இரவு 8-12 மணிவரை 4 மணிநேரம் தரூரிடம் துருவித் துருவி கேள்வி கேட்ட போலீஸ்
டெல்லி: சுனந்தா கொலை வழக்கு தொடர்பாக முன்னாள் மத்திய அமைச்சர் சசி தரூரிடம் டெல்லி போலீசார் திங்கட்கிழமை இரவு 4 மணிநேரம் விசாரணை நடத்தியுள்ளனர்.
முன்னாள் மத்திய அமைச்சர் சசி தரூரின் மனைவி சுனந்தா புஷ்கர் கடந்த ஆண்டு ஜனவரி மாதம் 17ம் தேதி டெல்லியில் உள்ள லீலா பேலஸ் ஹோட்டலில் பிணமாகக் கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அவர் இறந்து ஓராண்டு கழித்து அவர் விஷம் வைத்து கொலை செய்யப்பட்டதாக டெல்லி போலீஸ் கமிஷனர் பஸ்ஸி தெரிவித்தார். இதையடுத்து சுனந்தாவின் வழக்கு கொலை வழக்காக மாற்றப்பட்டு விசாரணை நடந்து வருகிறது.
இந்நிலையில் இந்த வழக்கு தொடர்பாக திங்கட்கிழமை இரவு 8 மணி முதல் 12 மணிவரை தொடர்ந்து நான்கு மணிநேரம் தரூரிடம் போலீசார் விசாரணை நடத்தியுள்ளனர்.

நால்வர் குழு
தெற்கு டெல்லியில் உள்ள வசந்த் விஹார் காவல் நிலையத்தின் சி பிளாக்கில் உள்ள அறை ஒன்றில் தரூரிடம் விசாரணை நடந்துள்ளது. அவரிடம் கூடுதல் டிசிபி குஸ்வாஹ், டிசிபி பிரேம் நாத், இன்ஸ்பெக்டர் ராஜேந்தர் சிங் மற்றும் விசாரணை அதிகாரி வி.கே.பி.எஸ். யாதவ் ஆகியோர் கேள்விகள் கேட்டுள்ளனர். விசாரணை நடந்த அறையில் போலீஸ் அதிகாரிகள் செல்போன் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டது.

50 கேள்விகள்
போலீசார் தரூரிடம் 50 கேள்விகள் கேட்டுள்ளனர். முதலில் டென்ஷனாக இருந்த தரூர் பின்னர் பதட்டமில்லாமல், சிரித்துக் கொண்டு பதில் அளித்துள்ளார். சுனந்தா இறந்த தினம் பற்றி பேசும்போது மட்டும் கண்கலங்கியுள்ளார்.

ஆல்பிராக்ஸ்
சுனந்தாவுக்கு தூங்குவதில் பிரச்சனை இருந்தது. அதனால் அவர் ஆல்பிராக்ஸ் எடுத்துக் கொண்டார் என்று தரூர் முன்பு தெரிவித்திருந்தார். அவரது அறையில் ஆல்பிராக்ஸ் அட்டைகள் கிடந்தன. ஆனால் சுனந்தாவின் உடலில் ஆல்பிராக்ஸ் இல்லை. இது குறித்து போலீசார் தரூரிடம் கேட்டுள்ளனர்.

லூபஸ்
சுனந்தா இறக்கும் வரை நலமாக இருந்துள்ளார். அப்படி இருக்கையில் அவருக்கு லூபஸ் என்ற நோய் எதிர்ப்பு சக்தி பாதிக்கப்படும் நோய் இருந்ததாக ஏன் கூறினீர்கள் என்று போலீசார் தரூரை கேட்டுள்ளனர்.

காயங்கள்
சுனந்தாவின் உடலில் 15 இடங்களில் காயம் இருந்துள்ளது. அவரை நீங்கள் தாக்கினீர்களா என்று போலீஸ் கேட்டதற்கு தான் அவரை தாக்கவில்லை என்று தரூர் தெரிவித்துள்ளார்.

சண்டை
சுனந்தாவுடன் சண்டை போட்டதாகவும், தங்களுக்குள் கருத்து வேறுபாடு இருந்ததாகவும் தரூர் தற்போது தெரிவித்துள்ளார். ஆனால் முன்போ தனக்கும், சுனந்தாவுக்கும் இடையே எந்தவித பிரச்சனையும் இல்லை என்றார்.

தரார்
பாகிஸ்தானைச் சேர்ந்த பத்திரிக்கையாளர் மெஹர் தராரை உங்களுக்கு எப்படி தெரியும்? அவருடன் நீங்கள் துபாயில் தங்கினீர்களா என்று போலீசார் கேட்டுள்ளனர்.

போலீஸ்
ஹோட்டல் அறையில் சுனந்தா நினைவில்லாமல் கிடந்ததை பார்த்தவுடன் நீங்கள் ஏன் ஆம்புலன்ஸுக்கோ, போலீஸுக்கோ தகவல் அளிக்கவில்லை என்று போலீசார் கேட்டுள்ளனர்.

மூன்றாவது திருமணம்
தரூரும், சுனந்தாவும் கடந்த 2010ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். இருவருக்குமே இது மூன்றாவது திருமணம் ஆகும். தரூருக்கும், மெஹர் தராருக்கும் இடையே கள்ளத்தொடர்பு இருப்பதாக தெரிவித்த 2 நாட்கள் கழித்து சுனந்தா பிணமாகக் கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications