திருச்சூர் விஷ்ணுமாயா கோயிலில் குஷ்புவிற்கு நாரி பூஜை.. கடவுளின் ஆசி என நெகிழ்ச்சி.. இத்தனை சிறப்பா?
திருச்சூர்: விஷ்ணுமாயா கோயிலில் சிறப்பு பூஜை செய்ய, நடிகை குஷ்பு கட்டளைதாரராக நியமிக்கப்பட்டுள்ளார். இந்த வருடம் நாரி பூஜைக்காக குஷ்புவை தேர்ந்தெடுத்து அவருக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டுள்ளது. இதனை தனது சமூக வலைத்தள பக்கத்தில் நெகிழ்ச்சியுடன் பகிர்ந்துள்ள குஷ்பு அன்பிற்குரியவர்களுக்கு பிரார்த்தனை செய்தேன் என்று குறிப்பிட்டுள்ளார்.
திருச்சூர் மாவட்டத்தில் பெருங்கொட்டுகரா என்ற கிராமத்தில் உள்ளது மிகப்பழமையான தேவஸ்தானமான ஸ்ரீ விஷ்ணுமாயா கோவில். இங்குள்ள விஷ்ணுமாயா, சிவபார்வதியின் குழந்தையாக கருதப்படுகிறார். இந்த ஆலயத்தில் தினமும் மதியம் 12 மணிக்கு விஷ்ணுமாயா நடனம் இருக்கும் என்றும், அச்சமயத்தில் விஷ்ணுமாயா கூறும் வாக்கு பலிக்கும் எனவும் கூறப்படுகிறது.

இங்கு சாதி, மத பேதம் பார்க்கப்படுவதில்லை. எம்மதத்தினரும் இங்கு வந்து வழிபட்டு செல்லலாம். குடும்பத்தில் உள்ள தீர்க்கப்படாத பிரச்சனைகள் மற்றும் எதிரிகள் மற்றும் வேதனைகளுடன் போராடுபவர்கள், இக்கோவிலுக்கு வருகிறார்கள்.
இக்கோவிலில் நாரி பூஜை எனப்படும் விசேஷ பூஜை உண்டு. அதன்படி இக்கோவிலில் இருக்கும் நம்பூதிரிகள் கடவுளின் உத்தரவின் பெயரில் வருடாவருடம் ஒரு பெண்ணைத் தேர்ந்தெடுத்து, அப்பெண்ணிற்கு நாரிபூஜை செய்வார்கள். இது கடவுளின் ஆசியும் அதிர்ஷ்டம் உள்ளவர்களுக்கு மட்டுமே கிடைக்கும் என நம்பப்படுகிறது.
இந்த நிலையில் நடிகையும், தேசிய மகளிர் ஆணைய உறுப்பினரும், பாஜக நிர்வாகியுமான குஷ்புவுக்கு கிடைத்துள்ளது. ஆம்... கோவில் நிர்வாகம் இந்த வருடம் நாரி பூஜைக்கான பெண்ணாக குஷ்புவை தேர்ந்தெடுத்து அவருக்கு பூஜை செய்துள்ளது. இது குறித்து குஷ்புவே தனது ட்விட்டர் பக்கத்தில் இது குறித்து கருத்து தெரிவித்து இருக்கிறார்.
இந்த புகைப்படங்களை அவரது இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்ட குஷ்பு, "கடவுளின் ஆசீர்வாதத்தை பெற்றேன். திருச்சூர் விஷ்ணுமாயா கோயிலில் நாரி பூஜை செய்வதற்கு எனக்கு அழைப்பு வந்தது. இது எனது பாக்கியம் ஆகும். குறிப்பிட்ட நபர்களே, இதற்கு தேர்வு செய்யப்படுகின்றனர், அதுவும் தெய்வமே அந்த நபரை தேர்வு செய்யும் என்பது நம்பிக்கை என்று பதிவிட்டுள்ளார்.
எனக்கு ஆசிர்வாதம் செய்தவர்களுக்கு நன்றியை தெரிவித்து கொள்கிறேன். நமக்கு மேல் ஒரு சக்தி உள்ளது என உணர்ந்து , தினமும் பிரார்த்தனை செய்பவர்களுக்கு பல நல விஷயங்கள் நடக்கும் என்பதை நான் ஆணித்தரமாக நம்புகிறேன். அன்பிற்குரியவர்களுக்கு பிரார்த்தனை செய்தேன். அத்துடன், இந்த உலகம் சிறப்பாகவும், மகிழ்ச்சியாகவும், அமைதியான இடமாகவும் இருக்க பிரார்த்தனை செய்தேன். ஓம் நம சிவாய நமஹ." என தனது கருத்துக்களையும் குறிப்பிட்டுள்ளார்.
ஒவ்வொரு ஆண்டும், இந்த கோயிலில் சிறப்பு பூஜை செய்ய வருடத்திற்கு ஒரு பெண், கட்டளைதாரராக நியமிக்கப்படுவார். அந்தவகையில், இந்தமுறை நடிகை குஷ்புவிற்கு வழங்கப்பட்டுள்ளது. கட்டளைதாரர் என்பவர், அந்த வருடத்திற்கு நடக்கும் பூஜைக்கு தேவையான பொருட் செலவுகளை அவர்கள்தான் ஏற்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.
இங்கு நாரி பூஜை செய்யப்படுவது போல பிரபலமான சக்குளத்துக்காவு பகவதி அம்மன் கோவிலில் செய்யப்படும் நாரி பூஜையும் சிறப்பு வாய்ந்தது. நாரி பூஜை நாளில் இந்தியாவில் உள்ள பிரபலமான பெண்களை விருந்தினராக அழைத்து பூஜை செய்கிறார்கள். அலங்கரித்த இடத்தில் அமரவைத்து மிகவும் பக்தியுடன் பூஜை செய்யப்படும். பெண்களை மரியாதை செய்யுமிடத்தில் தேவதைகள் ஆனந்தமடைகிறார்கள் என்பது நம்பிக்கை. நம்முடைய வீட்டில் பெண்களை சக்தியும் நன்மையும் நிறைந்தவர்களாக நினைக்க வேண்டுமென்று இந்தப் பூஜை நினைவுபடுத்துகிறது. எங்கெல்லாம் பெண்கள் ஆராதிக்கப்படுகிறார்களோ, அங்கெல்லாம் சகல ஐஸ்வரியங்களும் கிடைக்கும் என்பது ஐதீகம். எனவேதான் நாரி பூஜையில் பெண்களுக்கு மரியாதை நடைபெறுகிறது.












Click it and Unblock the Notifications