ஆட்சி கவிழ்கிறதா? மணிப்பூரில் ஆளும் பாஜகவுக்கான ஆதரவை வாபஸ் வாங்கிய என்பிபி.. களநிலவரம்
இம்பால்: மணிப்பூரில் குக்கி - மைத்தேயி மக்களிடையே மோதல் வன்முறையாக தொடர்ந்து வருகிறது. போராட்டக்காரர்கள் முதல்வர் பைரன் சிங் உள்பட அரசியல்கட்சியினரின் வீடுகளை குறிவைத்து தாக்குதல் நடத்தி வருகின்றனர். இந்நிலையில் தான் மணிப்பூரில் ஆளும் பாஜகவுக்கு கொடுத்த ஆதரவை மேகாலயா முதல்வர் கார்னாட் சங்கமாவின் என்பிபி கட்சி திடீரென்று வாபஸ் வாங்கிய நிலையில் பாஜக அரசு கவிழுமா? இல்லையா? என்பது பற்றிய முக்கிய தகவல்கள் வெளியாகி உள்ளன.
மணிப்பூர் மாநிலத்தில் பாஜக ஆட்சி நடக்கிறது. முதல்வராக பைரன் சிங் உள்ளார். இங்கு கடந்த 2 ஆண்டுகளாக குக்கி - மைத்தேயி இன மக்களிடையே மோதல் உள்ளது. இந்த மோதல் காரணமாக அந்த மாநிலத்தில் தொடர்ந்து வன்முறை நீடித்து வருகிறது. கடந்த சில மாதங்களாக வன்முறை குறைந்த நிலையில் தற்போது மீண்டும் அதிகரித்துள்ளது.

இதற்கு முக்கிய காரணம் ஜிரிபம் மாவட்டத்தில் மாயமான மைத்தேயி இனத்தை சேர்ந்த 6 பேர் பிணமாக மீட்கப்பட்டது தான். இவர்களை குக்கி இனத்தவர்கள் கடத்தி கொலை செய்து இருக்கலாம் என்ற சந்தேகம் உள்ளது. இதனால் தான் தற்போது மணிப்பூரில் மீண்டும் வன்முறை தலைத்தூக்கி உள்ளது.
முதல்வர் பீரன் சிங், அமைச்சர்கள், எம்எல்ஏக்களின் வீடுகள் குறிவைத்து தாக்கப்பட்டு வருகின்றன. நிலைமை கைமீறி போனதால் அங்கு மணிப்பூர் மேற்கு மற்றும் கிழக்கு பகுதிகளில் உள்ள 7 மாவட்டங்களில் காலவரையற்ற ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. அதேபோல் வதந்திகளை தடுக்க இண்டர்நெட் சேவை துண்டிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் தான் தற்போது மணிப்பூரில் ஆளும் பாஜக அரசுக்கு கொடுத்து வரும் ஆதரவை என்பிபி கட்சி திரும்ப பெற்றுள்ளது. இந்த அறிவிப்பை என்பிபி கட்சியின் தலைவரான மேகாலயா முதல்வர் கார்னாட் சங்மா அறிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் கூறியுள்ளதாவது: மணிப்பூர் முதல்வர் பைரன் சிங் தலைமையிலான அரசு முற்றிலுமாக தோல்வியடைந்துள்ளது. அந்த மாநிலத்தில் நிலவும் வன்முறையை கட்டுப்படுத்துவதில் முற்றிலுமாக தவறிவிட்டது. இதனால் தற்போதைய நிலையை கருத்தில் கொண்டு என்பிபி எனும் தேசிய மக்கள் கட்சி ஆளும் முதல்வர் பைரன் சிங் தலைமையிலான அரசுக்கு கொடுத்த ஆதரவை உடனடியாக வாபஸ் பெறுகிறது'' என்று கூறியுள்ளார்.
மணிப்பூரை பொறுத்தமட்டில் மொத்தம் 60 சட்டசபை தொகுதிகள் உள்ளன. இங்கு ஒரு கட்சி தனித்து ஆட்சியை பிடிக்க 31 எம்எல்ஏக்கள் வேண்டும். அந்த வகையில் பாஜக கூட்டணிக்கு மொத்தம் 53 எம்எல்ஏக்கள் இருந்தன. அதாவது பாஜகவின் 37 எம்எல்ஏக்களுடன் என்பிபி கட்சியின் 9 எம்எல்ஏக்கள், என்பிஎப் கட்சியின் 5 எம்எல்ஏக்கள், நிதிஷ் குமாரின் ஜேடியூவின் ஒரு எம்எல்ஏ, 3 சுயேச்சைகள் என்று மொத்தம் 53 பேரின் ஆதரவு என்பது உள்ளது. எதிர்க்கட்சியாக காங்கிரஸ் கட்சிக்கு 5 எம்எல்ஏக்களும், கேபிஏ கட்சிக்கு 2 எம்எல்ஏக்களும் உள்ளனர்.
தற்போது என்பிபி கட்சி பாஜக கூட்டணிக்கான ஆதரவை வாபஸ் பெற்றுள்ளது. இதன்மூலம் பாஜக கூட்டணி அரசில் 9 எம்எல்ஏக்களின் பலம் குறையும். இருப்பினும் ஆளும் பாஜக கூட்டணி எம்எல்ஏக்களின் எண்ணிக்கை 46 என்ற அளவில் இருக்கும். ஆட்சியை தக்க வைக்க 31எம்எல்ஏக்களின் ஆதரவு தான் வேண்டும் என்ற நிலையில் பாஜகவுக்கே 37 எம்எல்ஏக்கள் உள்ளனர். இதனால் என்பிபி உள்பட எந்த கட்சி ஆதரவை வாபஸ் பெற்றாலும் பாஜகவின் ஆட்சிக்கு பாதிப்பு இருக்காது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications