மாண்புமிகு பிரதமருக்கு... மரணப் படுக்கையில் சுனிதா எழுதிய ஓர் உருக்கமான கடிதம்!

Subscribe to Oneindia Tamil

டெல்லி : புற்றுநோயுடன் போராடிய படி மரணப்படுக்கையில் சுனிதா என்ற நோயாளி பிரதமர் மோடிக்கு எழுதிய கடைசி கடிதம் ஒன்று இணையத்தில் உலா வந்து கொண்டிருக்கிறது. அக்கடிதத்தில் அவர், புகையிலை விற்பனையை ஒழுங்கு செய்யும் சட்டம் சரிவரப் பயன் படுத்தப்பட வேண்டும் என பிரதமரிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

சுனிதா தோமர் (28)... திரையரங்கிற்கு சென்று படம் பார்க்கும் பெரும்பாலானோர்க்கு பெரிதும் அறிமுகம் ஆனவர் தான் இவர். ஆம், திரைப்படத்திற்கு முன் வரும் விழிப்புணர்வு பிரச்சார விளம்பரத்தில் ஒரு பெண் தோன்றி, புகையிலையால் தன் வாழ்வு சீரழிந்தது குறித்து விளக்குவாரே அவர் தான் இந்த சுனிதா.

அந்த விளம்பரத்தில் ‘புகையிலை எவ்வாறு தன் வாழ்க்கையைப் புரட்டிப் போட்டது என அவர் விளக்கி இருப்பார்.

இந்நிலையில், புற்றுநோயோடு போராடிய சுனிதா நேற்று அதிகாலை உயிரிழந்தார். ஆனால், அதற்கு முன்னதாக தனது மரணப்படுக்கையில் இருந்தபடியே பிரதமர் மோடிக்கு அவர் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.

Sunita Tomar, Face of Anti-Tobacco Campaign, Dies at 28

அக்கடிதத்தில் அவர் கூறியிருப்பதாவது:-

'மாண்புமிகு பிரதமருக்கு...

இந்திய தேசத்தின் வளர்ச்சிக்காக நீங்கள் எடுத்துவரும் நடவடிக்கைகளை நான் வரவேற்கிறேன். நான், சுனிதா தோமர், ஒரு புற்றுநோயாளி. இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் எனக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. அப்போது எனக்கு வயது 26. அந்த அறுவை சிகிச்சை எனது உயிரைக் காப்பாற்றினாலும், என் வாழ்வு உருக்குலைந்துவிட்டது.

கோடூரமான விளைவு...

அறுவை சிகிச்சைக்குப் பின்னர் எனது முகத்தோற்றம் முற்றிலும் மாறிவிட்டது. என்னை சந்திக்கவோ, என்னிடம் சகஜமாக பேசவோ பலரும் தயங்கினர். புகையிலை பயன்பாட்டின் மிகக் கொடூரமான விளைவை நான் சந்தித்திருக்கிறேன்.

வேதனையான வாழ்க்கை...

உடல், மன, பொருளாதார, சமூக ரீதியாக நான் பல்வேறு துன்பங்களை சந்தித்து வருகிறேன். திரவ உணவுகளை மட்டுமே என்னால் உண்ண முடியும். புற்றுநோய் பாதிப்பு என்னை எப்போது வேண்டுமானாலும் மீண்டும் ஆட்கொள்ளலாம் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். வாழ்க்கையை வேதனையுடன் நகர்த்துகிறேன்.

வேதனை... பயம்

புகையிலை மிக எளிதாக கிடைக்கிறது. எனவே இதை யார் வேண்டுமானாலும் பயன்படுத்த முடிகிறது. சிறு பிள்ளைகள் புகையிலை பயன்படுத்துவதை பார்க்கும்போது நான் மிகவும் வேதனைப்படுகிறேன்.

புகையிலை விற்பனையை தடை செய்ய வேண்டியது அவசியம். ஆனால், அதற்கு முன்னதாக புகையிலை விற்பனையை ஒழுங்கு செய்யும் சட்டம் இருந்தும் அது சரிவர நடைமுறைப்படுத்தப்படாமல் இருப்பது இன்னும் வேதனையளிக்கும் செயல். யாராவது புகையிலை பயன்படுத்துவதைப் பார்த்தால் எனக்கு பயமாக இருக்கிறது.

எனது முயற்சி...

"Voice of Tobacco victims" (புகையிலை பயன்பாட்டால் பாதிக்கப்பட்டவர்கள் குரல்) என்ற பிரச்சாரத்தின் மூலம் புகையிலையின் தீமையை எடுத்துரைக்க விரும்புகிறேன். எனது முயற்சியெல்லாம், புகையிலையில் இருந்து நிறைய பேரை காப்பாற்ற வேண்டும் என்பதே. புகையிலை உடலில் ஏற்படுத்தும் பாதிப்பை மக்களுக்கு எடுத்துரைக்க வேண்டும்.

நாடாளுமன்றக் குழுவின் அறிக்கை...

அண்மையில், புகையிலை தொடர்பான அரசியல் சட்டப்பிரிவுக்கான நாடாளுமன்ற நிலைக்குழுத் தலைவர் திலீப் காந்தி சுகாதார அமைச்சகத்துக்கு ஒரு கடிதம் எழுதியுள்ளார். அதில், சிகரெட் மற்றும் புகையிலைப் பொருட்களின் பாக்கெட்டுகள் மீது புற்றுநோய் அபாயம் குறித்து எச்சரிக்கையை பெரிய அளவிலான படங்களாக அச்சிடவேண்டும் என்ற முடிவை மத்திய அரசு தள்ளிவைக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.

விழிப்புணர்வு தேவை...

அரசுத் துறையில் இவர் பொறுப்பில் இருக்கும் அதிகாரிகளே பொறுப்பற்ற தன்மையுடன் நடப்பது எனக்கு வேதனை அளிக்கிறது. இன்றளவும், புகையிலை பயன்படுத்தும் பெரும்பாலானோருக்கு அதன் தீங்கு தெரிவதில்லை. படிப்பறிவின்மையும், போதிய விழிப்புணர்வு இல்லாமையுமே இதற்குக்க் காரணம். பெரிய அளவிலான புகைப்பட எச்சரிக்கையை அச்சிடுவது புகையிலை பயன்படுத்தும் படிப்பறிவற்றவர்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தும்.

புகையிலைக்கு எதிராக பேசுங்கள்...

இந்தியப் பிரதமர்களில் நீங்கள் ஒருவரே உங்கள் எண்ணங்கள் மக்களைச் சென்றடைவதை உறுதி செய்வது மட்டுமல்லாமல் மக்கள் கருத்துகளுக்கு மரியாதை அளிக்கிறீர்கள். அதன் காரணமாகவே நான் உங்களுக்கு இக்கடிதத்தை எழுதுகிறேன். வானொலியில், நீங்கள் போதைப் பொருள் தீமை குறித்து பேசினீர்கள். அதேபோல், புகையிலைக்கு எதிராகவும் பேசுவீர்கள் என நம்புகிறேன்.

புகையிலை அற்ற தேசமாக்குங்கள்...

மேலும், புகையிலைப் பொருட்களின் பாக்கெட்டுகள் மீது புற்றுநோய் அபாயம் குறித்து எச்சரிக்கையை பெரிய அளவிலான படங்களாக அச்சிடும் சட்டப்பிரிவுக்கு நீங்கள் ஒப்புதல் வழங்குவீர்கள் என நான் எதிர்ப்பார்க்கிறேன். இந்த தேசத்தை புகையிலை அற்ற தேசமாக மாற்றுவீர்கள் என நம்புகிறேன்' என இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

எச்சரிக்கை...

மரணப் படுக்கையில் இருந்த போது, வேதனைகளுக்கிடையேயும் பிரதமருக்கு சுனிதா இந்தக் கடிதத்தை எழுதக் காரணம், மத்திய அரசு தான்.

கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் மத்திய சுகாதார அமைச்சகம் சிகரெட் மற்றும் புகையிலைப் பொருட்களின் பாக்கெட்டுகள் மீது புற்றுநோய் அபாயம் குறித்து எச்சரிக்கையை பெரிய அளவிலான படங்களாக அச்சிடவேண்டும் என்ற முடிவு செய்தது.

தற்காலிகமாக நிறுத்திவைப்பு...

அதன்படி சிகரெட் பாக்கெட்டுகளில் தற்போது 40% அளவுக்கு அச்சிடப்படும் எச்சரிக்கை படம் 85% பெரிதாக்கப்படவேண்டும். மத்திய சுகாதாரத்துறையின் இந்த முடிவு இன்று (ஏப்ரல் 1) முதல் அமலுக்கு வருவதாக இருந்தது.

ஆனால், சிகரெட் பாக்கெட்டுகளில் பெரிய அளவில் எச்சரிக்கை செய்யும் படங்களை அச்சிடவேண்டும் என்ற முடிவை மத்திய அரசு தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளது.

புகையிலை தொடர்பான சட்டப்பிரிவு ஆய்வு...

இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்னர் 2003-ம் ஆண்டு சிகரெட் மற்றும் புகையிலைப் பொருட்கள் தொடர்பான சட்டப்பிரிவை ஆய்வு செய்த பாரதிய ஜனதா எம்.பி. திலீப்காந்தி தலைமையிலான நாடாளுமன்ற நிலைக்குழு மத்திய சுகாதார அமைச்சருக்கு அறிக்கை ஒன்றை அனுப்பியது.

அதில், ‘இந்தியாவில் நடத்தப்பட்ட எந்த ஆராய்ச்சியும், புகையிலைப் பொருட்களால் புற்றுநோய் வரும் என்பதை உறுதிப்படுத்தவில்லை. வெளிநாடுகளின் 2 ஆய்வுகள்தான் அப்படி கூறுகின்றன. புகையிலையின் காரணமாக மட்டுமே புற்றுநோய் ஏற்படுவதில்லை.

விரிவான ஆய்வு தேவை...

இது தொடர்பாக விரிவான ஆய்வு நடத்தவேண்டியுள்ளது. மேலும் பீடி, சிகரெட் போன்ற புகையிலை பொருட்கள் தயாரிப்பு தொழிலில் ஈடுபட்டுள்ள விவசாயிகள், உற்பத்தியாளர்கள், தொழிலாளர்கள் மற்றும் இத்தொழிலின் வருவாய் ஆகியவற்றின் மீது ஏற்படும் தாக்கம் குறித்தும் விரிவாக ஆய்வு செய்யப்படவேண்டி இருக்கிறது.

எனவே எச்சரிக்கை செய்யும் படங்களை பெரிய அளவில் சிகரெட், புகையிலை பாக்கெட்டுகளில் அச்சிடவேண்டும் என்கிற முடிவை சுகாதார அமைச்சகம் தற்காலிகமாக நிறுத்தி வைக்கவேண்டும்" எனத் தெரிவிக்கப் பட்டிருந்தது.

இந்த அறிக்கையைத் தொடர்ந்து தான் தனது கடைசி கோரிக்கையாக சுனிதா பிரதமருக்கு இந்தக் கடிதத்தை எழுதியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+