‘உங்க பாய் பிரெண்டை பார்க்க கூட போகலாம்’.. கொல்கத்தா டாக்டர்களை கொச்சைப்படுத்திய திரிணாமுல் எம்.பி
கொல்கத்தா: கொல்கத்தா பயிற்சி பெண் மருத்துவர் பாலியல் கொலை நாடு முழுவதும் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பெண் மருத்துவருக்கு நீதி கேட்டு நாடு முழுவதும் போராட்டங்கள் வலுத்து வருகின்றன. ஆனால், அங்குள்ள ஆளும் கட்சியான திரிணாமுல் காங்கிரஸ் நிர்வாகிகளின் கருத்து சர்ச்சையை கிளப்பி கொண்டிருக்கின்றன. அந்த வகையில் திரிணாமுல் எம்பி அருப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மருத்துவர்களை கொச்சைப்படுத்தும் வகையில் விமர்சனம் செய்துள்ளார்.
மேற்குவங்க மாநிலம், கொல்கத்தாவில் உள்ள ஆர்ஜி கர் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில் பெண் பயிற்சி மருத்துவர் இரண்டாமாண்டு முதுநிலை மருத்துவம் பயின்று வந்தார். அவர், கடந்த 8 ம் தேதி இரவுப் பணியில் இருந்தபோது அதிகாலை 3 மணியளவில் மருத்துவமனையில் உள்ள கருத்தரங்கக் கூடத்தில் தூங்கச் சென்றுள்ளார்.

இந்நிலையில், அடுத்த நாள் காலையில் அவர் அரை நிர்வாணக் கோலத்தில் சடலமாக மீட்கப்பட்டார். மருத்துவ மாணவியின் உடற்கூறாய்வில் மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது.
மருத்துவரைப் பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்ததாகக் கூறப்படும் சஞ்சய் ராய் என்பவரை போலீஸார் கைது செய்துள்ளனர். கொலை சம்பவத்துக்கு கண்டனம் தெரிவித்து நாட்டின் பல பகுதிகளிலும் மருத்துவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். உயிரிழந்த மருத்துவருக்கு நீதி கேட்டும், மருத்துவர்களின் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்தும் நாடு முழுவதும் குரல்கள் எழுந்து வருகின்றன.
இருப்பினும் அந்த மாநிலத்தில் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் நிர்வாகிகள் இந்த விவகாரத்தில் அடுத்தடுத்து சர்ச்சைகளில் சிக்கி வருகிறார்கள். முதல்வர் மம்தாவை சமூக வலைதளங்களில் விமர்சித்து பேசினாலோ, கைநீட்டி பேசினாலோ அவர்களின் விரல்கள் உடைக்கப்படும் என்று மேற்கு வங்க அமைச்சர் உதயன் குஹா கூறியிருப்பது சர்ச்சையை கிளப்பியுள்ளது.
இந்நிலையில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் எம்.பி அருப் சக்ர போர்தி அடுத்த கட்டத்துக்கு சென்று போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மற்ற பெண் மருத்துவர்களை கொச்சைப்படுத்தும் விதமாக விமர்சித்துள்ளார்.
மருத்துவர்களின் போராட்டத்தையும், ஆளுங்கட்சி மீதான விமர்சனங்களையும் திரிணாமுல் காங்கிரஸ் நிர்வாகிகளால் ஏற்க முடிவதில்லை. பன்குரா தொகுதி எம்.பியான அனுப் சக்ரபோர்தி அவரது தொகுதியில் ஒரு பேரணியில் கலந்துகொண்டார்.
அப்போது போராட்டம் என்ற பெயரில் நீங்கள் உங்கள் வீடுகளுக்கு செல்லலாம் அல்லது உங்கள் பாய் பிரெண்டை சந்திக்க செல்லலாம். உங்களின் போராட்டத்தினால் சிகிச்சை பெற முடியாமல் எந்த நோயாளியாவது உயிரிழந்தால், பொது மக்களின் கோபம் உங்கள் மீது தான் திரும்பும். மக்களிடம் இருந்து உங்களை நாங்கள் காப்பாற்ற மாட்டோம். நீங்கள் லீவ் எடுத்துக் கொள்ளலாம். தனிப்பட்ட எந்த நடவடிக்கையில் வேண்டுமானாலும் ஈடுபட்டுக் கொள்ளலாம்.
உங்களின் நடவடிக்கைகளால் ஒரு நோயாளி உயிரிழப்பு ஏற்பட்டாலும் கூட, பொது மக்களின் கோபத்தை யாராலும் தடுத்து நிறுத்த முடியாது என்று கூறியுள்ளார். எம்.பி.யின் இந்த கொச்சையான கருத்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மருத்துவர்களை கடும் கொந்தளிப்பில் ஆழ்த்தியுள்ளது.
அதேபோல பொது மக்களும் அவரின் கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். பல்வேறு தரப்பில் இருந்து கண்டனங்கள் எழுந்தபோதும் அருப் தன் கருத்தில் இருந்து பின்வாங்கவில்லை.
ஏற்கனவே போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மருத்துவர்களை, அவர்களின் போராட்டத்தை கைவிட்டு பணிக்கு திரும்ப சொல்லி பல்வேறு தரப்பில் இருந்து அழுத்தம் வந்து கொண்டிருக்கிறது. அதேநேரத்தில் கல்யாண் பேனர்ஜி, உதயன் குன்ஹா, அனுப் சக்ரபோர்தி உள்ளிட்ட ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் தலைவர்களின் கருத்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மருத்துவர்களுடன், உயிரிழந்த மருத்துவரின் குடும்பத்தினரையும் அச்சுறுத்தும் வகையில் அமைந்துள்ளது.












Click it and Unblock the Notifications