"மத்திய அரசே! இதை ஏற்க முடியாது!" யுஜிசி விதிகள் இந்துக்களை பிரிக்குமாம்! சாமியார்கள் திடீர் அறிக்கை
லக்னோ: யுஜிசி அமைப்பு வெளியிட்டுள்ள புதிய விதிமுறைகளுக்குப் பல்வேறு தரப்பினரும் ஆதரவு தெரிவித்து வருகிறார்கள். அதேநேரம் மற்றொரு தரப்பினர் இந்த விதிகளைத் திரும்பப் பெற வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர். இதற்கிடையே யுஜிசியின் புதிய விதிகள் இந்துக்களுக்கு எதிராக இருப்பதாகவும் இதைத் திரும்பப் பெற வேண்டும் என்றும் சாமியார்கள் சேர்ந்து ஒன்றாக வலியுறுத்தியுள்ளனர்.
கல்வி நிலையங்களில் இருக்கும் சாதியப் பாகுபாடுகளைக் களைய இருக்கும் மத்திய அரசின் அமைப்பு தான் யுஜிசி. இந்த அமைப்பு கடந்த செவ்வாய்க்கிழமை மிக முக்கியமான விதிமுறைகளை வெளியிட்டு இருந்தது. 2012ல் இருந்த பழைய விதிமுறைகள் நீக்கப்பட்டு, சாதியப் பாகுபாடுகளைக் களையப் புதிய விதிமுறைகளை வெளியிட்டு இருந்தது.

பின்னணி
பல்கலைக்கழக மாணவர்கள் ரோஹித் வெமுலா மற்றும் பயல் தட்வி தற்கொலையைத் தொடர்ந்து, இருவரின் அம்மாக்களும் வளாகங்களில் சாதியப் பாகுபாட்டை முடிவுக்குக் கொண்டு வர வழிமுறை தேவை என உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தனர். அந்த வழக்கில் உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பின் அடிப்படையிலேயே யுஜிசி இந்த புதிய விதிமுறைகளை வெளியிட்டு இருந்தது.
இந்த விதிமுறைகளுக்குப் பல்வேறு தரப்பினரும் ஆதரவு தெரிவித்து வருகிறார்கள். அதேநேரம் ஒரு தரப்பினர் இந்த விதிகளை எதிர்க்கிறார்கள். பொதுப் பிரிவு மாணவர்களுக்கு எதிராக இந்த விதிகள் இருப்பதாக அவர்கள் குறிப்பிடுகிறார்கள். மேலும், இந்த விதிகளை வாபஸ் பெற வேண்டும் என்பதை வலியுறுத்தி உத்தரப் பிரதேசம் உள்ளிட்ட சில மாநிலங்களில் ஒரு தரப்பினர் போராட்டத்தையும் நடத்தினர்.
சாமியார்கள்
இதற்கிடையே உத்தரப் பிரதேசத்தில் மாக் மேளாவில் கூடிய சாமியார்களும் மத்தியில் புதிய யுஜிசி மசோதா மீது அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளது.. அங்குச் சங்கமத்தின் கரைகளில் திரண்ட சாமியார்கள், பாஜக தலைமையிலான மத்திய அரசு இந்த மசோதாவை உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும் என வலியுறுத்தினர்.
புதிய மசோதா சமூகத்தில் பிளவையும், இந்துக்களிடையே விரிசலையும் அதிகரிக்கும் என நரேந்திரானந்த சரஸ்வதி மகாராஜ் என்பவர் இந்த மாநாட்டில் தெரிவித்தார். அகில இந்தியத் தண்டி சன்யாசி பரிஷத்தின் தேசியத் தலைவரான பிதாதிஷ்வர் சுவாமி பிரம்மாஷ்ரம், யுஜிசி மசோதா அநீதியானது என்றார். மசோதாவைத் திரும்பப் பெறுவதோடு, இந்தியாவைப் பிளவுபடுத்தச் சதி செய்தோரைத் தண்டிக்க வேண்டும் என அவர் தெரிவித்தார்.
எதிர்ப்பு
சனாதன தர்மத்தின் வேர்கள் ஆழமானவை; அதை அழிக்க நினைப்போர் அழிவர் என்றும் சுவாமி கன்ஷ்யாமாச்சார்ய மகாராஜ் என்பவர் கூறினார். புதிய யுஜிசி மசோதாவை எதிர்த்து ஒற்றுமையாகப் போராட வேண்டும் என அழைப்பு விடுத்தார். இப்படி அந்த மாநாட்டில் பங்கேற்ற அனைத்துச் சாமியார்களும் யுஜிசி விதிகளை எதிர்த்தனர். இது இந்து சமூகத்திற்கு இடையே பிளவை ஏற்படுத்தும் என்பதால் இந்த மசோதாவை உடனடியாக வாபஸ் பெற வேண்டும் என்றும் தெரிவித்தனர்..
யுஜிசி விதிகள்
இந்த புதிய விதிகளில் சாதியப் பாகுபாடுகளுக்கு எதிராகக் கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படுவதை உறுதி செய்யப்படுகிறது. பழைய விதிகள் பெரும்பாலும் எஸ்சி (SC) மற்றும் எஸ்டி (ST) மாணவர்களுக்கான பாதுகாப்பை மட்டுமே கொடுத்தன. மற்ற இடைநிலை சாதிகளுக்கு இதில் பாதுகாப்பு வழங்கப்படவில்லை. ஆனால், புதிய விதிமுறைகளில் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் (OBC) மற்றும் பாலினச் சிறுபான்மையினர் (Gender Minorities) ஆகியோரும் புகாரளிக்கலாம். மேலும், மாணவர்களுக்கு மட்டுமல்லாமல், ஆசிரியர்கள் மற்றும் பிற ஊழியர்களுக்கும் பொருந்தும்.
ஒரு புகார் அளிக்கப்பட்டால் அடுத்த 24 மணி நேரத்திற்குள் குழு கூடி விவாதிக்க வேண்டும்... 15 நாட்களில் விசாரணையை முடித்து அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என விதிகள் கடுமையாக்கப்பட்டுள்ளது. இதை யுஜிசி 6 மாதங்களுக்கு ஒரு முறை கண்காணிக்கும் என்றும் உரிய நடவடிக்கை எடுக்காத கல்வி நிறுவனங்களின் அங்கீகாரமே ரத்து செய்யப்படலாம் என்றும் கூறப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது,












Click it and Unblock the Notifications