15 வாக்குச்சாவடி முகவர்கள் கடத்தல்? ஜெகன் கட்சியினர் மீது தெலுங்கு தேசம் புகார்! தேர்தல் நாளில் பரபர
அமராவதி: ஆந்திராவில் வாக்குச்சாவடிக்குச் செல்லும் போது தங்கள் கட்சியின் 15 முகவர்களை ஒஸ்எஸ்ஆர் காங்கிரஸ் கடத்தி உள்ளதாகத் தெலுங்கு தேசம் கட்சி புகார் அளித்துள்ளது பெரும் பரபரப்பைக் கிளப்பியுள்ளது.
இன்று 4ஆம் கட்ட லோக்சபா தேர்தல் நடைபெறும் நிலையில், அத்துடன் ஆந்திராவில் சட்டசபைத் தேர்தலும் நடைபெறுகிறது. அங்குள்ள 175 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாகத் தேர்தல் நடைபெறுகிறது.

லோக்சபா மற்றும் சட்டசபை என இரண்டிற்கும் ஒரே கட்டமாகத் தேர்தல் நடைபெறுவதால் பொதுமக்கள் காலை முதலே வரிசையில் நின்று ஆர்வமாக வாக்களித்து வருகிறார்கள்.
ஆந்திர தேர்தல்: ஆந்திராவை பொறுத்தவரை ஜெகன்மோகன் ரெட்டி மீண்டும் ஆட்சியைக் கைப்பற்றியே தீர வேண்டும் என்ற முனைப்பில் இருக்கிறார். அதேநேரம் ஜெகன்மோகனை வீழ்த்தியாக வேண்டும் என்று பாஜக மற்றும் பவன் கல்யாண் உடன் கரம் கோர்த்துள்ளார் சந்திரபாபு நாயுடு.. இவர்கள் இருவருக்கும் இடையே தான் ஆந்திராவில் கடும் போட்டி நிலவி வருகிறது. இது தவிர ஜெகன்மோகன் ரெட்டியின் சகோதரி ஒய்எஸ் ஷர்மிளா அங்கு காங்கிரஸின் பிரச்சாரத்தை முன்னெடுத்துள்ளார்.
கடத்தல்: இன்று அங்குத் தேர்தல் தொடங்கிய நிலையில், திடீரென தெலுங்கு தேசம் கட்சி தனது 15 வாக்குச்சாவடி முகவர்கள் கடத்தப்பட்டதாகப் புகார் அளித்துள்ளது. புங்கனூர் தொகுதியில் இந்தச் சம்பவம் நடந்ததாகப் புகார் அளிக்கப்பட்டுள்ளது. வாக்குச்சாவடிக்குச் சென்ற 15 பேர் காரை வைத்துக் கடத்தப்பட்டதாகவும் அவர்கள் மீது தாக்குதல் நடந்துள்ளதாகவும் தெலுங்கு தேசம் புகாரளித்துள்ளது.
அதாவது புங்கனூரில் உள்ள வாக்குச் சாவடிக்குச் செல்லும் போது, தெலுங்கு தேசம் கட்சியின் வாக்குச் சாவடி முகவர்களில் சுமார் 15 பேர் கடத்தப்பட்டதாக அக்கட்சி குற்றஞ்சாட்டியுள்ளது. இந்த கடத்தல் சம்பவத்தின் பின்னணியில் ஆளும் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் உள்ளதாகவும் தெலுங்கு தேசம் குற்றஞ்சாட்டியுள்ளது.
புகார்: இது தொடர்பாக அப்பகுதியில் போட்டியிடும் தெலுங்கு தேசம் வேட்பாளர் பெத்திரெட்டி ராமச்சந்திர ரெட்டியின் ஆதரவாளர்கள் உள்ளூர் போலீசில் முறைப்படி புகார் அளித்தனர். இது தொடர்பாக உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்கள் வலியுறுத்தினர்.












Click it and Unblock the Notifications