தமிழகத்திலிருந்து இந்தியாவிற்கு அகதிகள் வருகிறார்களாம்.. நாடாளுமன்றத்தில் மத்திய அமைச்சர் உளறல்
தமிழ்நாட்டிலிருந்து இந்தியாவுக்கு அகதிகள் வருகிறார்கள் என்று நாடாளுமன்றத்தில் மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு பேசியுள்ளார்.
Recommended Video

டெல்லி: நாடாளுமன்ற கூட்டத்தில் மத்திய உள்துறை இணை அமைச்சர் கிரண் ரிஜிஜு இந்தியாவுக்கு தமிழ்நாட்டில் இருந்து அதிக அளவில் அகதிகள் வருகின்றனர் என்று பேசியதால் நாடாளுமன்றத்தில் பெரும் சலசலப்பு ஏற்பட்டது.
நாடாளுமன்றத்தில் நடைபெற்ற கூட்டத்தில் கேட்கப்பட்ட பல்வேறு துணைக் கேள்விகளுக்கு மத்திய உள்துறை இணை அமைச்சர் கிரண் ரிஜிஜு பதிலளித்துப் பேசினார். அப்போது, அவர் மியான்மரிலிருந்து இந்தியாவுக்கு சட்டவிரோதமாக வந்து குடியேறியுள்ள ரோஹிங்கியா இஸ்லாமியர்கள் குறித்துப் பேசினார்.

இந்தியாவுக்கு வருகின்ற அகதிகள் பற்றி கிரண் ரிஜிஜு பேசுகையில், தமிழ்நாடு, பங்களாதேஷ், மியான்மரில் இருந்து இந்தியாவுக்கு அதிக அளவில் அகதிகள் வருகின்றனர் என்று பேசினார். இதனால், அவையில் இருந்த அதிமுக, காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சி எம்பிகள் கடும் அமளியில் ஈடுபட்டனர்.
இந்தியாவின் மாநிலங்களில் ஒன்றான தமிழ்நாட்டிலிருந்து இந்தியாவுக்கு அகதிகள் வருகிறார்கள் என்று ஒரு மத்திய அமைச்சர் எப்படி கூறலாம் என்று தமிழக எம்பிகள் கிர்ண் ரிஜிஜுவை கேள்வி கேட்டனர்.
இதையடுத்து, மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு தனது தவறை உணர்ந்து, இலங்கையில் இருந்துவரும் தமிழ் அகதிகள் என்பதற்கு பதிலாக வாய் தவறி தமிழ்நாடு அகதிகள் என்று தவறுதலாக கூறிவிட்டேன் என்று கூறினார்.
இதை ஏற்றுக்கொண்ட சபாநாயகர் சுமித்ரா மகாஜன் அமளியில் ஈடுபட்ட எம்பிகளை அமைதியடையச் செய்தார்.












Click it and Unblock the Notifications