சபரிமலை ஐயப்பன் கோவிலில் வெடி வழிபாடு நடத்த தற்காலிக தடை
திருவனந்தபுரம்: சபரிமலையில் வெடி வழிபாடு நடத்த தற்காலிகமாக தடை விதித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டு உள்ளார்.
கேரளா மாநிலம் கொல்லம் அருகே நடைபெற்ற கோயில் திருவிழா தீ விபத்தில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 112 ஆக உயர்ந்துள்ள சம்பவம் அதிர்ச்சியலைகளை உருவாக்கியுள்ளது.

வெடி விபத்தினால் ஏற்பட்ட உயிரிழப்பை அடுத்து கோவில் திருவிழாக்கள், அரசியல் நிகழ்ச்சிகள் ஆகியவற்றில் வாணவேடிக்கைகளை நடத்த தடை விதிக்க வேண்டும் என்று கேரள உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர இந்திய மருத்துவச் சங்கம் (ஐ.எம்.ஏ.,) முடிவு செய்துள்ளது.
இந்நிலையில் பரவூர் புட்டிங்கல் கோவில் வெடி விபத்தை தொடர்ந்து, வெடி வழிபாடு நடத்தப்படும் கோவில்களில் சோதனை நடத்த அந்தந்த மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுகளுக்கு மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட்டனர்.
இதனை தொடர்ந்து சபரிமலை அய்யப்பன் கோவிலிலும் சோதனை நடத்தப்பட்டது. அப்போது வெடி வழிபாடு நடத்தப்படும் இடத்தில் அனுமதியின்றி 400 கிலோ வெடிமருந்து இருப்பதும், அந்த வெடி மருந்துகள் பாதுகாப்பற்ற முறையில் பிளாஸ்டிக் கவர்களில் பொதிந்த நிலையில் திறந்த வெளியில் வைக்கப்பட்டு இருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது.
மேலும் போலீசார் நடத்திய விசாரணையில் கடந்த மார்ச் மாதத்திற்கு பின் வெடி வழிபாடு நடத்த அனுமதி பெறவில்லை என்பதும் தெரியவந்தது.
இதைத்தொடர்ந்து மாவட்ட ஆட்சியரிடம் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அனுமதியின்றி வெடி மருந்துகளை பாதுகாப்பற்ற முறையில் வைத்திருந்ததாகவும், அனுமதி பெறும் வரை தற்காலிகமாக சபரிமலை ஐயப்பன் கோவிலில் வெடி வழிபாடு நடத்த தடை விதித்து மாவட்ட ஆட்சியர் ஹரிகிஷோர் உத்தரவிட்டு உள்ளார்.












Click it and Unblock the Notifications