1996 முதல் 2015 மே 11வரை.. ஜெயலலிதா சொத்துக்குவிப்பு வழக்கு கடந்து வந்த பாதை!
பெங்களூரு: சொத்துக்குவிப்பு வழக்கில் தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா வழக்கில் கர்நாடக ஹைகோர்ட் இன்று தீர்ப்பளித்துள்ள நிலையில், ஜெயலலிதா சொத்துக்குவிப்பு வழக்கு கடந்த வந்த பாதை குறித்த ஒரு அறிமுகம் இதோ:
1991 முதல் 1996வரை தமிழக முதல்வராக பதவி வகித்த ஜெயலலிதா வருவாய்க்கு அதிகமாக ரூ.66.65 கோடி மதிப்புக்கு சொத்து சேர்த்ததாக அப்போதைய ஜனதா கட்சியின் தலைவர் சுப்பிரமணியன் சுவாமி வழக்கு தொடர்ந்தார்.
1996ம் ஆண்டு டிசம்பர் 7ம்தேதி, இவ்வழக்கு தொடர்பாக ஜெயலலிதா கைது செய்யப்பட்டார்.
1997ம் ஆண்டு ஜூன் 4ம்தேதி, ஜெயலலிதாவுக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.
1997ம் ஆண்டு அக்டோபர் 1ம்தேதி, தன்மீது வழக்கு தொடர அனுமதி கொடுத்த அப்போதைய ஆளுநர் பாத்திமா பீவியின் நடவடிக்கையை ரத்து செய்ய கோரி ஜெயலலிதா தாக்கல் செய்த மனு உட்பட மொத்தம், 3 மனுக்களை மெட்ராஸ் ஹைகோர்ட் தள்ளுபடி செய்தது.
2000-மாவது ஆண்டு, ஆகஸ்ட்டில், சொத்துக்குவிப்பு வழக்கில், விசாரணை ஆரம்பிக்கப்பட்டது.
இந்நிலையில் 2001 பொதுத் தேர்தலில் அதிமுக வெற்றி பெற்றது. அதில் ஜெயலலிதா முதல்வராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

அன்பழகன் தலையீடு
இதையடுத்து, திமுக பொருளாளர் க.அன்பழகன் உச்சநீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்து, தமிழகத்தில் வழக்கு நடந்தால் நியாயம் கிடைக்காது என்பதால் வேறு மாநிலத்துக்கு வழக்கை மாற்ற வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

கர்நாடக மாற்றம்
இதைத் தொடர்ந்து 2003 நவம்பர் 18ம்தேதி, பெங்களூருவுக்கு வழக்கை மாற்றி உத்தரவிட்டது உச்சநீதிமன்றம். அங்கு சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடந்து வந்தது. கர்நாடக அரசு வழக்கை நடத்தியது.

ஆச்சாரியா
2005ம் ஆண்டு பிப்ரவரி 19ம்தேதி, கர்நாடக தரப்பு அரசு வக்கீலாக பி.வி.ஆச்சாரியா நியமிக்கப்பட்டார். அவர் தொடர்ந்து வாதங்களை முன்னெடுத்து வைத்து, ஜெயலலிதா தரப்புக்கு மிகவும் நெருக்கடி கொடுத்தார்.

ராஜினாமா
இந்நிலையில், 2012 ஆகஸ்ட் 12ம்தேதி, ஆச்சாரியா, அரசு வழக்கறிஞர் பதவியில் இருந்து ராஜினாமா செய்தார். 2013 ஜனவரி மாதத்தில், இந்த ராஜினாமாவை அப்போதைய கர்நாடக பாஜக அரசு ஏற்றுக்கொண்டது.

பவானிசிங்
இதையடுத்து 2013 பிப்ரவரி 2ம்தேதி, கர்நாடக அரசு வக்கீலாக பவானிசிங் நியமிக்கப்பட்டார். ஆனால் அவர் தொடர்ந்து, குற்றவாளிகள் தரப்புக்கு ஆதரவாக செயல்பட்டதாக குற்றச்சாட்டுக்கு உள்ளானார். நீதிமன்றமும் அவரை கண்டித்தது.

ரத்து செய்த காங்கிரஸ் அரசு
இதையடுத்து 2013 ஆகஸ்ட் 26ல், கர்நாடக காங்கிரஸ் அரசு ஒரு அறிவிக்கை மூலம், பவானிசிங் நியமனத்தை ரத்து செய்தது. ஆனால், அதே ஆண்டு செப்டம்பர் 30ம்தேதி, பவானிசிங் நியமனத்தை ரத்து செய்த கர்நாடக அரசு ஆணையை உச்ச நீதிமன்றம் ரத்து செய்தது.

நீதிமன்றத்தில் குட்டு
இதன்பிறகும், பவானிசிங் மற்றும் சிறப்பு நீதிமன்ற மோதல்கள் நின்றபாடில்லை. ஜெயலலிதா உள்ளிட்டோரிடம் பறிமுதல் செய்யப்பட்ட வெள்ளி பொருட்களை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க அனுமதி கேட்டார் பவானிசிங். இதை கண்டித்த சிறப்பு நீதிமன்றம். 2014 பிப்ரவரி 28ம்தேதி, கூறுகையில், பவானிசிங் வேண்டுமென்றே வழக்கை தாமதிக்க முயலுவதாக குற்றம்சாட்டியது.

சம்பளம் பிடித்தம்
இதைவிட ஒருபடி மேலேபோய், எனக்கு உடல் நலம் சரியில்லை என்று காணம் கூறிவிட்டு கோர்ட்டுக்கு வராமல் இருந்தார் பவானிசிங். இதற்காக, பவானிசிங்கின் ஒரு நாள் சம்பளத்தையும் பிடித்தம் செய்ய சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது.

ஜெயலலிதா குற்றவாளி
இதைத்தொடர்ந்து மார்ச் 18ம் தேதி பவானிசிங் ஹைகோர்ட்டில் மனு தாக்கல் செய்து, தன்னிடம் சம்பளம் பிடித்தம் செய்தது தவறு என்று கூறினார். ஆனால், இதை நீதிமன்றம் தள்ளுபடி செய்துவிட்டது. ஒருவழியாக வாதம் முடிந்து செப்டம்பர் 27ம்தேதி, ஜெயலலிதா உள்ளிட்ட நால்வரும் குற்றவாளிகள் என்று அறிவிக்கப்பட்டது.

மீண்டும் குட்டு
இந்நிலையில்தான், உச்சநீதிமன்றம் சமீபத்தில் வெளியிட்ட உத்தரவில், பவானிசிங் உயர்நீதிமன்ற அப்பீல் வழக்கிலும் ஆஜரானது தவறு என்று கூறியது. இத்தனை குட்டுகளை வாங்கிய பவானிசிங்கிற்கு மாற்றாகத்தான், வழக்கை ஆரம்பத்தில் இருந்து கவனித்த ஆச்சாரியா மீண்டும் களமிறங்கியுள்ளார். ஏப்ரல் 28ல் ஆச்சாரியாவை அரசு வக்கீலாக மீண்டும் நியமித்தது கர்நாடக அரசு.

தீர்ப்பு
ஜெயலலிதா தனது தண்டனையை எதிர்த்து தாக்கல் செய்த அப்பீல் மனு மீது மே 11ம் தேதி தீர்ப்பு வழங்கப்படும் என்று, மே 8ம் தேதி, கர்நாடக ஹைகோர்ட் அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. இதையடுத்து இன்று தீர்ப்பு வெளியானது. அதில் ஜெயலலிதா நிரபராதி என்று அறிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications