களவுபோன உ.பி அமைச்சரின் எருமைமாடுகள் மீட்பு... பாதுகாக்கத் தவறிய 3 போலீசார் டிரான்ஸ்பர்
லக்னோ: காணாமல் போன உத்திரப்பிரதேச அமைச்சரான அசாம் கானின் எருமை மாடுகளைப் பத்திரமாக போலீசார் மீட்டுள்ளனர். ஆனபோதும், அவற்றைப் பாதுகாக்கத் தவறிய குற்றத்திற்காக அப்பகுதியைச் சேர்ந்த 3 போலீசார் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனராம்.
நாட்டில் தீர்க்கப் பட வேண்டிய பிரச்சினைகள் நிறைய கிடப்பில் போடப்பட்டுள்ள நிலையில், கடந்த சிலதினங்களாக காணாமல் போன அமைச்சருக்குச் சொந்தமான எருமை மாடுகளைத் தேடிக் கண்டுபிடித்து கொடுத்து தங்களது திறமையை நிரூபிக்கப் போராடி வந்தனர் உ.பி போலீசார்.
தற்போது அவர்களது தீவிர தேடுதல் வேட்டை வெற்றி அளித்துள்ள போதும், திருட்டு நடக்கும் வரை அஜாக்கிரதையாக செயல்பட்டதாக மூன்று போலீசார் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனராம்.

முக்கிய அமைச்சர்....
உத்தரபிரதேச முதல்வர் அகிலேஷ் யாதவின் அமைச்சரவையில் இரண்டாம் நிலை வகிப்பவர் சிறுபான்மையினர் மற்றும் நகர்புற வளர்ச்சிதுறை அமைச்சரான அசாம் கான். நேற்று முந்தினம் இவரது ராம்பூர் பண்ணையில் இருந்த எருமை மாடுகளில் ஏழு காணாமல் போய் விட்டது.

எருமைகள் மீட்பு....
எருமை மாடுகள் திருட்டுப் போன தகவல் அறிந்த போலீசார் உடனடியாக துரித கதியில் செயல்பட்டு தற்பொது எருமை மாடுகளை மீட்டுள்ளனர். எருமை மாடுகளைத் தேடும் பணியில் 3 போலீஸ் நிலையத்தைச் சேர்ந்தவர்கள், மோப்ப நாய்கள் உதவியோடு ஈடுபட்டனர்.

எங்கே
இரும்பு சங்கிலியை துண்டித்து எருமை மாடுகளைக் கொள்ளையடித்துச் சென்ற கொள்ளையர்கள் சிக்கினார்களா என்ற தகவல் இல்லை. ஆனால், மாடுகள் மட்டும் மீட்கப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

எருமைமாட்டில் வந்த டிரான்ஸ்பர்....
இதற்கிடையே, மாடுகளைக் காக்கும் கடமையைச் செய்யத் தவறியதற்காக மூன்று போலீஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.












Click it and Unblock the Notifications