48 மணி நேரத்தில்.. மம்தாவுக்கு ஏற்பட்ட 5 அதிர்ச்சி.. திரும்பிய பக்கமெல்லாம் சிக்கல் மேல் சிக்கல்!

Subscribe to Oneindia Tamil

கொல்கத்தா: மேற்கு வங்க அரசியலில் இப்போது வினோதமான ஒரு சூழல் ஏற்பட்டுள்ளது. அங்கு மம்தா மீதான அழுத்தம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் சூழலில், திரிணாமுல் கட்சியின் எதிர்காலம் என்னவாகும் என்ற கேள்விக்குறியும் எழுந்துள்ளது. இதற்கிடையே மேற்கு வங்கத்தில் கடந்த 48 மணி நேரத்தில் நடந்துள்ள அரசியல் மாற்றங்கள் தொடர்பாக நாம் பார்க்கலாம்!

மேற்கு வங்கத் தேர்தலில் ஏற்பட்ட தோல்வியைத் தொடர்ந்து, மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி அதன் வரலாற்றிலேயே மிக மோசமான ஒரு காலகட்டத்தைச் சந்தித்து வருகிறது. உட்கட்சிப் பூசல், எம்பிக்களின் ராஜினாமா, கட்சித் தலைமைக்கு எதிரான கிளர்ச்சி எனக் கடந்த 48 மணி நேரத்தில் நடந்த அதிரடி மாற்றங்கள் அக்கட்சியின் இருப்பையே கேள்விக்குறியாக்கியுள்ளன.

Trinamool congress Crisis Mamata West bengal

1. மோதல் உண்மை தான்

திரிணாமுல் காங்கிரஸின் மூத்த தலைவரும், மம்தா பானர்ஜியின் நம்பிக்கைக்குரியவருமான சௌகதா ராய், கட்சி தற்போது ஒரு நெருக்கடியில் இருப்பதை முதன்முதலாகப் பகிரங்கமாக ஒப்புக்கொண்டுள்ளார். மேற்கு வங்கத்தில் எதிர்க்கட்சிகளின் பலத்தை மீண்டும் கட்டமைக்கக் காங்கிரஸ் கட்சியுடன் ஒத்துழைப்பது அவசியம் என்று அவர் தெரிவித்துள்ளார்.

மேலும், மம்தா பானர்ஜி தனது கட்சியில் உள்ளவர்களின் குறைகளைக் கேட்க வேண்டும் என்றும், குறிப்பாக அபிஷேக் பானர்ஜி மீது எழுந்துள்ள புகார்களை அவர் கவனிக்க வேண்டும் என்றும் சௌகதா ராய் வலியுறுத்தியுள்ளார். ஒரு மூத்த தலைவர் இவ்வாறு பேசியிருப்பது கட்சியின் உள்ளே இருக்கும் விரிசலை வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளது.

2. காங்கிரஸ்- திரிணாமுல் இணைப்பு

இதற்கு நடுவே டெல்லியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு இரு முக்கியமான சந்திப்புகள் நடந்தன. திரிணாமுல் காங்கிரஸின் தேசிய பொதுச் செயலாளர் அபிஷேக் பானர்ஜி, டெல்லியில் ராகுல் காந்தியைச் சந்தித்துப் பேசினார். இதற்கு முன்னதாக மம்தா பானர்ஜி, சோனியா காந்தியைச் சந்தித்திருந்தார். இந்த அடுத்தடுத்த சந்திப்புகள், திரிணாமுல் காங்கிரஸ் கட்சி காங்கிரஸுடன் இணையப் போகிறதா அல்லது ஒரு முறையான கூட்டணியை உருவாக்கப் போகிறதா என்ற விவாதத்தைக் கிளப்பியது.

சௌகதா ராயும் "இணைப்பு அல்லது கூட்டணி என்பது ஒரு வாய்ப்பாக இருக்கலாம்" என்று கூறியது இந்த யூகங்களுக்கு வலு சேர்த்தது. இருப்பினும், காங்கிரஸ் மற்றும் திரிணாமுல் ஆகிய இரு தரப்புமே இந்தத் தகவலை மறுத்துள்ளன. இவை வெறும் வதந்திகள் என்றும், தேசிய அரசியல் குறித்து மட்டுமே ஆலோசிக்கப்பட்டதாகவும் விளக்கம் அளித்துள்ளன. ஆனாலும், வரும் நாட்களில் எது வேண்டும் என்றாலும் நடக்கலாம் என்கிறார்கள் விவரம் அறிந்தவர்கள்.

3. கிளர்ச்சி

தற்போது திரிணாமுல் காங்கிரஸின் நாடாளுமன்ற உறுப்பினர்களிடையே ஏற்பட்டுள்ள பிளவுதான் மம்தா பானர்ஜிக்கு ஏற்பட்டுள்ள மிகப் பெரிய சவால். சுமார் 20 எம்பிக்கள் மம்தா பானர்ஜிக்கு எதிராகக் கிளர்ச்சியில் ஈடுபட்டுள்ளனர். இவர்கள் தங்களைத் தனிக்குழுவாக அங்கீகரிக்கக் கோரி கடிதம் எழுதியுள்ளனர். இந்தக் கிளர்ச்சியாளர்களில் சாயோனி கோஷ் மற்றும் முன்னாள் கிரிக்கெட் வீரர் யூசுப் பதான் போன்ற முக்கியப் பெயர்களும் இடம் பெற்றுள்ளனர். கட்சித் தாவல் தடைச் சட்டத்திலிருந்து தப்பிக்க, மொத்த எம்பிக்களில் மூன்றில் இரண்டு பங்கு உறுப்பினர்களின் ஆதரவு தேவைப்படும் சூழலில், அந்த நம்பரும் இவர்களுக்கு இருக்கிறது.

4. ராஜினாமா

கடந்த சில நாட்களில் மட்டும் திரிணாமுல் காங்கிரஸின் மூன்று ராஜ்யசபா எம்பிக்கள் தங்கள் பதவியை ராஜினாமா செய்துள்ளனர். சுகேந்து சேகர் ராய் மற்றும் சுஷ்மிதா தேவ் ஆகியோரைத் தொடர்ந்து, வியாழக்கிழமை பிரகாஷ் சிக் பரை தனது பதவியை ராஜினாமா செய்தார். மேற்கு வங்கத்தில் அரசியல் சூழல் தற்போது பாஜகவுக்கு ஆதரவாக மாறிவிட்டதாக பிரகாஷ் சிக் பரைக் தெரிவித்துள்ளார். அடுத்தடுத்து எம்பிக்கள் வெளியேறுவது நாடாளுமன்றத்தில் திரிணாமுல் காங்கிரஸின் பலத்தை வெகுவாகக் குறைத்துள்ளது. இன்னும் பல தலைவர்கள் வெளியேறக் கூடும் என்ற அச்சமும் கட்சியில் நிலவுகிறது.

5. அபிஷேக் பானர்ஜி

இந்த அனைத்துப் பிரச்சனைகளுக்கும் மையப்புள்ளியாக இருப்பது மம்தா பானர்ஜியின் மருமகன் அபிஷேக் பானர்ஜியின் மீதான அதிருப்தி தான். கட்சியில் அனைத்து அதிகாரங்களும் அபிஷேக் பானர்ஜியிடம் குவிந்து கிடப்பதாக மூத்த தலைவர்கள் கருதுகின்றனர். அபிஷேக் பானர்ஜியின் ஆதரவாளர்களுக்கும் மூத்த தலைவர்களுக்கும் இடையே நிலவிப் பனிப்போரே இப்போது பகிரங்க மோதலாக வெடித்துள்ளது. மூத்த தலைவர்களை ஓரங்கட்டுவது மற்றும் தன்னிச்சையான முடிவுகளை எடுப்பது போன்ற புகார்கள் அபிஷேக் மீது வைக்கப்படுகின்றன. இதுவே பல தலைவர்கள் கட்சியை விட்டு வெளியேறக் காரணமாக அமைந்துள்ளது.

திரிணாமுல் காங்கிரஸ் கட்சி இப்போது ஒரு மிகப் பெரிய அரசியல் புயலைச் சந்தித்து வருகிறது. மம்தா பானர்ஜி தனது அதிரடி நடவடிக்கைகளால் இந்தக் கிளர்ச்சியைக் கட்டுப்படுத்துவாரா அல்லது கட்சி உடையும் நிலைக்குச் செல்லுமா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+