அஸ்ஸாமில் 4-ந் தேதி முதல் கட்ட வாக்குப் பதிவு- அனல் பறக்கும் பிரசாரம் இன்றுடன் நிறைவு!
குவஹாத்தி: அஸ்ஸாம் சட்டசபை தேர்தலில் வரும் 4-ந் தேதி முதல் கட்ட வாக்குப் பதிவு நடைபெற உள்ளது. இதனையொட்டி முதல் கட்ட வாக்குப் பதிவு நடைபெறும் தொகுதிகளில் பிரசாரம் இன்று மாலையுடன் நிறைவடைந்தது.
126 தொகுதிகளைக் கொண்ட அஸ்ஸாம் சட்டசபைக்கு ஏப். 4, 11 ஆகிய தேதிகளில் 2 கட்டங்களாக வாக்குப் பதிவுக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. முதல் கட்டமாக 4-ந் தேதி 65 தொகுதிகளிலும் 2-வது கட்டமாக 61 தொகுதிகளிலும் வாக்குப் பதிவு நடைபெறுகிறது.

இத்தேர்தலில் 15 ஆண்டுகால காங்கிரஸ் ஆட்சி முடிவுக்கு வரும்; பாஜக ஆட்சியைக் கைப்பற்றும் என்று சில கருத்து கணிப்புகளும் தொங்கு சட்டசபை அமைய வாய்ப்புள்ளது என சில கருத்து கணிப்புகளும் தெரிவிக்கின்றன.
2014 லோக்சபா தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் பாரம்பரியான தொகுதிகள் பலவற்றை பாஜக அள்ளியிருந்தது. இதைத் தக்க வைக்கும் வகையில் தீவிர பிரசாரத்தை பாஜக மேற்கொண்டுள்ளது.
பிரதமர் நரேந்திர மோடியின் பிரசாரம் இதற்கு கை கொடுக்கும் எனவும் அக்கட்சி எதிர்பார்க்கிறது. பிரதமர் மோடியும் தமது பிரசாரங்களில் அஸ்ஸாமின் வளர்ச்சி குறித்துதான் அதிகமாக பேசிவருகிறார்.
இருப்பினும் வங்கதேச நாட்டவரின் சட்டவிரோத குடியேற்றம் மிக முக்கிய பிரச்சனையாக இருந்து வருகிறது. இந்த விவகாரத்தை பாஜக பிரதானமாக கையிலெடுத்துள்ளது. அஸ்ஸாமில் ஆட்சி அமைத்தால் வங்கதேச எல்லையை மூடுவோம் என பாஜக பிரசாரம் செய்து வருகிறது.
அதேபோல் உல்பா அமைப்புடனான அமைதிப் பேச்சுவார்த்தைகளையும் தேர்தல் ஆயுதமாக பாஜக கையிலெடுத்திருக்கிறது. காங்கிரஸைப் பொறுத்தவரையில் 15 ஆண்டுகால ஆட்சிக் கால செயல்பாடுகளை முன்வைத்து பிரசாரம் செய்து வருகிறது.












Click it and Unblock the Notifications