7 தமிழர் விடுதலைக்கு மத்திய அரசின் அனுமதி தேவை என்பது மாநில அரசின் உரிமையை பறிப்பதாகும்: தமிழக அரசு
டெல்லி: ராஜிவ் கொலை வழக்கில் 7 தமிழரை விடுதலை செய்ய மத்திய அரசின் ஒப்புதல் பெற வேண்டும் என்ற அவசியம் நிறைவேற்றப்பட்டால் அது மத்திய அரசின் அதிகாரத்தை பரவலாக்குவதாகும்; குற்றவியல் நடைமுறைச் சட்டம் மாநில அரசுகளுக்கு வழங்கியுள்ள அதிகாரத்தை பறிப்பதாகும் என உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த சீராய்வு மனுவில் தமிழக அரசு விளக்கியுள்ளது.
ராஜிவ் காந்தி கொலை வழக்கில் முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகிய 3 பேருக்கும் தூக்கு தண்டனை கைதிகளாக சிறைவாசம் அனுபவித்தனர். இவர்களுடைய கருணை மனுக்கள் மீது முடிவு எடுக்க காலதாமதம் ஏற்பட்டதாக கூறி கடந்த 2014-ம் ஆண்டு பிப்ரவரி 18-ந் தேதி 3 பேரின் தூக்கு தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைத்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.
மேலும் இந்த 3 பேரையும் விடுதலை செய்வது குறித்து உரிய அரசு முடிவு எடுக்கலாம் என்றும் உச்சநீதிமன்றம் கூறியது. இதனால் அந்த உத்தரவு வெளியான உடனேயே முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகியோருடன் இந்த வழக்கில் ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் நளினி, ராபர்ட் பயாஸ், ரவிச்சந்திரன், ஜெயக்குமார் ஆகியோரையும் ஆக மொத்தம் 7 பேரையும் சிறையில் இருந்து விடுதலை செய்யப்போவதாக தமிழக அரசு அறிவித்தது. இது தொடர்பாக மத்திய அரசின் ஆலோசனையையும் தமிழக அரசு கேட்டிருந்தது.
ஆனால் தமிழக அரசின் முடிவுக்கு பதிலேதும் அளிக்காமல் அப்போது மத்தியில் ஆட்சியில் இருந்த காங்கிரஸ் கூட்டணி அரசு உச்சநீதிமன்றத்துக்கு ஓடிப் போனது. இதை விசாரணைக்கு ஏற்றுக் கொண்ட உச்சநீதிமன்றம் 7 பேரையும் விடுதலை செய்வதற்கு இடைக்கால தடையும் விதித்தது. பின்னர் 2014-ம் ஆண்டு ஏப்ரல் 24-ந் தேதி உச்சநீதிமன்றத்தின் அப்போதைய தலைமை நீதிபதி பி.சதாசிவம் தலைமையிலான பெஞ்ச், இந்த வழக்கில் இறுதி முடிவை 5 நீதிபதிகள் அடங்கிய அரசியல்சாசன பெஞ்ச் வழங்கும் என்று தீர்ப்பளித்தார்.

மாநில அரசு விடுவிக்க முடியாது
இதைத்தொடர்ந்து இந்த வழக்கை எச்.எல்.தத்து தலைமையில் நீதிபதிகள் இப்ராகிம் கலிபுல்லா, பி.சி.கோஷ், ஏ.எம்.சப்ரே, யு.யு.லலித் ஆகியோரை கொண்ட அரசியல் சாசன பெஞ்ச் விசாரித்து 2015-ம் ஆண்டு டிசம்பர் 2-ந் தேதி ஒரு தீர்ப்பு வழங்கியது. அதில், மத்திய அரசின் சட்டத்தின் கீழ் சி.பி.ஐ. போன்றவற்றால் விசாரணை மேற்கொள்ளப்பட்ட வழக்குகளில் ஆயுள் தண்டனை பெற்ற கைதிகளை மத்திய அரசின் ஒப்புதலின்றி மாநில அரசுகள் விடுதலை செய்ய முடியாது என திட்டவட்டமாக் கூறப்பட்டது.

161-வது பிரிவு
அதே நேரத்தில் அரசியல் சாசனத்தின் 161-வது பிரிவின் கீழ் மாநில அரசு தமக்குள்ள அதிகாரத்தின் கீழ் ஆயுள் தண்டனை கைதிகளை விடுதலை செய்வதை யாரும் தடுக்கவும் முடியாது எனவும் நீதிபதிகள் தீர்ப்பளித்தனர். மேலும் ராஜிவ் காந்தி கொலை வழக்கில் கைதிகளை விடுவிப்பது குறித்து தமிழக அரசு வெளியிட்ட உத்தரவு செல்லுமா? என்பது குறித்து 3 நீதிபதிகள் அடங்கிய பெஞ்ச் தனியாக விசாரிக்க அரசியல் சாசன பெஞ்ச் உத்தரவிட்டது.

சீராய்வு மனுத் தாக்கல்
இதனடிப்படையில் நீதிபதிகள் ரஞ்சன் கோகாய், பிரபுல்ல சி.பந்த், ஏ.எம்.கன்வில்கர் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் இந்த வழக்கை விசாரித்து வருகிறது. இதனிடையே தமிழக அரசு நேற்று உச்சநீதிமன்றத்தில் ஒரு சீராய்வு மனுவைத் தாக்கல் செய்திருக்கிறது. அந்த சீராய்வு மனுவில் கூறப்பட்டுள்ளதாவது:

மாநில அரசின் அதிகாரம்...
ராஜிவ் காந்தி கொலை வழக்கு போன்ற வழக்குகளில் மாநில அரசு, ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட குற்றவாளிகளின் விடுதலை தொடர்பாக மத்திய அரசின் ஆலோசனையை பெற்றால் போதுமானது. அரசியல் சாசன அமர்வு வழங்கிய தீர்ப்பின் 7 அம்சங்களில் ஒரு அம்சத்தில் கூறியுள்ளபடி, ஆலோசனை பெறுதல் என்பதற்கு ஒப்புதல் பெறுதல்'' என்று பொருள்படுவதாக குறிப்பிட்டுள்ளது ஏற்புடையது அல்ல. இது மாநில அரசுக்கு சட்டம் அளித்துள்ள தனிப்பட்ட அதிகாரங்களை கேள்விக்கு உள்ளாக்கும் செயலாகும்.

மத்திய அரசுக்கு கூடுதல் அதிகாரம்
இத் இந்திய குற்றவியல் நடைமுறை சட்டத்தின் கீழ் அளிக்கப்பட்டுள்ள அதிகாரத்தை மத்திய அரசுக்கு பரவலாக்கி, மாநில அரசின் அதிகாரத்தை குறைத்து உள்ளது. ராஜிவ் காந்தி கொலை வழக்கை சி.பி.ஐ. விசாரித்தது என்ற காரணத்தினால் மட்டுமே கைதிகளை விடுவிக்கும் அதிகாரத்தை மத்திய அரசுக்கு வழங்க முடியாது.

மீண்டும் சுப்ரீம்கோர்ட்....
இந்த தீர்ப்பில் கூறியுள்ளபடி மத்திய அரசின் ஒப்புதலுக்கு காத்திருக்க வேண்டும் என்றால் அதற்கு 25 அல்லது 30 ஆண்டுகள் கூட ஆகலாம். அது போன்ற தருணங்களில் மாநில அரசுகள் உச்சநீதிமன்றத்தைத்தான் நாட வேண்டிய சூழல் உருவாகும். இது, ஏற்கனவே நீதிமன்றங்களில் தேங்கியுள்ள வழக்குகளின் எண்ணிக்கையை மேலும் அதிகரிக்க வைக்கும் வாய்ப்பு உள்ளது.

மத்திய அரசிடம் சிறை நிர்வாகம்?
சிறை நிர்வாகம் என்பது மாநில அரசின் வரம்புக்கு உட்பட்டதாகும். சிறையில் ஆயுள் தண்டனை கைதிகளின் நடத்தை குறித்து மத்திய அரசை விட மாநில அரசிடம் அதிக தகவல்கள் இருக்கும். இந்த நிலையில் நடத்தையின் அடிப்படையில் அவர்களை விடுதலை செய்வது என்பதை மத்திய அரசின் அதிகார வரம்புக்குள் கொண்டு வருவது ஏற்புடையதாக இருக்காது, இது போன்ற விஷயங்களில் மாநில அரசுக்கு எதிராக மத்திய அரசு ரிட் மனு தாக்கல் செய்வதற்கு முகாந்திரம் கிடையாது. எனவே, சி.பி.ஐ. விசாரித்த வழக்குகளில் தண்டனை பெற்றவர்களை விடுவிக்க மத்திய அரசின் ஒப்புதலை பெற வேண்டும் என்று அரசியல் சாசன பெஞ்ச் வழங்கிய தீர்ப்பை உச்சநீதிமன்றம் மறு ஆய்வு செய்ய வேண்டும்.
இவ்வாறு தமிழக அரசின் சீராய்வு மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications