சாரதா சிட் பண்ட் மோசடி.. கறையை மறைக்க கருப்புப் பண விவகாரத்தை கையிலெடுத்த திரிணாமுல் காங்கிரஸ்!
டெல்லி: சாரதா சிட் பண்ட் மோசடி வழக்கில் வசமாக சிக்கியிருக்கும் திரிணாமுல் காங்கிரஸ் தற்போது கருப்புப் பண விவகாரத்தை முன்வைத்து மோடி அரசுடன் மல்லுக் கட்டி வருகிறது.
நாட்டை உலுக்கிய பல்லாயிரம் கோடி சாரதா சிட் பண்ட் மோசடி வழக்கில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் எம்.பிக்கள் குணால் கோஷ், சிரின்ஜோய் போஸ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
மேலும் மேற்கு வங்க மாநில அமைச்சர்கள் சிலரும் இந்த வழக்கில் சிக்கி உள்ளனர். இது திரிணாமுல் காங்கிரஸுக்கு கடும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது. மதச்சார்பற்ற கட்சிகளுடன் கை கோர்ப்பதாலேயே மத்திய அரசு பழிவாங்குகிறது என்று மமதா பானர்ஜி குற்றம்சாட்டியிருந்தார்.

ஆனால் சிறையில் உள்ள திரிணாமுல் கட்சியில் இருந்து சஸ்பென்ட் செய்யப்பட்ட எம்.பி. குணால் கோஷ், சாரதா சிட் பண்ட் மோசடியில் பெரும் ஆதாயம் அடைந்தவரே மமதா பானர்ஜிதான் என்று பகிரங்கமாக குற்றம்சாட்டியுள்ளார்.
இப்படி சாரதா சிட் பண்ட் மோசடி வழக்கில் கடும் நெருக்கடியை எதிர்கொண்டுள்ள திரிணாமுல் காங்கிரஸ் இதை திசை திருப்பும் வகையில் கருப்புப் பண விவகாரத்தை கையில் எடுத்துள்ளது.
இதன் முதல் கட்டமாக கருப்புப் பணத்தை மீட்பது குறித்து நடப்பு நாடாளுமன்றக் கூட்டத் தொடரில் விவாதிக்க வேண்டும் என்று திரிணாமுல் காங்கிரஸ் வலியுறுத்தியுள்ளது.
இந்தக் கோரிக்கையை வலியுறுத்தி திரிணாமுல் காங்கிரஸ் எம்.பிக்கள் இன்று நாடாளுமன்ற வளாகத்தில் தர்ணா போராட்டம் நடத்தினர். மேலும் நாடாளுமன்றத்தின் இரு சபைகளிலும் இந்த பிரச்சனையை திரிணாமுல் எம்.பி.க்கள் எழுப்பி அமளியில் ஈடுபட்டனர்.
அதாவது சாரதா சிட் பண்ட் மோசடி வழக்கில் தங்களது கட்சி மீது படிந்திருக்கும் கறையை மறைக்கவே கருப்புப் பணத்தை திரிணாமுல் காங்கிரஸ் கையிலெடுத்திருக்கிறது என்பதே அரசியல் பார்வையாளர்களின் கருத்து.












Click it and Unblock the Notifications