மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி துறை மாற்றத்திற்கு காரணமான 13 சர்ச்சைகள்
டெல்லி: பிரதமர் மோடியின் நம்பிக்கைக்கு உரியவராக அறியப்பட்டு வந்த மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானியிடமிருந்து முக்கியத்துவம் வாய்ந்த மனித வள மேம்பாட்டு அமைச்சக துறை அமைச்சகம் பறிக்கப்பட்டுள்ளது. இரானி டெக்ஸ்டைல் துறை அமைச்சராக மாற்றப்பட்டுள்ளார்.
நேற்று, மோடி அமைச்சரவையில் 19 புதிய அமைச்சர்கள் சேர்க்கப்பட்ட கையோடு, இரவே இந்த மாற்றமும் அரங்கேறியுள்ளது. இரானியின் இந்த இறக்கத்திற்கு என்ன காரணம் என்பதை கடந்த பல மாத அரசியலை கவனித்து வருவோரால் எளிதாக புரிந்து கொள்ள முடியும்.
அதில் கடுமையான சர்ச்சைகளை ஏற்படுத்தி பதவிக்கு வேட்டு வைத்த 13 காரணங்களை பட்டியலிட்டுள்ளோம். இதோ அதை பாருங்கள்:

ரோகித் வெமுலா
தலித் மாணவர் ரோகித் வெமுலா தற்கொலை செய்த வழக்கை கையாண்ட விதத்தில் இரானிக்கு எதிராக நாடு முழுக்க பெரும் அதிருப்தி அலை எழுந்தது. அமைச்சர் பண்டாரு தத்தாத்ரேயாவின் புகாரை தொடர்ந்து வெமுலா உள்ளிட்ட பல மாணவர்கள் மீது இரானி அமைச்சகம், நடவடிக்கை எடுத்ததுதான் இப்பிரச்சினைகளுக்கு மூல காரணம் என்கிறார்கள்.

துணை வேந்தர்கள் நீக்கம்
இரானி சர்ச்சைக்குறிய வகையில் 2 மத்திய பல்கலைக்கழக துணை வேந்தர்களை பணி நீக்கம் செய்தார். நாட்டு வரலாற்றில் இதுபோல நடந்தது அதுதான் முதல்முறை. பல்வேறு துணை வேந்தர்களுக்கும், இரானிக்கும் பனிப்போர் உருவானது.

ஐஐடிக்களில் சமஸ்கிருதம்
ஐஐடி தொழில் கல்வி நிறுவன பாடத்திட்டத்தில் சமஸ்கிருதத்தை இணைக்க இரானி மேற்கொண்ட முயற்சிகள் எதிர்ப்பையும், சர்ச்சையையும் கிளப்பின.

கல்வி தகுதி
கல்லூரி கல்வியையாவது முடித்த ஒருவர்தான், மனித வள மேம்பாட்டு அமைச்சராக இருக்க வேண்டும் என்பது, இரானி பதவியேற்ற பிறகு எழுந்த சர்ச்சை. கல்வி தகுதி பற்றி முன்னுக்கு பின் முரணாக ஸ்மிருதி இரானி தகவல் வெளியிட்டதாக வழக்கு பதிவும் செய்யப்பட்டது.

பாடத்திட்ட வாபஸ்
டெல்லி பல்கலைக்கழக 4 ஆண்டுகால பாட திட்டத்தை 2014ல் இரானி நீக்க உத்தரவிட்டார். இதை சிலர் புகழ்ந்தனர். பலர் விமர்சனம் செய்தனர். சுயாட்சி பெற்ற ஒரு பல்கலைக்கழகத்தின் முடிவை இரானி எதிரொலித்ததாக விமர்சனம் எழுந்தது.

ஜெர்மன் அவுட்
கேந்திரிய வித்தியாலயா பள்ளிகளில் ஜெர்மன் பாடத்திற்கு பதிலாக சமஸ்கிருதத்தை 3வது பாடமாக, கற்று கொடுக்க வேண்டும் என்று இரானி கூறிய கருத்து, ஜெர்மனி அதிபர் ஏஞ்சலா மார்கலை, பிரதமர் நரேந்திர மோடியிடம் கோரிக்கைவிடுக்குமளவுக்கு செய்தது.

ஐஐஎம் சட்டம்
ஐஐஎம் எனப்படும் மேலாண்மை கல்வி நிறுவனங்களுக்கான புதிய சட்டத்தை இரானி கொண்டுவர முயன்றபோது கல்வி நிறுவனர்களும், கல்வியாளர்களும் எதிர்ப்பு தெரிவித்தனர். பல கட்ட பேச்சுவார்த்தைகளுக்கு பிறகு, சட்டத்தில் சில பிரிவுகள் மாற்றியமைக்கப்பட்டன.

ராஜினாமா
டெல்லி ஐஐடி இயக்குநர் அவரது பதவி காலம் முடிவடைய 2 வருடங்கள் மீதமிருந்த நிலையிலேயே இரானி தலையீட்டால் 2014ல் பதவியை ராஜினாமா செய்தார்.

விஞ்ஞானி ராஜினாமா
அணு விஞ்ஞானி அனுல் ககோத்கர், மும்பை ஐஐடி போர்டு தலைவர் பதவியை கடந்த வரும் ராஜினாமா செய்தார். இரானி தலையீடுதான் இதற்கு காரணம் என்று கூறப்பட்டது.

கோப்புகளை எறிந்தார்
மனித வள அமைச்சக அதிகாரிகள் பலரும் இரானியின் ஆக்ரோஷ நடவடிக்கையால் பதவியை காலி செய்துவிட்டு வேறு பணியிடங்கள் கேட்டு விண்ணப்பிக்க தொடங்கினர். ஒரு அதிகாரி மீது கோப்புகளை தூக்கி இரானி வீசியதாக புகார் எழுந்தது.

மெட்ராஸ் ஐஐடி
மெட்ராஸ் ஐஐடியில் அம்பேத்கர் பெரியார் குரூப்பை தடை செய்ததன் மூலம், எழுந்த சர்ச்சை இரானியை கடுமையாக தாக்கியது. அம்பேத்கர் பெரியார் வட்டத்தை தடை செய்ய வேண்டும் என்ற அனாமதேய கடிதத்தை தொடர்ந்து, இரானி அமைச்சகம், ஐஐடிக்கு அனுப்பிய கடிதம்தான் சர்ச்சைகளுக்கு ஆரம்ப புள்ளி என்பது இதை உற்று நோக்கியவர்கள் சொல்லும் வாதம்.

கிறிஸ்துமஸ்
டிசம்பர் 25ம் தேதியை சிறந்த நிர்வாகத்திற்கு உரிய தினமாக அனுசரிக்க இரானி அமைச்சகம் அனைத்து நவோதயா வித்தியாலயா பள்ளிகளுக்கும் சுற்றரிக்கை அனுப்பியது. அன்று கிறிஸ்துமஸ் தினம் என்பதால் இருட்டடிப்பு நோக்கம் இதில் உள்ளதாக கூறி சர்ச்சை கிளம்பியது.

சைவம், அசைவம்
ஐஐடி கல்வி நிலையங்களில் சைவம் மற்றும் அசைவம் சாப்பிடும் மாணவர்கள் வசதிக்காக தனித்தனி கேண்டீன்கள் அமைக்க வேண்டும் என்று இரானி அமைச்சகம் அறிவுறுத்தியதும் சர்ச்சைகளுக்கு காரணமாக அமைந்தது.












Click it and Unblock the Notifications