உத்தரகாண்ட் முதல்வர் விஜய் பகுகுணா ராஜினாமா!
டேராடூன்: வெள்ள நிவாரணப் பணிகளை சரிவர செய்யாமல் கோட்டை விட்டதாக எதிர்கட்சியினரால் குற்றம்சாட்டப்பட்ட உத்தரகாண்ட் மாநில முதல்வர் விஜய் பகுகுணா திடீரென தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
உத்தரகாண்டில் கடந்த 2012-ம் ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலில் 32 இடங்களில் வெற்றி பெற்ற காங்கிரஸ் கட்சி விஜய் பகுகுணா எம்.பிக்கு முதல்வர் பதவியை வழங்கியது.
இதையடுத்து எம்பி பதவியை ராஜினாமா செய்துவிட்டு முதல்வரானார்.

காங்கிரசின் முடிவு
நாடாளுமன்றத் தேர்தலுக்கு இன்னும் 3 மாதங்களே உள்ள நிலையில், உத்தரகாண்டில் காங்கிரஸ் கட்சி தனது செல்வாக்கை தக்க வைக்கும் நோக்கில், முதல்வரை மாற்ற முடிவு செய்துள்ளதாகக் கூறப்பட்டது.

முதல்வர் ராஜினாமா
இந்நிலையில் விஜய் பகுகுணா தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். பகுகுணா தனது ராஜினாமா கடிதத்தை கவர்னரிடம் அளித்துள்ளார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது.

நாளை புதிய முதல்வர் தேர்வு
காங்கிரஸ் கட்சியின் விருப்பத்தை ஏற்று ராஜினாமா செய்வதாக விஜய் பகுகுணா தெரிவித்துள்ளார். பகுகுணாவின் ராஜினாமாவை தொடர்ந்து ஹரீஸ் ராவத், பிரிதாம் சிங் ஆகியோரில் ஒருவர் முதல்வராக தேர்ந்தெடுக்கப்பட வாய்ப்பு உள்ளதாக தெரிகிறது.

தலைமைக்கு கட்டுப்பட்டு
தனது ராஜினாமா கடிதத்தைக் கொடுத்துவிட்டு செய்தியாளர்களிடம் பேசிய விஜய் பகுகுணா, காங்கிரஸ் தலைமை என்னை பதவி விலகுமாறு கூறியது. அதனை ஏற்று, நான் எனது பதவியை ராஜினாமா செய்துள்ளேன். உத்தரகாண்ட் புதிய முதல்வராக காங்கிரஸ் எம்எல்ஏ ஒருவர் நாளை முதல்வராக தேர்வு செய்யப்பட உள்ளார். நான் கட்சிக்காக தொடர்ந்து பணியாற்றுவேன் என்று கூறினார்.
உத்தர்கண்ட் மாநிலத்தில் கடந்த 14 ஆண்டுகளில், 6 முதல்வர்கள் மாறியுள்ளனர் குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications