மோடி சர்க்காரில் உ.பி.. மகாராஷ்டிராவுக்கு ஏகப்பட்ட அமைச்சர்கள்!!
டெல்லி: பிரதமர் நரேந்திர மோடி அமைச்சரவையில் பாரதிய ஜனதாவுக்கு வெற்றியை அள்ளித்தந்த உத்தரப்பிரதேசம் மற்றும் மகாராஷ்டிரா மாநிலத்தவர்கள் அதிகம் பேர் அமைச்சர்களாக பதவியேற்றுள்ளனர்.
பிரதமர் நரேந்திர மோடி நேற்று பதவியேற்றுக் கொண்டார். அவருடன் 45 அமைச்சர்களும் பதவியேற்றனர். இவர்களில் உத்தரப்பிரதேசம் மற்றும் மகாராஷ்டிராவைச் சேர்ந்தவர்களே அதிகம்.

உ.பியில் 73
உத்தரப்பிரதேசத்தில் மொத்தம் உள்ள 80 லோக்சபா தொகுதிகளில் 73 தொகுதிகளை பாஜக கைப்பற்றியிருந்தது. இதனால் அம்மாநிலத்தைச் சேர்ந்த 8 பேருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

4 கேபினட் அமைச்சர்கள்
கேபினட் அமைச்சர்களாக உ.பியைச் சேர்ந்த ராஜ்நாத்சிங் (லக்னோ), உமாபாரதி (ஜான்சி), கல்ராஜ் மிஸ்ரா (தியோரா), மேனகா காந்தி (பிலிபித்) ஆகியோர் பதவியேற்றனர்.

இரு இணை அமைச்சர்கள்
உ.பி.யைச் சேர்ந்த வி.கே.சிங் மற்றும் சந்தோஷ் கங்வார் தனிப்பொறுப்புடன் கூடிய இணை அமைச்சர்களாகி உள்ளனர்.

முசாபர்நகர் சஞ்சீவ், மனோஜ் சின்ஹா
அதேபோல் உ.பி.யின் முசாபர்நகர் கலவரத்தின் போது ஊடகங்களில் அடிபட்ட சஞ்சீவ்குமார் பாலியான் இணை அமைச்சராகி இருக்கிறார். உ.பி.யை மனோஜ் சின்ஹாவும் இணை அமைச்சராகி இருக்கிறார். மொத்தமாக உ.பியைச் சேர்ந்த 8 பேர் மோடி அரசில் அமைச்சர்களாகி உள்ளனர்.

மகாராஷ்டிரா
உத்தரப்பிரதேசத்தைத் தொடர்ந்து மகாராஷ்டிராவுக்கு அதிக முக்கியத்துவம் தரப்பட்டுள்ளது. இம்மாநிலத்தில் மொத்தம் உள்ள 48 தொகுதிகளில் 42ஐ பாஜக கூட்டணி கைப்பற்றியிருந்தது.

3 கேபினட் அமைச்சர்கள்
நிதின் கட்காரி, கோபிநாத் முண்டே மற்றும் ஆனந்த் கீதே ஆகிய 3 கேபினட் அமைச்சர்களுமே மகாராஷ்டிராவை சேர்ந்தவர்களே.

இணை அமைச்சர்கள்
தனிப்பொறுப்புடன் கூடிய இணை அமைச்சர்களான் பிரகாஷ் ஜவ்தேகர், பியூஷ் கோயல் மற்றும் இணை அமைச்சர் ராவ்சாகிப் தன்வீ ஆகியோரும் மகாராஷ்டிராவைச் சேர்ந்தவர்கள்.

பீகாருக்கு 4
பீகார் மாநிலத்தைச் சேர்ந்த 4 பேர் அமைச்சர்களாக்கப்பட்டுள்ளனர். கேபினட் அமைச்சர்களான ரவிசங்கர் பிரசாத், ராதாமோகன்சிங், லோக் ஜனசக்தி தலைவர் ராம்விலாஸ் பஸ்வான் மற்றும் இணை அமைச்சர் உபேந்திர குஸ்வாஹா ஆகிய 4 பேரும் பீகாரைச் சேர்ந்தவர்கள்.

ம.பி.க்கும் 4
மத்திய பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த 4 பேரும் அமைச்சர்களாக்கப்பட்டுள்ளனர். சுஷ்மா ஸ்வராஜ். நஜ்மா ஹெப்துல்லா, நரேந்திர சிங் தோமர் மற்றும் தவர்சந்த் கெஹ்லாட் ஆகியோர் ம.பியைச் சேர்ந்தவர்கள்.

கர்நாடகாவுக்கு 4
கர்நாடகா மாநில எம்.பிக்கள் 4 பேர் அமைச்சர்களாக்கப்பட்டுள்ளனர். ராஜ்யசபா எம்.பி. வெங்கையா நாயுடு, சதனாந்த கவுடா, அனந்தகுமார் ஆகியோர் கேபினட் அமைச்சர்களாகவும் சித்தேஸ்வரா இணை அமைச்சராகவும் பொறுப்பேற்றுள்ளனர்.

குஜராத்துக்கு 3
பிரதமர் மோடியின் சொந்த மாநிலமான குஜராத்தைச் சேர்ந்த எம்.பி, அருண் ஜேட்லி, ஸ்மிரிதி இரானி ஆகியோர் கேபினட் அமைச்சர்களாகவும் மன்ஷுக்பாய் வஸாவா இணை அமைச்சராகவும் பொறுப்பேற்றுள்ளார்.

ஹரியானாவுக்கு 2
ஹரியானா மாநிலத்தைச் சேர்ந்த ராவ் இந்தர்ஜித் சிங் தனிப்பொறுப்புடன் கூடிய இணை அமைச்சராகவும் பரிதாபாத் எம்பி கிஷன்பால் இணை அமைச்சராகவும் பொறுப்பேற்றனர்.

பஞ்சாப், ராஜஸ்தானுக்கு தலா 1
பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த ஹர்சிம்ரத் கவுர், ராஜஸ்தானின் நிஹால் சந்த் ஆகியோர் பதவி ஏற்றனர்.

அதிருப்தியில் ராஜஸ்தான்
25 எம்.பி தொகுதிகளையுமே வென்ற ராஜஸ்தான் மாநிலத்துக்கு ஒரே ஒரு அமைச்சர் பதவிதானா? என்ற கலகக் குரல் வெடித்தும் இருக்கிறது.

தமிழகம், ஆந்திரா தலா 1
இதேபோல் அஸ்ஸாமின் சோனோவால், ஜம்மு காஷ்மீரின் ஜிதேந்திர சிங், தமிழகத்தின் பொன். ராதாகிருஷ்ணன், ஆந்திராவின் அசோக் கஜபதி ராஜூ, கோவாவின் ஸ்ரீபாத் நாயக், அருணாசலின் கிரண் ரிஜிஜூ ஆகியோர் என தலா ஒரு பிரதிநிதித்துவம் வழங்கப்பட்டுள்ளது.

புறக்கணிக்கப்பட்ட மாநிலங்கள்
மேற்கு வங்கம், கேரளா, நாகாலாந்து, மிசோரம், மேகாலயா, மணிப்பூர், ஹிமாச்சல், உத்தர்காண்ட், சிக்கிம் மற்றும் திரிபுரா மாநிலங்களுக்கு ஒரு பிரதிநிதித்துவம் கூட வழங்கப்படவில்லை.












Click it and Unblock the Notifications