வீட்டு வாசலில் இருந்தே ஏறலாம்.. பஸ் சேவையை தொடங்கும் உபேர்.. இந்தியாவில் தான்.. எங்கே தெரியுமா?
கொல்கத்தா: இந்தியாவின் கொல்கத்தாவில் விரைவில் பேருந்து சேவையை தொடங்க உள்ளதாக அமெரிக்காவை சேர்ந்த உபேர் நிறுவனம் தெரிவித்துள்ளது. அலுவலகம் செல்வோரை கவரும் விதமாக இந்த பேருந்து சேவையை உபேர் தொடங்குகிறது.
இந்தியாவில் வாடகை கார்கள் இயக்கும் சேவையில் உபேர் நிறுவனம் ஈடுபட்டு வருகிறது. சென்னை உள்பட நாடு முழுவதும் உள்ள பல்வேறு நகரங்களில் உபேர், ஒலா போன்ற வாடகை கார் நிறுவனங்கள் மூலம் கார்கள் இயக்கப்பட்டு வருகின்றன. ஆன்லைன் செயலி மூலமாக முன் பதிவு செய்தால் நினைத்த இடத்தில் இருந்து நினைத்த இடத்திற்கு ஏறி காரில் பயணிக்க முடியும். பெரு நகரங்களில் உபேர், ஒலா போன்ற நிறுவனங்களின் சேவையை பயன்படுத்தி வாடகை கார்களில் தினமும் ஆயிரக்கணக்கான பயணிகள் பயணித்து வருவதை பார்க்க முடியும்.

இந்த நிலையில், அடுத்த கட்ட முயற்சியாக உபேர் நிறுவனம் பேருந்து சேவையிலும் ஈடுபட முடிவு செய்துள்ளது. கொல்கத்தாவில் அடுத்த ஆண்டு மார்ச் முதல் இந்த சேவையை தொடங்க உள்ளது. அலுவலகத்திற்கு செல்பவர்களை கவரும் விதமாக இந்த சேவை கொண்டு வரப்பட இருக்கிறது. இதற்காக மேற்கு வங்காள போக்குவரத்து துறையுடன் இணைந்து புரிந்துணர்வு ஒப்பந்தத்தை மேற்கொண்டுள்ளது.
வீட்டில் இருந்து அலுவககம் வரை: முதல் கட்டமாக 10 பேருந்துகள் இயக்கப்படும் என்றும் "உபேர் ஷட்டில்" (Uber Shuttle) என இந்த பேருந்து சேவைக்கான ஒப்பந்தம் நேற்று நடைபெற்ற வர்த்தக உச்சி மாநாட்டில் கையெழுத்தானது. முழுவதும் ஏசி வசதி கொண்ட இந்த பேருந்துகள் முன்கூட்டிய வரையறுக்கப்பட்ட ரூட்களில் இயக்கப்படும். குடியிருப்பு பகுதிகளில் இருந்து நகரின் அலுவலகங்கள் மற்றும் தொழில்கள் நிறைந்த பகுதிகளுக்கு இந்த பேருந்துகள் இயக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.
அதாவது, வாடிக்கையாளர்கள் வீட்டில் இருந்து அலுவலகம் வரைக்கும் பேருந்திலேயே பயணிக்கும் வகையில் இந்த சேவை இயக்கப்படும் எனத் தெரிகிறது. ஒருவாரத்திற்கு முன்பே இந்த பேருந்தில் பயணிக்க முன்பதிவு செய்து கொள்ளலாம். முழுவதும் ஏசி வசதி கொண்டதாகவும் சுற்றுச்சூழலுக்கு உகந்ததாகவும் இந்த பேருந்து இயக்கப்படும் எனவும் காலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை இந்த சேவை கிடைக்கும் என்றும் உபேர் நிறுவனத்தின் அதிகாரிகள் தெரிவித்தனர்.
எண்ணிக்கை அதிகரிக்கப்படும்: 2025 ஆம் ஆண்டிற்குள் 10 மில்லியன் டாலர் மதிப்புக்கு உபேர் முதலீடு செய்ய உள்ளது. இதன் மூலம் அடுத்த ஐந்து ஆண்டுகளுக்குள் 50 ஆயிரம் வாழ்வாதார வாய்ப்புகள் உருவாக்கப்படும் எனவும் உபேர் நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. மேலும் இது தொடர்பாக உபேர் நிறுவனத்தின் இந்தியா மற்றும் தெற்கு ஆசியாவுக்கான இயக்குநர் சிவா ஷைலேந்திரன் கூறியதாவது: -
"உபேர் நிறுவனம் ஷட்டில் பஸ் சேவையை கொல்கத்தாவில் இந்த மாதம் 10 பேருந்துகளுடன் இயக்க திட்டமிட்டுள்ளது. வரும் காலங்களில் பேருந்துகள் எண்ணிக்கையும், இயக்கப்படும் வழித்தடங்களின் எண்ணிக்கையும் அதிகரிக்கப்படும். டெல்லி மற்றும் மும்பையில் உபேர் ஷட்டில் சேவையை நாங்கள் தொடங்கியுள்ளோம்.. உள்ளூருக்குள் இந்த பேருந்து இயக்கப்படும். உபேர் செயலி மூலமாக இதை புக்கிங் செய்து கொள்ளலாம்" என்றார்.












Click it and Unblock the Notifications