மகாராஷ்டிரா டோம்பிவிலி நகராட்சி தேர்தலில் சிவசேனா வெற்றி.. துள்ளி குதிக்கும் சு.சாமி
மும்பை: மகாராஷ்டிராவின் கல்யாண்- டோம்பிவிலி நகராட்சி தேர்தலில் சிவசேனா வென்றிருப்பது இந்துத்துவா சக்திகளுக்கான வெற்றி என்று பாரதிய ஜனதாவில் உள்ள சுப்பிரமணியன் சுவாமி கருத்து தெரிவித்திருப்பது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
மத்தியில் பிரதமர் மோடி தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசில் சிவசேனா இடம்பெற்றுள்ளது; அதேபோல் மகாராஷ்டிராவில் பாரதிய ஜனதா- சிவசேனா கூட்டணி ஆட்சியில் இருக்கிறது.
இருப்பினும் சிவசேனா, பாரதிய ஜனதா கட்சியுடன் மல்லுக்கட்டிக் கொண்டுதான் இருக்கிறது. பாரதிய ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்து வெளியேறவும் சிவசேனா தயங்காது என்று அக்கட்சித் தலைவர் உத்தவ் தாக்கரே அறிவித்திருந்தார். இதையும் நாங்கள் எதிர்கொள்வோம் என்று மகாராஷ்டிரா முதல்வர் பட்னாவிஸ் பதிலடி கொடுத்திருந்தார்.

இந்த நிலையில் மகாராஷ்டிராவில் கல்யாண்- டோம்பிவிலி நகராட்சி தேர்தலில் சிவசேனாவும், பாரதிய ஜனதா கட்சியும் தனித்து போட்டியிட்டன. இத்தேர்தலில் சிவசேனா அதிக இடங்களையும் 2-வது இடத்தை பாரதிய ஜனதாவும் பெற்றுள்ளன. இருப்பினும் சிவசேனா- பாரதிய ஜனதா இடையேயான உறவில் விரிசல் நீடிக்கிறது.
இதனிடையே கல்யாண்- டோம்பிவிலி நகராட்சி தேர்தலில் சிவசேனாவின் வெற்றிக்காக பாரதிய ஜனதாவில் உள்ள சுப்பிரமணியன் சுவாமி மகிழ்ச்சி தெரிவித்து ட்விட்டரில் பதிவிட்டிருப்பது அக்கட்சியில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
Kalyan Dombivili result is a setback to Award Wapasis and missionaries since Hindutva forces win 90% of the seats despite division of votes.
— Subramanian Swamy (@Swamy39) November 2, 2015 சுப்பிரமணியன் சுவாமி தமது ட்விட்டர் பக்கத்தில், கல்யாண்- டோம்பிவிலி தேர்தல் வெற்றியானது மிஷினரிகளுக்கும் விருதுகளை மத்திய அரசிடம் திருப்பிக் கொடுப்போருக்கும் பின்னடைவு; வாக்குகள் பிரிந்த போதும் 90% இடங்களை இந்துத்துவா சக்திகளே கைப்பற்றியுள்ளன என்று பதிவிட்டிருக்கிறார்.
பாரதிய ஜனதாவுடன் பகிரங்கமாக மோதிவரும் சிவசேனாவின் வெற்றிக்கும் சேர்த்து சுப்பிரமணியன் சுவாமி மகிழ்ச்சியை எப்படி வெளிப்படுத்தலாம் என்பது சுவாமிக்கு எதிரான பா.ஜ.க.வினர் கேள்வி.












Click it and Unblock the Notifications