உத்தரகாண்ட் சுரங்க மீட்பு பணி: ஒரு தொழிலாளரை மீட்க எத்தனை நிமிடங்கள் ஆகும் தெரியுமா?
டேராடூன்: உத்தரகாண்டில் சுரங்கப் பாதையில் 17 நாட்களாக சிக்கியுள்ள 41 தொழிலாளர்களையும் மீட்க எத்தனை மணி நேரம் ஆகும் தெரியுமா?
உத்தரகாண்டில் சில்க்யாரா- பர்கோட் இடையே 4.5 கி.மீ. தொலைவுக்கு அமைக்கப்படும் சுரங்கப்பாதையில் கடந்த 12 ஆம் தேதி மண் சரிவு ஏற்பட்டது. இதில் 41 தொழிலாளர்கள் சிக்கினர். அவர்களை மீட்கும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

சுமார் 60 மீட்டர் தொலைவுக்கு மணல், கடினமான பாறைகள் சுரங்கத்தை மூடியிருந்தன. இதில் அமெரிக்கா தயாரித்த இயந்திரம் மூலம் மணல் குவியலின் பக்கவாட்டில் 47 மீட்டர் தொலைவுக்கு துளையிட வேண்டிய நேரத்தில் இயந்திரம் உடைந்துவிட்டது.
உடைந்த இயந்திரங்களை எடுக்க 7 பேர் கொண்ட குழுவினர் அமைக்கப்பட்டனர். அவர்கள் 14 மீட்டர் நீளம் கொண்ட இயந்திரத்தின் உடைந்த பிளேடை சேகரித்து அகற்றிவிட்டனர். இதையடுத்து சுரங்கப்பாதையின் மணல் குவியலில் பக்கவாட்டில் தொடர்ந்து துளையிட டெல்லியில் இருந்து 24 தொழிலாளர்கள் வரவழைக்கப்பட்டனர்.
இவர்கள் மலை பகுதிகளில் சிறிய அளவிலான சுரங்கம் தோண்டுவதில் வல்லவர்கள். இவர்கள் எலி வளை தொழிலாளர்கள் என்றே அழைக்கப்படுகிறார்கள். இவர்கள் 24 மணி நேரமும் சுழற்சியில் பணியாற்றி வந்தனர். அதே வேளையில் தமிழகத்தின் திருச்செங்கோட்டை சேர்ந்த தரணி ஜியோ டெக் நிறுவன நிபுணர்கள், உத்தராகண்டின் சில்க்யாரா சுரங்கப் பாதையில் அதிநவீன இயந்திரம் மூலம் 6 அங்குலம் விட்டம் கொண்ட குழாயை தொழிலாளர்கள் இருக்கும் இடம் வரை பொருத்தி உள்ளனர். இதனால் கடந்த 21-ம் தேதி முதல் தொழிலாளர்களுக்கு சமைத்த உணவு வகைகள் விநியோகம் செய்யப்பட்டு வருகின்றன.
தொழிலாளர்களுக்கு நேற்று காலை ரொட்டி, தானியங்களால் தயாரிக்கப்பட்ட சத்தான கஞ்சி, அவித்த முட்டை வழங்கப்பட்டன. அதோடு 41 பாக்கெட்டுகளில் சுவையான லட்டுகளும் குழாய் வழியாக அனுப்பப்பட்டன. ஒவ்வொரு பாக்கெட்டிலும் 4 லட்டுகள் வைக்கப்பட்டன. இவர்கள் உறவினர்களுடன் பேசுவதற்கான ஏற்பாடுகளும் செய்யப்பட்டன. இதற்காக சுரங்கத்திற்குள் அனுப்பும் வகையில் தொலைபேசி குழாய் அமைக்கப்பட்டது.
17 ஆவது நாளாக மீட்பு பணிகள் சுரங்கத்தில் நடைபெற்று வந்த நிலையில் அது இறுதி பணியை எட்டியது. இன்னும் 2 மீட்டர் துளையே தோண்ட வேண்டியுள்ளது. தோண்டி முடித்தவுடன் ஒவ்வொரு தொழிலாளரையும் மீட்க 5நிமிடங்கள் ஆகும் என கணக்கிடப்பட்டுள்ளது. அதன்படி 41 தொழிலாளர்களையும் மீட்க 3 முதல் 4 மணி நேரங்கள் ஆகலாம் என தெரிகிறது.
அவர்கள் மீட்கப்பட்டவுடன் அவர்களுக்கு மாலை அணிவித்து வரவேற்க தயார் செய்யப்பட்டுள்ளது. அது போல் உடல்நலம் குறித்து ஆய்வு செய்ய ஆம்புலன்ஸ் ஹெலிகாப்டர்கள் தயார் நிலையில் உள்ளன. 400 மணி நேரத்திற்கும் மேலான இந்த மீட்பு பணியானது இன்றுடன் முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications