இனி வந்தே பாரத் ரயிலில் முழுக்க முழுக்க சைவம்..முட்டை கூட கிடையாதாம்! அதிரடியாக அறிவித்த ரயில்வே!
டெல்லி: வந்தே பாரத் ரயிலில் கோழிக்கறி, மீன், ஆம்லெட் உள்ளிட்டவற்றை பயணிகள் எடுத்துக் கொண்டு செல்லக் கூடாது எனவும், அந்த ரயிலிலும் அசைவ உணவு சமைக்கப்படாது என இந்திய ரயில்வே அறிவித்திருக்கிறது. புதுடில்லி - கத்ரா வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் முழுக்க முழுக்க சாத்வீக (சைவ) ரயில் என அறிவித்திருக்கிறது இந்திய ரயில்வே.
இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் வந்தே பாரத் ரயில் இயக்கப்படுகிறது. 2022 ஆம் ஆண்டு முதல் முதலாக குஜராத் நகர் காந்தி நகரில் இருந்து மகாராஷ்டிராவில் மும்பையை இணைக்கும் வகையில் வந்தே பாரத் முதல் சேவை தொடங்கியது.
பார்ப்பதற்கு அச்சு அசலாக புல்லட் ரயில் போலவே இருக்கும் வந்தே பாரத் ரயில்கள் 100 கிலோ மீட்டர் வேகத்தை வெறும் 50 வினாடிகளுக்குள் எட்டும் மேலும் 180 கிலோமீட்டர் வேகம் வரை செல்லக்கூடியது. எக்ஸ்பிரஸ் , சதாப்தி ரயில்களை விட வேகம் என்பதோடு, ரயிலில் பயணிக்கும் பயணிகளுக்கு பல்வேறு வசதிகளும் இதில் வழங்கப்படும்.

அதிவேக இண்டர்நெட், குளிர்சாதன வசதி, எல்.இ.டி டிவி போன்ற சேவைகளோடு, 24 மணி நேரமும் உணவு குடிநீர் போன்ற வசதிகளோடு பயணிகளுக்கு பாதுகாப்பும் அதிகரிக்கப்பட்டுள்ளது. நீண்ட தூர பயணத்தின் போது கூட மிகவும் வசதியாகவும் அதே நேரத்தில் விரைவாகவும் பயணிப்பதாக கூறுகின்றனர் பயணிகள். ஏற்கனவே இந்தியாவின் பல வழித்தடங்களில் வந்தே பாரத் ரயில் இயக்கப்பட்டு வரும் நிலையில் கூடுதலாக ஸ்லீப்பர் வந்தே பாரத் ரயில்களும் இயக்கப்பட உள்ளது.
இதற்கிடையே வந்தே பாரத் ரயில்களில் சைவம் அசைவம் என இருவகை உணவுகள் வழங்கப்படுகிறது. அதே நேரத்தில் தூய விரதம் இருப்பவர்கள், கோவில்களுக்கு செல்பவர்கள் ரயில்களில் வழங்கப்படும் உணவு மற்றும் குளிர்பானங்கள் உள்ளிட்டவற்றால் பாதிக்கப்படுவதாக கூறப்படுகிறது. பல பயணிகள் ரயில்களில் வழங்கப்படும் உணவின் தூய்மையை சந்தேகிக்கின்றனர். காரணம் ஒரே பேன்டரியில் சைவம் மற்றும் அசைவ உணவுகள் ஒன்றாக தயாரிக்கப்படுவதால் தங்களது விரதம் கெட்டுவிடுமோ என சந்தேகத்துடன் உள்ளனர்.
இந்த நிலையில் பயணிகளின் அச்சத்தை போக்கும் வகையில் திடீர் நடவடிக்கையாக ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. டெல்லியில் இருந்து கத்ரா வரை இயங்கும் வந்தே பாரத் எக்ஸ்பிரஸில் பயணிகளுக்கு சைவ உணவை மட்டுமே வழங்க இந்திய ரயில்வே முடிவு செய்துள்ளது. இதன் மூலம், பயணிகளுக்கு பிரத்தியேகமாக சைவ உணவை வழங்கும் இந்தியாவின் முதல் ரயில் இதுவாகும் என்பது குறிப்பிடத்தக்க்து.
அந்த ரயிலில் புனிதமான வைஷ்ணவி ஆலயத்திற்கு பக்தர்கள் விரதமிருந்து செல்வதால் உணவு குறித்த அச்சம் எனக் கூடாது என்பதற்காகத்தான் இந்த ஏற்பாடாம். இந்திய ரயில்வேயின் ஐஆர்சிடிசி மற்றும் சாத்விக் கவுன்சில் ஆப் இந்தியா இடையேயான ஒப்பந்தத்தின் படி இந்த ரயில் அதிகாரப்பூர்வமாக முற்றிலும் சைவ உணவு வழங்கப்படும் ரயில் என அறிவிக்கப்பட்டிருக்கிறது. அந்த ரயிலின் பேண்டரியில் அசைவ உணவு தயாரிக்க அனுமதி இல்லை. என்பதோடு அங்கு பணிபுரியும் பணியாளர்களும் சைவ உணவுகள் மட்டுமே எடுத்துக் கொள்ள வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.
ரயிலில் சிக்கன், மீன், முட்டை உள்ளிட்ட எந்த இறைச்சி வகைகளும், மீன் எண்ணெய், விலங்கு கொழுப்பு உள்ளிட்ட எந்த அசைவ பொருட்களும் சேர்க்கப்பட கூடாது என அறிவிக்கப்பட்டிருக்கிறது. இந்த ரயில் 'சாத்விக்' சான்றிதழைப் பெற்றுள்ள நிலையில், பக்தர்கள் தூய்மையான மற்றும் சாத்வீக உணவைப் பெறுவதை உறுதி செய்வதற்காக, மத வழித்தடங்களில் இயங்கும் பல ரயில்களை ஐஆர்சிடிசி 'சாத்வீக சான்றளிக்கப்பட்டதாக' மாற்றவுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.












Click it and Unblock the Notifications