சுரங்க மீட்பு பணியில் ஈடுபட்ட அனைவரது உத்வேகத்திற்கும் வணக்கம் செலுத்துகிறேன்.. மோடி நெகிழ்ச்சி
டேராடூன்: டேராடூன்: 17 நாட்களாக சுரங்கத்தில் தவித்த 41 தொழிலாளர்களும் பத்திரமாக மீட்கப்பட்டுள்ள நிலையில், பிரதமர் மோடி மீட்பு பணியில் ஈடுபட்ட அனைவருக்கும் பாராட்டுக்களை தெரிவித்து தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
உத்தரகாண்ட் மாநிலம் உத்தரகாசி அருகே உள்ள சில்க்யாரா என்ற பகுதியில் யமுனோத்ரி தேசிய நெடுஞ்சாலை உள்ளது. இந்த நெடுஞ்சாலையில் சுரங்கப் பாதை தோண்டும் பணி நடைபெற்று வந்தது. இதில் ஏராளமான தொழிலாளர்கள் ஈடுபட்டிருந்தனர். இதில், கடந்த 12-ம் தேதி வழக்கம் போல் முழு வீச்சில் பணிகள் நடைபெற்று கொண்டிருந்தபோது திடீரென எதிர்பாராத விதமாக இந்த சுரங்கத்திற்குள் நிலச்சரிவு ஏற்பட்டது.

இதில் சுமார் 41 தொழிலாளர்கள் சுரங்கத்திற்குள் சிக்கிக்கொண்டனர். சுரங்கத்திற்குள் தொழிலாளர்கள் சிக்கிய தகவல் கிடைத்த உடனடியாக மீட்புக் குழுவினர் அங்கு விரைந்தனர். சுரங்கத்தின் இடிபாடுகளில் துளையிட்டு, இரும்பு குழாய்களை செலுத்தி அதன் வழியே தொழிலாளர்களை மீட்க மீட்புக் குழுவினர் திட்டமிட்டனர். அதன்படி முதலில் அமெரிக்க எந்திரம் மூலம் இடிபாடுகளில் துளையிடும் பணி தொடங்கி நடந்து வந்தது.
அதில் தொய்வு ஏற்பட்டதன் காரணமாக மாற்று வழியில் மீட்பு பணிகள் நடந்தது. அடுத்ததாக பிளான் பி படி மீட்பு பணிகள் தொடர்ந்தது. இப்பாடியாக மீட்பு குழுவினர் 17- வது நாளாக போராடி தற்போது இன்று இரவு 8 .30 மணியளவில் அனைத்து அதாவது 41 தொழிலாலர்களையும் பத்திரமாக மீட்டனர். இதனால் அங்கு கூடியிருந்த பலரும் மகிழ்ச்சியில் திளைத்தனர். ஒவ்வொரு தொழிலாளர்களும் மீட்கப்படும் போது உள்ளூர் மக்கள் இனிப்புகள் வழங்கியும், பட்டாசு வெடித்தும் கொண்டாடினர்.
இந்த நிலையில், பிரதமர் மோடி 41 தொழிலாளர்களையும் பத்திரமாக மீட்கும் பணியில் ஈடுபட்ட அனைத்து மீட்பு குழுவினருக்கும் பாராட்டு தெரிவித்து எக்ஸ் தளத்தில் ட்வீட் போட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:- உத்தரகாண்டில் மீட்பு பணிகள் வெற்றி அடைந்து இருப்பது அனைவரையும் மகிழ்ச்சி அடைய வைத்துள்ளது. சுரங்கத்தில் சிக்கிய தொழிலாளர்களின் துணிச்சலும் பொறுமையும் அனைவருக்கும் உத்வேகம் அளிக்க கூடியது ஆகும்.
தொழிலாளர்கள் அனைவரும் நலமாகவும், ஆரோக்கியமாகவும் இருக்க வாழ்த்துகிறேன். நீண்ட கால காத்திருப்புக்கு பிறகு தொழிலாளர்கள் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளது பெரும் திருப்தி அளிக்கிறது. இந்த சவாலான கட்டத்தில் தொழிலளர்களின் குடும்பத்தினர் காட்டிய பொறுமையும் துணிச்சலும் பாராட்டுக்குரியது.
மீட்பு பணியில் ஈடுபட்ட அனைவரது உதவேகத்திற்கும் நான் வணக்கம் செலுத்துகிறேன். வீரர்களின் துணிச்சலும் உறுதியும் நமது தொழிலாளர்களுக்கு புது வாழ்வை அளித்துள்ளது. மீட்பு பணியில் ஈடுபட்ட ஒவ்வொருவரும் மனிதநேயம் மற்றும் குழு பணிக்கு ஒரு உன்னதமான முன்னதாரணமாக திகழ்ந்துள்ளனர். இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications