வன்கொடுமைக்கு ஆளான பெண்களின் எண்ணிக்கை இதுதான்.. ஷாக் தகவல் சொன்ன மணிப்பூர் பழங்குடியினர்
இம்பால்: மணிப்பூர் வன்முறை தொடர்பாக 6000க்கும் அதிகமான வழக்குகள் பதிவாகியிருந்தன. இதில் ஒரேயொரு வழக்கு மட்டுமே பாலியல் வன்கொடுமை தொடர்பாக பதிவாகியிருந்ததாக முதலமைச்சர் பிரேன் சிங் கூறியிருந்த நிலையில், பழங்குடியினர் குழுக்கள் இதனை மறுத்துள்ளன. 7 பெண்கள் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதாக அவர் குற்றம்சாட்டியுள்ளனர்.
ஆட்சியை மீண்டும் தக்க வைக்க மணிப்பூர் பாஜக அரசு மேற்கொண்ட முயற்சிகள்தான் தற்போது கலவரத்திற்கு காரணம் என்று எதிர்க்கட்சிகள் விமர்சித்து வருகின்றன. அதாவது, அம்மாநிலத்தில் 53 சதவிகிதம் உள்ள 'மெய்டெய்' சமூக மக்கள் தங்களை பழங்குடி சமூகத்தினர் பட்டியலில் சேர்க்க வேண்டும் என்று நீண்ட காலமாக வலியுறுத்தி வந்தனர். இதனை தனது தேர்தலுக்காக பயன்படுத்திக்கொண்ட பாஜக, இம்மக்களின் கோரிக்கையை நிறைவேற்றுவதாக தேர்தல் வாக்குறுதி அளித்தது.

எதிர்பார்த்தபடி கடந்த தேர்தலில் பாஜக வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியமைத்தது. ஆனால், மெய்டெய் மக்களுக்கு அளித்த வாக்குறுதி குறித்து பாஜக அரசு மவுனம் காத்தது. எனவே அம்மக்கள் நீதிமன்றத்றை நாடினர். நீதிமன்றமும் இவர்களை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உத்தரவிட்டது. இதனையடுத்து இதற்கான பணிகளை அம்மாநில பாஜக அரசு மேற்கொண்டது.
இதுதான் வன்முறைக்கான தொடக்க புள்ளி. பாஜக அரசின் இந்நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து பழங்குடி மக்களான குக்கி, நாகா, ஜோ உள்ளிட்ட சமூகத்தை சேர்ந்தவர்கள் கடந்த மே மாதம் 3ம் தேதி பேரணி நடத்தினர். அதுபோல மெய்டெய் மக்கள் போராட்டம் நடத்தினர். இது இரண்டும் ஒரு கட்டத்தில் மோதலாக வெடித்தது.
இதில் அரசின் அதிகாரப்பூர்வ கணக்குப்படி 160க்கும் அதிகமானோர் கொல்லப்பட்டுள்ளனர். பல பெண்கள் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளனர். 5,036 தீவைப்பு வழக்குகள் பதிவாகியுள்ளன, வன்முறைகள் தொடர்பாக 6,068 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 150க்கும் அதிகமானோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மாநிலத்தில் சுமார் 36,000 பாதுகாப்புப் படை வீரர்கள் நிறுத்தப்பட்டுள்ளனர், 40 இந்திய காவல் சேவை (ஐபிஎஸ்) அதிகாரிகள் மற்றும் 20 மருத்துவக் குழுக்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர். எனினும், இப்போது வரை மணிப்பூரில் அமைதி திரும்பவில்லை. 300-க்கும் மேற்பட்ட முகாம்களில் 60 ஆயிரத்திற்கும் அதிகமான மக்கள் தங்கியுள்ளனர். 350 தேவாலயங்களும், சுமார் 20 கோயில்களும் பிற வழிபாட்டுத்தலங்களும் அடித்து நொறுக்கப்பட்டுள்ளன.
இதற்கிடையில் கடந்த மே 4ம் தேதி குக்கி மற்றும் ஜோ பழங்குடி சமூகத்தை சேர்ந்த இரண்டு பெண்கள் வன்முறையாளர்களால் நிர்வாணமாக அழைத்து செல்லப்பட்டு கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டனர். இது தொடர்பான வீடியோ சமீபத்தில் வெளியாகி பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது. நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் மணிப்பூர் அரசை கண்டித்து போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில் இந்த வன்முறை குறித்து இந்தியா டுடே NEக்கு செய்தி ஊடகத்திற்கு பேட்டியளித்த முதலமைச்சர் பிரேன் சிங், "இதுவரை பதிவு செய்யப்பட்ட 6,068 வழக்குகளில் ஒரேயொரு வழக்கு மட்டும்தான் பாலியல் வன்கொடுமை தொடர்பான வழக்கு" என்று கூறியுள்ளார். ஆனால் பழங்குடியினர் குழுக்கள் இதனை மறுத்துள்ளனர். அதாவது கலவரம் தொடங்கியதிலிருந்து தற்போது வரை சுமார் 7 பெண்கள் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளனர் என்று வைபே மக்கள் கவுன்சில், யங் வைபே அசோசியேஷன், ஜோமி ஸ்டூடண்ட்ஸ் ஃபெடரேஷன் மற்றும் குக்கி ஸ்டூடண்ட்ஸ் பெடரேஷன் ஆகிய பழங்குடி சமூக அமைப்புகள் இந்தியா டுடே NEக்கு செய்தி ஊடகத்திற்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளனர்.
மொத்தமாக 27 பெண்கள் இந்த கலவரங்களில் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 7 பேர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டும், 8 பேர் சுட்டுக்கொல்லப்பட்டும், 2 பேர் எரித்தும், 3 பேர் அடித்தும் கொல்லப்பட்டுள்ளனர். மீதமுள்ள 7 பெண்களின் இறப்புக்கு சரியான காரணம் தெரியவில்லை என்று இந்த அமைப்புகள் குற்றம்சாட்டியுள்ளன. முன்னதாக இந்த கலவரத்திற்கு மாநில பாஜக அரசு உடந்தையாக இருந்ததற்கான ஆதாரங்கள் உள்ளது என அம்மாநில பாஜக எம்எல்ஏ பவோலியன்லால் ஹொக்கிப் குற்றம்சாட்டியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications