கடன் பிரச்சினை: கோவா ஆடம்பர மாளிகையை இழக்கிறார் விஜய் மல்லையா
மும்பை: பல்லாயிரம் கோடி கடனுக்காக கோவாவில் உள்ள ஆடம்பர பங்களாவை விஜய் மல்லய்யா இழக்கப் போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
கிங் பிஷர் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் உரிமையாளரும் மதுபான சக்கரவர்த்தியுமான விஜய் மல்லையா கடன் பிரச்சினையில் சிக்கியுள்ளார்.

விஜய் மல்லையாவினால் ஆரம்பிக்கப்பட்ட கிங்பிஷர் ஏர்லைன்ஸ் நிறுவனம் கடன் பிரச்சினையில் தள்ளாடிக் கொண்டிருக்கின்றது. விமானங்களை மீண்டும் இயக்க முடியாத நிலையில் அந்நிறுவனத்தின் கடன் தொகையும் அதிகரித்தபடியே உள்ளது.
கடந்த அக்டோபர் மாதம் 30ஆம் தேதியன்று எஸ்பிஐசிஏபி என்ற நிறுவனம் தங்களுக்கு கிங்பிஷர் நிறுவனத்திடமிருந்து வரவேண்டிய 6,027 கோடிக்கு நடவடிக்கை எடுக்கும் விதமாக மல்லையாவிற்கு சொந்தமாக கோவாவில் உள்ள கிங்பிஷர் வில்லாவின் உரிமையைக் கைப்பற்றியுள்ளதாக அறிவிப்பு விடுத்தது. இந்த நிறுவனம் ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியாவின் துணை நிறுவனமாகும்.
இந்தக் கடனுக்கான உத்தரவாதக் கையெழுத்தை மல்லையாவும் அவரது யுனைடெட் புரூவரிஸ் நிறுவனமும் போட்டிருந்தது. இதனைத் தொடர்ந்து கடந்த வெள்ளிக்கிழமை அன்று மல்லையாவின் சட்டக்குழு துரிதமாக செயல்பட்டு இதற்கான தடை உத்தரவை வாங்கியுள்ளது.
37 கோடி ரூபாய் மதிப்புள்ள இந்த மாளிகைக்கு விஜய் மல்லையாவின் மகன் சித்தார்த் அடிக்கடி வந்து பகட்டாக விருந்து நடத்துவார் என்று கூறப்படுகின்றது. இந்த மாளிகை குறித்து விஜய் மல்லையாவிற்கு மனோரீதியாக மிகுந்த பற்று உண்டு என்பதும் அந்த ஊழியர்களால் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே வெள்ளிக்கிழமை அன்று மும்பையிலிருந்தும், பெங்களூரிலிருந்தும் வந்தவர்களால் இந்த மாளிகை சீல் வைக்கப்பட்டதாக ஒரு வதந்தி கோவாவில் பரவியது. ஆனால் அந்த மாளிகையில் பணிபுரிந்துகொண்டிருந்த ஊழியர்கள் அதனை மறுத்துள்ளனர். தற்போது அங்கு 5 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மராமத்துப் பணிகள் நடைபெற்று வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications