தரூரும், சுனந்தாவும் காதல் ஜோடி போல மகிழ்ச்சியாக இருந்தார்களே: தோழி
திருவனந்தபுரம்: மத்திய அமைச்சர் சசி தரூரின் மனைவி சுனந்தா புஷ்கர் நிச்சயம் தற்கொலை செய்து கொண்டிருக்க மாட்டார் என்று அவருடைய கேரளத்து தோழி லேகா சீனிவாசன் தெரிவித்துள்ளார்.
மத்திய அமைச்சர் சசி தரூரின் உறவினரும், முன்னாள் இந்திய தூதருமான சீனிவாசனின் மனைவி லேகா சீனிவாசன். லேகா மர்மமான முறையில் இறந்த தரூரின் மனைவி சுனந்தா புஷ்கரின் நெருங்கிய தோழி ஆவார். லேகா திருவனந்தபுரத்தில் கருணா என்ற அறக்கட்டளையை நடத்தி வருகிறார்.
அண்மையில் நடந்த அவரது அறக்கட்டளையின் ஆண்டு விழாவில் சுனந்தா தனது கணவருடன் கலந்து கொண்டார்.

இந்நிலையில் சுனந்தா பற்றி லேகா கூறுகையில்,
எங்கள் அறக்கட்டளை விழாவுக்கு வந்தபோது சுனந்தா நோயால் அவதிப்பட்டார். சுனந்தாவின் மரணம் சந்தேகமானது என்கிறார்கள். அவர் நிச்சயமாக தற்கொலை செய்து கொண்டிருக்க மாட்டார். சுனந்தா தான் நோயால் அவதிப்படுவதை வெளியே சொல்ல மாட்டார். அவரை கடைசியாக பத்மநாப சுவாமி கோவிலில் நடந்த லட்சதீப திருவிழாவில் பார்த்தேன். அப்போது அவர் சோர்வாக காணப்பட்டார்.
அவர் இப்படி திடீர் என்று இறப்பார் என்று நான் நினைத்து கூட பார்க்கவில்லை. சசி தரூரும், சுனந்தாவும் காதல் ஜோடி போன்று மகிழ்ச்சியாக இருந்தனர். சுனந்தாவின் இந்த முடிவு அதிர்ச்சி அளிக்கிறது என்றார்.
சுனந்தா திருவனந்தபுரத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் கடந்த 12ம் தேதி முதல் 14ம் தேதி வரை சிகிச்சை பெற்றுள்ளார். அப்போது அவருக்கு பல பரிசோதனைகள் செய்யப்பட்டிருக்கிறது. வரும் 21ம் தேதி சுனந்தா மீண்டும் பரிசோதனைக்கு வர வேண்டும் என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
நோயால் அவதிப்பட்ட சுனந்தா அண்மை காலமாக ஏராளமான மாத்திரைகளை சாப்பிட்டு வந்துள்ளார். அவர் டெல்லிக்கு விமானம் மூலம் கிளம்பும்போதே நடக்க முடியாமல் சக்கர நாற்காலியில் விமானத்தில் ஏறியுள்ளார் என்று தரூரின் செயலாளர் சதாசிவன் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications