட்டப்பட்டதாம். இது பெரும் சர்ச்சையாக வெடித்தது. போலீசார் எப்படி இதுபோன்ற போஸ்டர்களை அனுமதிக்கலாம்.. அது முற்றிலும் தவறான ஒரு அணுகுமுறை என்று பலரும் சாடினர்.
போலீஸ் விளக்கம்
இதற்கிடையே போக்குவரத்து பிரிவின் துணை காவல் ஆணையர் சஃபின் ஹசன் இது குறித்து விளக்கமளித்துள்ளார். அவர் கூறுகையில், "ஆம், எங்களிடம் இதற்கு அனுமதி பெற்றார்கள். ஆனால் போக்குவரத்து விழிப்புணர்வுக்காக என்று சொல்லியே அனுமதி பெற்றனர்.. இருப்பினும், போக்குவரத்து விழிப்புணர்வுக்குத் தொடர்பில்லாத போஸ்டர்களை அவர்கள் ஒட்டியுள்ளனர். இது குறித்து எங்களுக்குத் தகவல் கிடைத்தவுடன் சம்பந்தப்பட்ட போஸ்டர்களை அகற்றிவிட்டோம். இது குறித்து விசாரணை நடத்தி தேவையான நடவடிக்கை எடுப்போம்" என்றார்.
'சதர்கதா குரூப்' (Satarkata Group) என்ற தொண்டு நிறுவனம் இந்த சுவரொட்டிகளை ஒட்டியதாக மேற்கு போக்குவரத்து துணை காவல் ஆணையர் நீட்டா தேசாய் தெரிவித்தார். அவர் மேலும், "அந்த தொண்டு நிறுவனம் எங்களை அணுகி, பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் போக்குவரத்து விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்த அனுமதி கோரியது. போக்குவரத்து விழிப்புணர்வு தொடர்பான சுவரொட்டிகள் மட்டுமே எங்களுக்குக் காட்டப்பட்டன. இந்த சர்ச்சைக்குரிய சுவரொட்டிகளை எங்களுக்குக் காட்டவில்லை. எங்கள் அனுமதியின்றி இதை ஒட்டிவிட்டனர்" என்று விளக்கமளித்தார்.
நடவடிக்கை எடுப்போம்
இந்த சுவரொட்டிகள் குறித்த வீடியோவை வெளியிட்டுள்ள ஆம் ஆத்மி கட்சியின் குஜராத் பிரிவு, ஆளும் பாஜகவை மிகக் கடுமையாகச் சாடியது. அவர்கள் மேலும், "முதலமைச்சரும், பாஜக தலைவர்களும் பெண்களின் பாதுகாப்பு குறித்துப் பேசுகிறார்கள். ஆனால் இன்று அகமதாபாத் போன்ற ஒரு பெரிய நகரத்தில் இந்த சுவரொட்டிகள் குஜராத்தின் யதார்த்தத்தை வெளிப்படுத்துகின்றன. குஜராத் பெண்கள் இரவில் வீட்டிலிருந்து வெளியே செல்ல வேண்டுமா வேண்டாமா என்பதுதான் முதலமைச்சரிடம் எங்கள் கேள்வி?" என்று கேள்வி எழுப்பியுள்ளது.












Click it and Unblock the Notifications