குஜராத்தில் பெரும் சோகம்.. அரசு மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து.. 14 கொரோனா நோயாளிகள் உயிரிழப்பு!
அஹமதாபாத்: குஜராத் மாநிலத்தில் உள்ள அரசு மருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி 14 கொரோனா நோயாளிகள் உயிரிழந்தனர்.
இந்தியா முழுவதும் இதுவரை இல்லாத அளவுக்கு கொரோனா தொடர்ந்து ஆட்டம் போட்டு வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் தினசரி பாதிப்பு 4 லட்சத்தை கடந்து புதிய உச்சத்தை தொட்டுள்ளது. தினசரி உயிரிழப்பு 3,500-ஐ தாண்டி செல்கிறது.
கொரோனா தொற்றால் பாதிப்பு அடைந்தவர்கள் தொடர்ந்து அதிகரித்து வருவதால் சிகிச்சையளிக்க முடியாமல் வட மாநில மருத்துவமனைகள் திண்டாடி வருகின்றன.

ஆக்சிஜன் தட்டுப்பாடு
மேலும் கொரோனா தொற்று அதிகரிப்பதால் பல மாநிலங்களில் ஆக்சிஜன் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. பல்வேறு மாநிலங்களில் ஆக்சிஜன் தட்டுப்பாடு காரணமாக கொரோனா நோயாளிகள் உயிரிழந்துள்ளனர் என்று கூறப்படுகிறது. நாடு முழுவதும் மருத்துவமனைகளுக்கு ஆக்சிஜன் கிடைப்பதை உறுதி செய்ய மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.

தொடரும் விபத்துகள்
ஏற்கனவே தொற்றை தடுக்க முடியாமல் நாடு திண்டாடி வரும் நிலையில் கொரோனாவுக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவமனைகளில் அடிக்கடி விபத்துகள் ஏற்பட்டு வருகின்றன. மகாராஷ்டிரா மாநிலம் நாசிக் நகரில் உள்ள ஒரு மருத்துவமனையில் ஆக்சிஜன் சப்ளை திடீரென நிறுத்தப்பட்டதால் 24 பேர் பரிதாபமாக இறந்தனர்.

மருத்துவமனையில் தீ விபத்து
இதனை தொடர்ந்து மகாராஷ்டிரா மாநிலம் பால்கர் அருகே வசாயில் உள்ள கொரோனா சிகிச்சை மையத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 13 நோயாளிகள் உயிரிழந்தனர். இந்த நிலையில் குஜராத் மாநிலத்தில் உள்ள அரசு மருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி 14 நோயாளிகள் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

கொரோனா வார்டில் தீப்பிடித்தது
குஜராத்தில் உள்ள பாருச்சில் இருக்கிறது படேல் அரசு மருத்துவமனை. நான்கு மாடிகள் கொண்ட இந்த மருத்துவமனையில் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் இன்று அதிகாலை தரை தளத்தில் உள்ள கொரோனா வார்டில் திடீரென தீப்பிடித்தது. அந்த வார்டில் இருந்த நோயாளிகள் தீயில் சிக்கிக் கொண்டனர்.

12 நோயாளிகள் உயிரிழப்பு
இது பற்றி தகவல் அறிந்ததும் தீயணைப்பு படை வீரர்கள் மற்றும் உள்ளூர் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று பல மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். ஆனால் தீயின் கோரப்பிடியில் சிக்கி 14 நோயாளிகள் பரிதாபமாக உயிரிழந்தனர். அங்கு பணிபுரிந்த 2 நர்ஸுகளும் உயிரிழந்தனர். இதனால் மொத்த பலி எண்ணிக்கை 16 ஆக உள்ளது. மேலும் அங்கு சிகிச்சை பெற்று வந்த 50-க்கும் மேற்பட்ட நோயாளிகள் அருகில் உள்ள வேறு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டனர். தீ விபத்துக்கான காரணம் தெரியவில்லை. இதுபற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த தீ விபத்தில் இறந்தவர்களின் குடும்பத்துக்கு இரங்கல் தெரிவித்த குஜராத் முதல்வர் விஜய் ரூபானி உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு தலா ரூ.4 லட்சம் நிவாரண தொகை வழங்கப்படும் என்று தெரிவித்த்தார்.












Click it and Unblock the Notifications